(Reading time: 12 - 23 minutes)

சிறுகதை - நீயில்லாமல் நானும், நானில்லை! - ரவை

daughter

மையலறையில் மும்முரமாக பணியாற்றிக்கொண்டிருந்த ராதாவின் முதுகில், ஏதோ ஒன்று 'பொத்'தென வேகமாக அடித்துவிட்டு கீழே விழுந்தது!

 திடுக்கிட்டு, ராதா திரும்பிப் பார்த்தாள். 

 மிகுந்த கோபத்துடன், கண்கள் சிவக்க, 'பிடி சாபம்' சாமியார் போஸ் கொடுத்தவாறு, நின்றுகொண்டிருந்தான் கணவன் காந்தி! கீழே கிடந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள், அந்த வார 'தாமரை' இதழ்!

 அதன் முன் அட்டையில், ஒரு பெண்ணின் புகைப்படம்!

 " அட! நம்ம அனுக்குட்டி! ரொம்ப அழகாயிருக்காளே!"

 " ஃபிரேம் போட்டு நடுஹாலில் மாட்டி ரசித்துக்கோ! இல்லேன்னா, பூஜையறையிலே மாட்டி அர்ச்சனை பண்ணு! த்தூ! வெட்கமாயில்லே? வயசுவந்த பெண்ணோட புகைப்படம் இப்படி கடைக் கடையா தொங்கவிட்டு, கண்டவனெல்லாம் பார்த்து கமெண்ட் அடிச்சா, எவனாவது அவளை கட்டிக்குவானா?"

 "ப்பூ! இவ்வளவுதானா! என்னமோ ஏதோ விபரீதமா ஆயிட்டாப்பலே, கண்ணை உருட்டிண்டு, முனிவர் சாபம் கொடுக்கறாமாதிரி, போஸ் கொடுக்கறே! போய் வேலையை பாரு!

 பெயர்தான் காந்தியே தவிர, பொறுமைக்கும் அவனுக்கும் தொலுதூரம்!

 " 'நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை'ன்னு சரியாத்தான் சொல்லியிருக்காங்க! தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பத்தடி பாயுமாம்! உன்னைப்போலத் தானே, இருப்பா உன் பொண்ணு அனுஷா! அட்டையைப் பார்த்தே மகிழ்ந்து போறியே, உள்ளே புரட்டிப் பார், அந்தக் கண்றாவியை! உன் பொண்ணு போட்டோவை போட்டு, அவள் எழுதப் போகிற புதிய தொடர்கதை 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!'க்கு முன்னுரை வெளிவந்திருக்கு, அதையும் படி! அந்த திகுதிகுன்னு எரியற அடுப்பிலேயே ரெண்டுபேரும் தீக்குளிப்போம்!"

 ராதா அவனுடைய கோபத்தை சட்டையே செய்யாமல், அடுப்பை அணைத்துவிட்டு, அருகிலிருந்த டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து, புத்தகத்தை கையில் எடுத்து, முகப்பிலிருந்த அனுக்குட்டியின் புகைப்படத்துக்கு ஒரு 'இச்' தந்துவிட்டு, உள்ளே புரட்டி, காந்தி குறிப்பிட்ட முன்னுரையை படித்தாள்.

 " அனுக்குட்டிக்கு இவ்வளவு திறமையா! எவ்வளவு அழகா எழுதியிருக்கா! உனக்கு நல்லதை ரசிக்கவே தெரியாதா?"

 " நீயும் நானும் எழுத்தை ரசிக்கிறோம்டீ, ஆனா தெருவிலே போற காலிப்பசங்க, எனக்கெதிரிலேயே, அட்டையிலே இருக்கிற அனு போட்டோக்கு முத்தம் கொடுத்துட்டு, 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' ன்னு ராகம் போட்டு ஆலாபனை பண்றாண்டி! அவனை ஏதாவது கேட்டா, புத்தகத்திலே இருக்கிறதை படிக்கிறேம்பாம், அவமானம், அவமானம்!"

 ராதா வாய்விட்டு சிரித்தாள். 

" இப்படித்தான் எதையாவது சொல்லி, பெண்கள் முன்னுக்கு வர்றதை ஆண்கள் தடுக்கிறாங்க! ரோடிலே போறவன் காலித்தனத்துக்கு பயந்தால், பெண் மட்டுமில்லே, ஆண்கள்கூட நடமாடமுடியாது! இதுக்குன்னே திரியறானுவ, ரௌடிங்க! நம்ம அனுவோட வெளியிலே, பட்டிமன்றம், சங்கீதசபா, நாடகம் போனா, அவளுடைய ரசிகர்கள் அவளைச் சுற்றி நின்னு ஆடோகிராப் வாங்கறதும், பாராட்டி பேசறதும் நினைச்சுப் பாரு! பெருமையாயில்லே? எப்பவும், நல்லதை பார்க்க பழகிக்கோ! மற்றதை அலட்சியப்படுத்து! நீ தலைகீழா, கெட்டதை பார்த்து பழகிட்டே!அதான் பயப்படறே!"

 " ராதா! உன் பெண்கிட்ட ஆடோகிராப் வாங்கறவங்க, அவ கழுத்திலே தாலி கட்டமுடியுமா? அந்த தகுதியுள்ளவங்க வாழற உலகம் வேற!"

 "இன்னமும் நீ புராண காலத்திலேயே இருக்கே! பெண் பார்க்கறது, பாக்குவெற்றிலை மாற்றுவது, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் போய், ஆணும் பெண்ணும் அவங்களே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, பேசி, பழகி, முடிவு பண்ணி, நமக்கு மரியாதைக்காக, கல்யாணம் செய்துவைக்கிற பெருமையை மட்டும் கொடுக்கிறாங்க!"

 " அப்படி நடக்கிற கல்யாணங்களிலே பாதிக்கு மேலே, டைவர்ஸிலேதான் முடியுது......"

 " அது பரவாயில்லை, பெரியவங்க பார்த்து வைக்கிற கல்யாணங்களிலே, மணமகளை வரதட்சிணைக்காக நெருப்பிலே தள்ளிடறாங்களே......"

 " இப்ப நீ என்னதான் சொல்லவறே, ராதா? அவ போக்கிலே அவளை விடச்சொல்றியா?"

 " அவ நன்னா படிச்சிருக்கா, உலக அறிவும் இருக்கு, நாலு பெரிய மனிதர்களோட பழகறா, பிரமாதமா கதை எழுதறா, அவளுடைய எழுத்து விசிறிகள் ஆயிரக்கணக்கானவங்க இருக்காங்க,தெரியுமோ?"

 " ராதா! உன் துணிச்சல், எனக்கில்லே..........."

 " ஏன்னா, உன்னை அப்படி வளர்த்துட்டாங்க, உன்னை பெற்றவங்க! பயம், தாழ்வு மனப்பான்மை, தீயவர்களைக் கண்டு ஓடி ஒளியறது, நல்லதை எடுத்துச் சொல்ல தயங்கறது, இந்தமாதிரி பிற்போக்கு குணங்கள் உன்னை அடிமையாக்கிடுச்சி, என்னை வளர்த்தவங்க, நேர்மாறாக, பாரதி கண்ட கண்ணம்மாவாக வளர்த்தாங்க! அந்த துணிவும் அறிவும் கைகொடுத்ததனால்தான், உங்களைப்போல ஒரு நல்லவரை நானே தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துக்க முடிந்தது........."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.