(Reading time: 10 - 20 minutes)

 " ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கே, சொல்லுங்க, சொல்லுங்க!"

 "எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்கதான், அவங்க! புருஷன் தன் வீடு, தன் குடும்பம், தன் வயதான தாய், என்று வீட்டுக்குள் முடங்கியிருப்பவன்! மனைவியோ, சமுதாயநலனில் அக்கறை மிக்கவள்! அதிலும், பெண்களுக்கு தொடர்ந்து யுகங்களாக இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தெருத் தெருவாக அலைபவள். இரவு வீட்டுக்கு தாமதமாக களைப்புடன் திரும்பி, படுக்கையில் தொப்பென விழுந்து தூங்கிப்போய்விடுவாள்.

 கணவனுக்கும் அவன் தாய்க்கும், இவள் இப்படி நாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டு, வீட்டை மறந்தால், வீட்டிலே குழந்தை சத்தம் எப்போது கேட்கும்? என்ற கவலை!

 மனைவியின் வாதமோ, இப்படி எல்லோரும் தங்கள் வீட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டு வாழ்வதால்தான், பல வருஷங்களாக பார்லிமெண்டில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாமல், எல்லா அரசியல் கட்சியிலுள்ள ஆண்களும் தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெற்று வெற்றியடைந்துவிட்டு, ஏமாற்றுகிறார்கள். இந்த தலைமுறைப் பெண்கள் தங்கள் சொந்த வாழ்வை தியாகம் செய்தால்தான் அடுத்த தலைமுறை பெண்களாவது உரிமைகளுடன் முன்னேறி வாழ்வார்கள்!

 கணவனுக்கும் அவன் தாய்க்கும் என்ன பயம்னா, மனைவியை ஓரளவுக்குமேல் வற்புறுத்தினால், அவள் விவாகரத்துக்கே தயாராகிவிடுவாளோ என்பது!..........."

 " ரொம்ப நெரடலான சண்டைதான். எப்படி நீங்க, ரெண்டு பேரையும் சமாதானம் செய்துவைத்தீங்க? நீங்க ஒரு காந்தீயவாதி ஆச்சே, பெண் விடுதலைக்கு ஆதரவா தீர்ப்பு சொல்லியிருப்பீங்களே?"

 " இந்த சண்டையை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கிறதா நினைக்கக்கூடாது! குடும்ப நலனா, சமூக நலனா? ன்னு பார்க்கணும்.

 நாடுங்கறது, வானத்திலிருந்து யாரோ தொப்புனு கீழே போட்ட பொருளல்ல, பல குடும்பங்கள் சேர்ந்தது!

 அதேபோல, குடும்பம் என்பது நாட்டின் ஒரு அங்கம்! குடும்பத்தை சேர்ந்த நாலுபேர் மட்டும் வேற எந்த உதவியும் இல்லாம வாழ்ந்துவிட முடியுமா?

 சாலைகள் வேண்டாமா, பள்ளிக்கூடம் வேண்டாமா, போக்குவரத்து வசதி தேவையில்லையா, குடிநீர், மின்சாரம், தபால் தொடர்பு இப்படி எத்தனையோ பொதுநலன்கள் இல்லாம, ஒரு குடும்பம் வாழமுடியாது!

 அதனாலே, நாட்டையும் குடும்பத்தையும் விரோதிகளாகப் பார்க்காமல், தண்டவாளத்தின் இரு பக்கங்களாக இணைகோடுகளாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக பணியாற்றுகிற சக்திகளாகப் பார்க்கவேண்டும்........"

 " அதுசரி, என்ன சொல்லி சண்டையை சமாதானமா மாற்றினீங்க?"

 தன் மனதில் ஏதேதோ கற்பனைகளுடன், மனைவி இந்தக் கேள்வியை கேட்கிறாள் என்பதோ, இருவரின் உரையாடலை துவக்கத்திலிருந்து தன் தாயும் கேட்கிறாள் என்பதோ, தெரியாமல், ஆர்.கே. சாப்பிட்டுக்கொண்டே, நிதானமாகப் பேசினார்.

 " எனக்கு எல்லா விஷயங்களிலும் கைகொடுப்பது, காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறுதான். அந்தப் பெண்ணிடம் விளக்கினேன், காந்தியடிகள் இந்திய நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்தவர். அவர் வாழ்க்கையே போராட்டம்தான். ஆனாலும், அவருக்கும் குடும்பம் இருந்தது, மனைவி இருந்தாள், பிள்ளைகளும் பிறந்து அவர்களுடன் வாழ்ந்தனர்."

 இதைச் சொன்னவுடன், அந்த சமூக சேவகி புரிந்துகொண்டாள். கணவனும்தான்! 

 " காதலுக்கு வழி வைத்து, நாட்டுக்கும் சேவை செய்ய, பாதையொன்று கண்டறிவோம், இதிலென்ன குற்றம்?" என்று பாரதிதாசன் பாணியில் ஒரு பாட்டைச் சொல்லி முடித்து வைத்தேன்.

 அடுத்த வினாடி, அவர் கன்னங்களில், ஒருபுறம் மனைவியும், மறுபுறம் தாயும் முத்தமிட்டு கட்டியணைத்தனர்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.