(Reading time: 10 - 20 minutes)

 மகளே! எங்களுக்கு ஒரு நப்பாசை! இந்த வூட்ல, ஒரு சின்னக் குழந்தை தவழ்ந்தா, அழுதா, சிரிச்சா, விளையாடினா, 'அப்பா'ன்னு என் புள்ள காலை கட்டிண்டா, அவன் வெளியிலே சுத்தறத குறச்சு குறச்சு சுத்தமா வுட்டுடுவாங்கற நம்பிக்கைல, அந்த ஆண்டவனை வேண்டறோம்!

 ஆனா, நீதான் புரிஞ்சிக்காம, ராத்திரி அவன் வூட்டுக்கு வந்தா, மூச்சு விடாம அவன ஏசியே, மணிக்கணக்குல பேசியே, தூங்கவைச்சிடறே! 

 புரிஞ்சிக்க தாயீ! அவனை, ஆசையா கட்டி அணைச்சு கொஞ்சி முத்தம் கொடுத்து, அவனை வேற நிலைக்கு இட்டுக்கிணு போயி ஒரு புள்ளய பெத்துக்கம்மா! 

 இத எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு தெரியாம, பேந்தப் பேந்த விழிச்சு வாயடச்சு நின்னேன், இன்னிக்கி நீ என்ன பேசுன்னு கட்டாயப்படுத்தி பேசவச்சிட்டே! 

 தாயீ! கடவுள் பொம்பளங்கள ஆண்கள விட பலஹீனமா படச்சாலும், ஆண்கள பொட்டிப்பாம்பா அடக்கிவக்கிற மகா சக்திய, பொம்பளங்களுக்கு ஆதிநாளிலே இருந்தே கொடுத்திருக்கான்!

 மோகினி அவதாரம் எடுத்து ராக்ஷசன்களயே அடக்கலியா?

 மன்மதன் விட்ட பாணத்திலே பரமசிவனே மயங்கி பார்வதிய சேத்துக்கலியா?

 விசுவாமித்திரனை மேனகை வசியம் பண்ணலியா

 இன்னியிலிருந்து, நீ அவனை ஒரு வார்த்தைகூட கடுமையா பேசாதே! நல்ல சேலையா கட்டிக்க! அலங்காரம் பண்ணிக்க! வாசன பூ சூட்டிக்க! படுக்கற அறையிலே ஊதுவத்தி, சாம்பிராணி வச்சு, தெரிஞ்ச ஒண்ணு ரெண்டு பாட்ட பாடி, அவனை உன் சேலத்தலப்பில முடிஞ்சு வச்சுக்க!

 வீட்டு வேலய நான் பார்த்துக்கறேன், நீ எப்பவும் அவன்கூடவே இருந்து ஆசையா பேசு! பத்தாவது மாசம், இந்த வூட்ல, 'குவா, குவா' சத்தம் கேக்க வை! செய்வியா, தாயீ?"

 ஆர்.கே.யின் மனைவி, அந்த வீட்டு மருமகள், மாமியாரால் மகளாகவே நேசிக்கப்படுகிற மரகதம், வாழ்க்கையிலே முதல் முறையாக தன்னிடம் உள்ள குறையை உணர்ந்தாள்!

 " அம்மா! நான், உன் ஆசை நிறைவேற, கட்டாயம் முயற்சி பண்றேன்! நான் ஒண்ணும் கைநாட்டு இல்லே! மாமா, கல்யாணத்துக்கு முன்பே, என், பி.ஏ. டிகிரி சர்டிபிகேட்டை பார்த்துட்டுத்தான், தன் மகனுக்குப் பொருத்தமானவளா என்னை ஏத்துக்கிட்டாரு! 

 அம்மா! உன் புள்ள ஒரு காந்தீயவாதி! கதரைத் தவிர வேற துணியை உடுத்தமாட்டார். உண்மையே பேசுவார். மற்றவங்க மனதை புண்படுத்தறாப்பல எதுவும் பேசமாட்டாரு! ஒரு துறவியப்போல, வாழறாரு!

 அந்தமாதிரி ஆசாமியை பெண்டாட்டிதாசனா மாத்தறது ரொம்ப கஷ்டம்! இருந்தாலும் ட்ரை பண்றேன்! கொஞ்சம் முன்னப்பின்ன நடந்துப்பேன், டிரஸ் பண்ணிப்பேன், அவரோட வெளியிலே சுத்துவேன், பொதுநல சேவையிலே ஆர்வமாயிருக்கறாப்பல நடிப்பேன், அவர் என்கிட்ட நெருங்கிவர என்னென்ன செய்யணுமோ, செய்வேன்! நீ என்னை தப்பா நினச்சிக்கப்படாது, சரியா?"

 அம்மாவும் மகளும் அந்த நிமிடமே அந்த வீட்டில் 'குவா குவா' சத்தம் கேட்பதுபோல் உணர்ந்தனர்! அகமகிழ்ந்தனர்!

 நாடகம் அன்றிரவே துவங்கியது. 

ஆர்.கே. வீடு திரும்பியதும், வாசலிலேயே காத்திருந்து புன்சிரிப்புடன் வரவேற்ற மனைவியைக் கண்டு, ஒரு கணம் ஆடிப்பானோர்!

 கணவனின் கையிலிருந்த பெட்டியை கேஸ் கட்டுகளை வாங்கிவைத்துவிட்டு, உடைகளை களைய உதவி செய்து, தாகத்துக்கு லெமன்ஜூஸ் கொடுத்தாள். 

 இதையெல்லாம் மறைவாயிருந்து கவனித்த முதியவள் மகிழ்ந்துபோனாள்!

 கணவனின் முகத்தில் அப்பியிருந்த வியர்வையை ஈரத்துணியால் துடைத்துக்கொண்டே, கன்னத்தில் திடுமென ஒரு 'இச்' வைத்த மனைவியை, அதிசயமாகப் பார்த்தார்.

 " என்ன அப்படி பார்க்கறீங்க? எனக்கு உங்களைவிட்டா அன்பா, பாசமா, பழக யாரிருக்கா? உங்களுக்கும் என்னைத் தவிர, உங்களுக்காகவே வாழறவ வேற யாரிருக்கா?"

 ஆர்.கே. சிரித்துக்கொண்டார்.

அவர் மனதிலே ஒரு கேள்வி!

 மனைவியின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாறுதலுக்கு என்ன காரணம்? இது அசலா, போலியா

 அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், சாப்பிட அமர்ந்தார். தட்டில், அவர் மிகவும் விரும்பும் உருளைக்கிழங்கு பொரியல், முள்ளங்கி சாம்பார், கண்ணில் பட்டன. மிகவும் விரும்பி சாப்பிட்டார்.

 " இன்னிக்கி கோர்ட் கேஸ் அதிகமோ! ரொம்ப களைப்பா இருக்கீங்களே!"

 " கோர்ட் கேஸ் எல்லாம் முடிந்து, வீடு திரும்பறப்ப, வழியிலே, ஒரு வீட்டிலே, புருஷன்-பெண்சாதி சண்டை! அதை தீர்த்துவைக்கிறதிலே, நேரமாயிடுத்து!............."

 " வழக்கமான சண்டையா?வித்தியாசமானதா?"

 " இதிலே பாதி, அதிலே பாதி! ஆரம்பத்திலே வழக்கமானதா இருந்தது, முடிவிலே வித்தியாசமானதா ஆயிடுத்து!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.