(Reading time: 12 - 23 minutes)

 " இருங்கநான் இன்னும் முடிக்கலே, நம்ம பங்களா வாசலிலே, மூணு கார், ஆளுக்கு ஒரு கார், அதேபோல ஆளுக்கு ஒரு டூவீலர், மூணு காருக்கும் யூனிஃபாரம் போட்ட மூணு டிரைவர், இந்த ஊரிலே என் பெயரிலே மட்டும், மூணு பங்களா, ஒரு ரிசார்ட், ..............."

 " அனுக்கண்ணு! இதெல்லாம் தெரிஞ்சதுதானே.........."

 " ஆங்! இதெல்லாம் தெரியும்! ஆனா, உங்க ஒன்லி டாட்டர் என்னென்ன படிச்சு என்னென்னபட்டம் வாங்கிருக்கான்னு தெரியுமா? அவளுடைய கதைகள் இதுவரையில் எத்தனை புத்தக வடிவத்திலே வெளியாயிருக்கு, எத்தனை வார இதழ்களிலே தொடர்கதைகள் வந்துகொண்டிருக்கு, எந்தெந்த மன்றங்கள் எனக்கு, இல்லை இல்லை, உங்க ஒன்லி டாட்டருக்கு, என்னென்ன பட்டம் கொடுத்திருக்காங்கன்னு தெரியுமா

 தெரியாது, ஏன்னா நீங்க ரெண்டுபேரும் பிரபலமான ஆர்க்கிடெக்ட்! உங்க கைவண்ணமில்லாத அடுக்குமாடி கட்டிடங்களே, இந்த ஊரிலே கிடையாது, பணம், பணம், பணம்! வருமானவரி ரெய்ட் நடத்தற அளவுக்கு சம்பாதிக்கிறீங்க, இன்னமும் ஓயாம சம்பாதிக்கிறீங்க, யாருக்காக? உங்க ஒன்லி டாட்டருக்காகத் தானே? அவ இருக்காளா, செத்தாளான்னு ஒருநாளாவது கவனிச்சதுண்டாநான் வாய்விட்டு கேட்டேன்னா, அதுக்கொரு ஆளை வேலைக்கு வைப்பீங்களே தவிர, நீங்க செய்யமாட்டீங்க, ஏன்னா,உங்களுக்கு வாழ்க்கைங்கறது, வாழற நோக்கமே, சம்பாதிப்பதும், பிரபல ஆர்க்கிடெக்ட்னு புகழ் வாங்கறதும்தான்! எல்லாத்தையும் விடுங்க, உங்க ஒன்லி டாட்டருக்கு என்ன வயசு ஞாபகமிருக்கா? என் வயசுக்கு மற்ற பெண்களுக்கு கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்தாச்சு தெரியுமா? உங்கபேரிலே தப்பில்லே, உங்களுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லே!"

 இருவரும் அனுவின் காலில் விழுந்து கட்டிக்கொண்டு அழுதனர். செய்தது, எத்தனை பெரிய தவறு என்பதை புரிந்துகொண்டதும், இதயம் சுக்குநூறாக வெடித்தது. எப்படி இத்தனை அரக்கத்தனமாக நடந்துகொண்டோம் என அவர்களே திகைத்தனர்!

 " அப்பா! நீங்க இன்று காலையிலே, என் போட்டோ மேலட்டையிலே போட்டிருக்கிறதைப் பார்த்துட்டு, அந்த இதழை வாங்கிண்டு போனதா, என் ஃபேன்ஒருத்தன் பார்த்துட்டு எனக்கு சொல்றான், எனக்கு கேவலமாயிருந்தது, அந்த இதழ் இந்த வீட்டிலே பத்து காபி கிடக்கு, காட்டட்டுமா? ஆனா உங்க கண்ணிலே படலே, ஏன்னா உங்க கவனமெல்லாம் வேறெங்கேயோ! 

 அப்பா! இதழிலே வந்திருக்கிற கதையின் தலைப்பை பார்த்து முகத்தை சுளித்திருப்பியே, ஆமாம், 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல'ன்னு காதல்ரசம் சொட்டுகிற தலைப்புத்தான்! 

