(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - எரியும் அடுப்பிலிருந்து நெருப்பில்! - ரவை

maid

சந்த மாளிகை வாட்ச்மென் விக்ரம்சிங், மீசையை முறுக்கிக்கொண்டு நிற்பதைப் பார்த்து, ஒருகணம் தயங்கினாள், எச்சுமி!

 எதேச்சையாக அவனே, அவள் தன்னை பார்த்துக்கொண்டு நிற்பதை கவனித்து, " என்ன வேணும்?" எனக் கேட்டான்.

 " வேலை......"

 " வேலை வேணுமா? இந்தா, துட்டு! அந்த டீக்கடையிலே போய், எனக்கு ஒரு டீ வாங்கிவா!"

 அவளிடம் துட்டை கொடுத்தவாறே, " நீ டீ குடிச்சிட்டியா?" என்று வினவினான்.

 'இல்லை' என தலையாட்டினாள், எச்சுமி!

 " இந்தா! நீயும் ஒரு டீ குடி!" என்று துட்டு கொடுத்தான்.

 எச்சுமி உடனே கடைக்குப் போய், இரண்டு டீ வாங்கி, எடுத்து வந்தாள்.

 " உனக்கு மூளையிருக்கா? உன் டீயை சூடா கடையிலேயே குந்திக்கிணு குடிச்சிட்டு வராம, இங்கே எடுத்துகிட்டு வரியே, சூடு போயிடாதா?

 " நீ குடிக்காம, நான் குடிக்கறது, தப்பில்லே?"

 " ஏம்மே! நீ ஊருக்கு புதுசா? வெகுளியாயிருக்கே!"

 எச்சுமி தலையசைத்தாள்.

" சரி, டீயை குடி! நானும் குடிக்கிறேன்!"

 அவன் குடித்து முடித்ததும், காலி கிளாஸை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, கடையில் கொடுத்துவிட்டு திரும்பினாள்.

 " உன் பேரு?"

 " எச்சுமி!"

 " லச்சுமியா? எச்சுமியா?"

 " என்னை ஊரிலே எல்லாரும் எச்சுமின்னுதான் கூப்பிடுவாங்க!"

 "சரி, என்ன வேலை செய்வே?"

 " வீட்டுவேலைதான்......."

 " இந்த மாளிகையிலே இருபது ஃபிளாட் இருக்கு, அதிலே நாலு பூட்டியிருக்கு, மீதி பதினாறிலே, அஞ்சு பொம்பளைங்க பங்கு போட்டுக்கிட்டு வேலை பார்க்கறாங்க........உனக்கு வேலை கிடைக்கும்னு எனக்கு தோணலே..........."

 அந்தச் சமயம், ஒருவர் வெளியிலிருந்து உள்ளே நுழைந்தார்.

உடனே, வாட்ச்மென் விக்ரம்சிங் அவருக்கு ஒரு மிலிடரி சல்யூட் அடித்தான். அவரும் சிரித்துக்கொண்டே, உள்ளே போய்விட்டார்!

 " எச்சுமி! நீ வந்த வேளை ராசியான வேளைன்னு தோணுது, ஏன்னா, இப்ப உள்ளே போனாரே, அவரு மிலிடரியிலே வேலை பார்த்துட்டு வந்தவரு, அவர் கல்யாணம் பண்ணிக்கலே, தனியாத்தான் இருக்காரு! அவர் வீட்லே, இருக்கிற அஞ்சு வேலைக்கார பொம்பளையும் வேலை பார்க்கமாட்டேங்கறாங்க, ஏன்னா, அவரு ரொம்ப கறார் பேர்வழி! நல்லா வேலை வாங்கிடுவாரு, இந்த பொம்பளங்களோ, டகல்பாஜிங்க! உனக்கு சம்மதம்னா, அவரை கேட்டுப் பார்க்கலாம்..........."

 " மாத்து சேலைகூட இல்லாம, ஊரைவிட்டு ஓடியாந்துட்டேன், எனக்கு உயிர் வாழவே வேலை செஞ்சாகணும், ஐயா! எனக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுய்யா!"

 " வா, அவர் வீட்டுக்கு போவோம்!"

 "அவர் வீடு மூன்றாவது மாடியில் இருந்தது, நல்லவேளை லிஃப்ட் இருக்கு, இல்லேன்னா படியேறியே, முட்டி தேஞ்சிடும்........" என்று பேசிக்கொண்டே, வாட்ச்மென் அவளை அழைத்துச் சென்றான்.

 " வாய்யா, விக்ரம்! நீ பொறந்து வளர்ந்தது எல்லாம் வட சென்னை, உன் பெயரிலே எப்படிய்யா சிங் ஒட்டிக்கிச்சு?"

 வாட்ச்மென் தலையை குனிந்து சிரித்துக்கொண்டான்.

 " சரி, சொல்லு! யாரிவங்க?"

 " சார்! பாவம் சார், இந்த பொண்ணு! கட்டின சேலையோட, ஊரைவிட்டு ஓடிவந்திடிச்சி! நீங்க வேலை போட்டு கொடுத்தா, பொழச்சிக்கும், இல்லேன்னா செத்துரும், சார்!"

 " யோவ்! நீ ரொம்ப கெட்டிக்காரன்யா! இவளுக்கு நான் வேலை தராட்டி, செத்துருவாளா? உலகத்திலே வேற யாருமே இவளுக்கு வேலை தரமாட்டாங்களா? அப்படீன்னா, நான்தான் ஏமாந்தவனா?"

 வாய்விட்டுச் சிரித்தார், மிலிடிரி!

" ஒரு பேச்சுக்கு சொன்னேன், சார்! ஆனா, இதுகிட்ட சொல்லிட்டேன், ஒழுங்கா வேலை செய்யலேன்னா, உன்னை சுட்டுடுவாரு, அவரு துப்பாக்கி வச்சிருக்காருன்னு!"

 மறுபடியும் மிலிடரி சிரித்தார்!

" சரி, நீ போ! நான் பேசிக்கிறேன்." என்று விக்ரம் சிங் என்ற விக்ரமை விரட்டினார்.

 அவளை ஏற இறங்கப் பார்த்தார். அவள் சோர்வாக இருந்ததைப் பார்த்து, "ஏதாவது சாப்பிடறயா?"ன்னு விசாரித்தார்.

 அவளுக்கு என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.