(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - நிம்மதியா தூங்குங்க! - ரவை

phoneMan

" லைவா! மோசம் போய்ட்டோம்! வீராசாமியை கைது செய்துட்டாங்க, வீடியோவெல்லாம் பறிச்சிக்கிட்டாங்க!"

 வேலாயுதம் ஓடிவந்து கூறிய செய்தி கேட்ட, தலைவர் துரியோதனர் ஒருகணம் ஆடிப்போனாலும், சமாளித்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே, " அப்படியா! நான் பார்த்துக்கிறேன். நீ போ! அப்பப்ப, நடக்கிறதை வந்து சொல்லு!" என்று வேலாயுத்த்தை விரட்டினார்!

 அவன் நகர்ந்ததும், கைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டார்.

 " என்ன நடக்குது? தேர்தல்லே ஜெயிக்கணுமா, வேண்டாமா?"

 " அந்த முட்டாப்பய, வீடியோவை எவன்கிட்டயோ கொடுத்திருக்கிறான், அவன் யூட்யூபிலே போட்டு மானத்தை வாங்கிட்டான். நாடே கொந்தளிக்குது. மத்த கட்சிக்காரங்களும் அதிலே குளிர் காயறாங்க! என்னை என்ன பண்ணச் சொல்றே? ஆக்‌ஷன் எடுக்கலேன்னா, கோர்ட்டுக்குப் போய் ஆர்டர் வாங்கிடுவாங்க!"

 " சரி சரி, நம்ம பசங்களை கஷ்டடியிலே இருக்கறப்ப, அவங்களை போலீஸ் சாஃப்டா நடத்தச் சொல்லு! சீக்கிரமா, ஜனங்க இதை மறக்கறாப்பல, வேற பிரச்னையை கிளப்பிவிட்டு, இதை கிடப்பிலே போடு."

 தலைவர் டி.வி.யை ஆன் பண்ணி பார்த்தார். எல்லா சேனல்லியும், போலீஸ் அவருடைய கையாளுங்க நாலுபேரையும் போலீஸ் காவல்லே, அடிச்சு உதைச்சு விசாரிக்கிறதையும், நாடு முழுவதிலும் பெண்களும் மாணவர்களும் மத்த கட்சிக்காரங்களும் ஆர்ப்பாட்டம் செய்யறதையும் காட்டினார்கள்.

 தலைவர் யாரையோ கைபேசியில் அழைத்தார்.

 " நாளைக்கு நம்ம தலைமையிலே ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணு. நம்ம ஆளுங்க எல்லாரையும் கலந்துக்கச் சொல்லு, பிரஸ்காரங்களை காசு கொடுத்து வரச்சொல்லி நிறைய போட்டோ எடுக்கச் சொல்லி எல்லா சேனல்லியும் காட்டச் சொல்லு, நாள் முழுதும்! சரியா?"

 அவருடைய திட்டம், தானும் தன் சகாக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டால், அதை எல்லா சேனலிலும் காட்டிவிட்டால், தன்னையும் தன் கூட்டத்தையும் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பதே!

 " தலைவா! மாட்டிக்கிட்ட நாலு பசங்க, அடி தாங்காம, நம்மை காட்டிக்கொடுத்திட்டா...........?"

 " கோர்ட்டிலே அவங்களை மாத்தி சொல்லிடச் செய்யலாம், போலீஸ் அடிச்சு உதைச்சு கையெழுத்து வாங்கினாங்கன்னு சொன்னா, போச்சு!"

 தலைவருக்கு, கைபேசியில் அழைப்பு வந்தது.

 " எலக்‌ஷன் நெருங்கறதுனாலே, இந்த பிரச்னையை ஆறப்போடறதுக்காக, கேஸை சி.பி.ஐ.க்கு மாத்திட்டோம். நிம்மதியா இருங்க!"

 " ஒரு நாலைந்து வருஷம் இப்படியே தள்ளிட்டா, அப்புறம் பசங்க கதையை, நாமே ஆளை வைச்சு முடிச்சிடுவோம்..........."

 " தலைவா! உன்னை எவனும் ஒண்ணும் பண்ணமுடியாது, தலைவா!"

 " சரி, நான் தண்ணி அடிச்சிட்டு தூங்கப்போறேன். நாளை காலைல வந்து பார்!"

 வீட்டின் கதவை தாள் போட்டுவிட்டு, குடிக்கத் துவங்கினார். அவ்வளவுதான் அவருக்கு தெரியும்!

 மறுநாள் காலையில் அவர் படுக்கையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

 ஊரே கூடியது! போட்டோக்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்டன. கூட்டாளிகளுக்கு தலைவரை யார் சுட்டிருப்பார்கள் என்று ஊகிக்க முடியவில்லை!

 அதே சமயம், போலீஸ் கமிஷனர் முன்னிலையில், தலைவர் துர்யோதனரின் மனைவி, தான் அவரை சுட்டதாக வாக்குமூலம் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தாள்.

 " ஜனநாயகத்திலே இருக்கிற ஓட்டைகளை பயன்படுத்திக்கொண்டு பெண்களை கொடுமைப்படுத்தும் ரௌடிக்கும்பலை அறவே ஒழிப்பதற்கு, எனக்கு வேறுவழி தெரியவில்லை."

என்று காத்திருந்த நிருபர்களிடம் பேட்டியளித்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.