 மனித சுபாவமே, இருக்கிறதை நினைத்து சந்தோஷப்படறதைவிட, இல்லாத ஒன்றுக்காக ஏங்குவதுதானே! காதல்னு சொன்னவுடனே பாலுணர்ச்சியும் உடற்கவர்ச்சியும் உங்களுக்கு ஞாபகம் வருமே தவிர, அன்புக்கு உள்ள பல பரிமாணங்களிலே காதல் ஒண்ணு, பாசம் இன்னொன்று, கருணை, பரிதாபம், இரக்கம் இப்படி பல விதங்களிலே அன்பு வெளிப்படுகிறது. எனக்கு கிடைக்காத பாசத்தை, அன்பினுடைய இன்னொரு வடிவமான காதல்லே தேடறேன், எல்லாம் கற்பனையிலேதான்! ஏன்னு சொல்லுங்க, பார்ப்போம்?"

 இருவரும் பதில் தெரியாமல் விழித்தனர்.

 " அதுவும் உங்களாலேதான்! எனக்கு அழகில்லையா? படிப்பில்லையா? நாகரிகம் இல்லையா? எல்லாம் இருந்தும், அவைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, முந்திரிக்கொட்டைமாதிரிநான் உங்க மகள் என்கிற அந்தஸ்து! பகட்டு!! கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணு! என்மீது ஆசையிருந்தாலும், என்னை நெருங்கவிடாமல் இளைஞர்களை தடுக்கிறது என் அந்தஸ்தும், செல்வமும்!

 வீட்டிலேயும் என்னை கவனிப்பாரில்லை, வெளியிலேயும் என்னை நெருங்கி வந்து பழக எவருமில்லை, என் ஒரே அடைக்கலம், எழுத்து! என் இதயத்து வேதனைகளே, சொற்களாக, கதைகளாக, தொடர்களாக, புதினங்களாக உருவாகின்றன.

 அம்மா! உனக்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும், அவசரமாக இருந்தாலும், தூங்கிக்கொண்டிருக்கும் என் நெற்றியில், 'என் அனுக்கண்ணு'ன்னு வாயினிக்க அழைத்து முத்தமிடாமல் போனதுண்டா? அதைவிட, ஒரு முறையாவது, ஒரே ஒரு முறையாவது, அனுக்கண்ணுன்னு கூப்பிடாமல் அனுன்னு அழைத்ததுண்டா? உன் நெஞ்சு முழுக்க நான் நிறைந்திருக்கிறேன், அதேபோலத்தான், அப்பாவும்! ஒரு முறைகூட 'அனு'ன்னு மொட்டையா என்னை அழைத்ததே இல்லை, இதயபூர்வமான பாசத்துடன் 'அனும்மா'ன்னுதான் அழைப்பார்! உங்கரெண்டு பேருக்குமே என்மீது கொள்ளை ஆசை இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், அதை எனக்குத் தராமல் உங்கள் கைகளை கட்டிப்போட்டிருப்பது பணம் சேர்க்கிற ஆசை! இல்லை, ஒரு வெறி! ஏன்னா, நீங்க இந்த ஊரிலே இருக்கிற உங்களைவிட பெரிய தனவந்தர்களை ஒப்பிட்டு பார்த்து இன்னும் இன்னும் வேண்டும்னு தேடறீங்க, இது எங்கே போய் முடியும் தெரியுமா? உள்ளூரிலே முதலாவதாக வந்ததும், அடுத்தது, அம்பானியோட ஒப்பிட்டு ஓடு ஓடுன்னு ஓடுவீங்க, அது முடிந்ததும், பில்கேட்ஸ் உலகத்திலேயே நம்பர் ஒன்னா வர ஓடுவீங்க........ஓடி ஓடியே ஓய்ந்துபோய் வாழ்க்கையிலே எதையும் அனுபவிக்காமலே செத்துப்போவீங்க, கேட்க கொடுமையாயிருந்தாலும், இதுதான் யதார்த்தம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.