(Reading time: 10 - 20 minutes)

 மிலிடரி உள்ளே போய், இரண்டு பன், ஜாம், வெண்ணெய் எடுத்து வந்து டைனிங் டேபிள்மீது வைத்துவிட்டு, " இந்தாம்மா! முதல்லே, இதை சாப்பிடு, பார்த்தா, சாப்பிட்டு நாலு நாள் ஆயிருக்கும்போலிருக்கு! நான் அதற்குள் குளித்துவிட்டு வரேன்......."

 அவர் போனதும், கண்களிலிருந்து பெருகிய கண்ணீரை துடைத்துக்கொண்டு, பன் இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, வராந்தாவில், தரையில் அமர்ந்து மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 இதை அந்த மாளிகையில் வேலை செய்கிற ஒரு பொம்பளை கவனித்துக்கொண்டே போனவள், திரும்பி வந்து, " ஏமாந்துராதே!" என்று காதருகே வந்து சொல்லிவிட்டுப் போனாள்!

 மிலிடரி, குளித்துவிட்டு வெளியே வரும் சத்தம் கேட்டு, சேலையில் கையை துடைத்துக்கொண்டு, அடக்கமாக எழுந்து ஓரமாக நின்றாள்.

 வெளியே வந்தவர், இவளை கண்டுகொள்ளாமலே, நேரே பூஜையறைக்குள் புகுந்தார்.

 முதலில், திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார். கைரங்கூப்பி, கண்களை மூடி, சில வினாடிகள் தியானித்துவிட்டு, பிறகு வாய்விட்டு, 'ஓம் சக்தி ஓம், பராசக்தி! ஓம் சக்தி ஓம்......' என்று கணபதி, முருகன், சரஸ்வதி, கிருஷ்ணன், லட்சுமி என எல்லா தெய்வங்களின் மீதும் பாடிவிட்டு, தரையில் விழுந்து வணங்கிவிட்டு எழுந்து, வெளியே வந்தார்.

 ஓரமாக அவள் நிற்பதை பார்த்து, " இப்படி வந்து உட்காரும்மா! மரியாதைங்கறது, வெளியிலே இல்லை, மனசுக்குள்ளார இருக்கணும். சரி, உன் கதையை சொல்லு! நீ யாரு, எந்த ஊரு, உன் அப்பா என்ன வேலை பார்க்கறாரு, கல்யாணமாயிடுச்சா? எல்லாத்தியும் பொய் கலப்படம் இல்லாம சொல்லு! நீ உண்மையை சொன்னேன்னா, உன்னை நான் காப்பாத்துவேன், பொய் சொன்னேன்னா, போலீஸிலே பிடிச்சுக் கொடுத்துடுவேன், சொல்லு!"

 " ஐயா! என் பேரு, எச்சுமி! என் வயசு, என் அப்பா, அம்மா யாரு, என்னை இத்தினி நாள் வளத்தவரு பேரு, எதுவும் தெரியாது, இப்ப இருக்கிற ஊர் பேரும் தெரியாது, ஒரு விஷயம்தான் தெரியும், நான் இருந்த ஊர் பேரு கருங்குழி கிராமன்னு பேசிப்பாங்க! ..........."

 மிலிடரிக்கு அவள் சொல்வதை நம்புவதா, இல்லையா என்று புரியவில்லை! இப்படிக்கூட இருக்குமா இருபத்தோராம் நூற்றாண்டில் என அதிசயித்தார்!

 " பள்ளிக்கூடம் போயிருக்கியா?"

 " இல்லீங்க........"

 " நீ வளர்ந்த வீட்டிலே வேற யார் யார் இருந்தாங்க?"

 " தல நரச்ச ஒரு அம்மா, நாலைஞ்சு ஆம்பளை அந்த அம்மா சொல்ற வேலையை செய்யறதுக்கு, என்னைப்போல பொண்ணுங்க பத்துப்பேரு......."

 " ஓ! அப்படியா! நீங்க பொண்ணுங்க பத்து பேரு என்ன வேலை செய்வீங்க?"

 " வீட்டுவேலை, சமையலு, அம்மாவுக்கு காலை பிடிச்சு விடறது, ராத்திரியிலே எங்கள எங்கேயோ கூட்டிக்கிட்டு போவாங்க, அங்கே வேத்து ஆம்பளங்களோட படுத்துக்க கட்டாயப்படுத்துவாங்க, மாட்டேன்னா சூடு வப்பாங்க........"

 அழுதுகொண்டே, அவள் தன் கை, கால், இடுப்பு, முதுகு, கன்னங்களில் இருந்த காயங்களை காட்டினாள்.

 மிலிடரிக்கு இப்போதுதான் அவள் சொல்வதை நம்பலாமோன்னு தோன்றியது!

 இன்னமுமா கொத்தடிமை முறை தமிழ்நாட்டில் இருக்கிறது! அடப் பாவிங்களா! நகரத்தில் வாழ்கிறவர்களுக்கு, தெரியாமல் கிராமங்களில் இன்னமும் அக்கிரமங்கள் நடந்துகொண்டிருந்துதான் இருக்கின்றன!

 " எப்படி நீ தப்பிச்சுவந்தே?"

 " வழக்கம்போல, நேத்தும் என்னை எங்கேயோ இழுத்துண்டு போனாங்க, அந்த ஆம்பளை குடிச்சிட்டு மயங்கி விழுந்துட்டாரு, இருட்டிலே வெளியிலே தப்பிச்சு ஓடிவந்து ஒரு டீக்கடை எதிர்ல நின்னுகிட்டிருந்த லாரிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டேன், அந்த லாரி பொழுது விடிஞ்சி இந்த ஊரில நிறுத்தினான் எதுக்கோ, நான் லாரியிலிருந்து குதிச்சு ஓடிவந்தேன், இந்த வீட்டு வாசல்லே நின்னேன்......"

 மிலிடரிக்கு அவள்மீது பரிதாபம் ஏற்பட்டது.

 " சரி! உனக்கு ஒரு நல்ல வழி பார்த்துத் தர வரையிலும், இங்கேயே இரு! இந்த வீட்டு வேலையை, சமையலை, துணி துவைக்கிறதை, செஞ்சிகிட்டு வீட்டுக்குள்ளேயே இரு, வெளியிலே போயிடாதே! திரும்பவும் யாராவது உன்னை பிடிச்சிகிட்டு போயிடுவாங்க! சரியா?"

 எச்சுமி அவர் காலில் விழுந்தாள்.

அன்றிலிருந்து அவள் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

 மிலிடரி காலையில் எழுந்து வாக்கிங் போனால், திரும்பிவர ஒரு மணி நேரமாகும். அந்த நேரத்தில், வாட்ச்மென் விக்ரம் சிங் அவளிடம் பேச்சுக் கொடுப்பான்.

 " இப்ப சந்தோஷமா, எச்சுமி?"

 " ஆமாம்யா, கடவுள்போல, நீதான்யா என்னை இங்க சேர்த்து காப்பாத்தியிருக்கே! நீயும் உன் புள்ளகுட்டியும் நல்லாயிருக்கணும்யா!"

 " எனக்கு இன்னும் கண்ணாலமே ஆகலே, புள்ளயாவது, குட்டியாவது!"

 " நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கய்யா!"

 " பாத்துக்கிட்டிருக்கேன், என் மீசையை பாத்து பயப்படறாங்கபோல!"

 " உனக்கு மீசை நல்லாத்தான்யா இருக்கு............."

 " அப்ப நீ என்னை கட்டிக்கிறியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.