ராதா சொன்னதை, காந்தி ஒப்புக்கொண்டு, கடந்துபோன நாட்களை அசைபோட்டான்.
ராதாவும் காந்தியும் ஒரே கல்லூரியிலே படித்தவர்கள். கட்டிடக்கலை படிப்பு! ஆர்க்கிடெக்சரல் இஞ்சினீயரிங்!
அந்தப் படிப்புக்கு உழைப்பும் நுட்பமான அறிவும் கற்பனை வளமும் நிரம்பி இருக்கவேண்டும். இரவு கண்விழித்து பல நாட்கள் வரைபடம் போடவேண்டியிருக்கும்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை மூன்றுவாரம் சென்று அந்த நாடுகளிலுள்ள கட்டிடங்களைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். நம் நாட்டிற்குள்ளேயும், பீஹார், ராஜஸ்தான், டில்லி, மாநிலங்களுக்குச் சென்று கட்டிடங்களின் நுட்பங்களை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். ஐந்து வருடப் படிப்பில், மாணவர்களும் மாணவிகளும் கலந்துபேசி, படித்து, விவாதித்து பழக சந்தர்ப்பங்கள் ஏராளம்!
அப்படி காந்தியும் ராதாவும் பலமுறை நெருங்கிப் பழகும்போதெல்லாம், காந்தி ஒருமுறைகூட, ராதாவிடம் தவறாக நடக்க முயற்சித்ததில்லை. அவளுடைய உழைப்பை, வரையும் திறனை மனதார காந்தி பாராட்டியிருக்கிறான். சிறந்த நண்பனாகப் பழகினான்.
ராதாவின் பெற்றோரும் காந்தியிடம் மதிப்பு வைத்திருந்தனர்.
இருவரும் படிப்பு முடிந்து, பட்டம் வாங்கியதும், மேற்கொண்டு என்ன செய்வது என யோசித்தனர். இருவருக்குமே, அந்த ஊரிலேயே தொடர்ந்து வசிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்ததால், இருவரும் கூடிப் பேசி, சொந்தமாக ஒரு கம்பெனி நடத்துவதென முடிவெடுத்தபோது, இரு குடும்பத்தினரும் நெருங்கி உறவாடி, விருப்பமுடன் ராதா-காந்தி திருமணத்தை முடித்து வைத்தனர்.
இன்றளவும், பல ஆண்டுகளாக, எந்தவித நெருடலுமின்றி, உறவு சுமுகமாக இருந்து கொண்டிருக்கிறது.
" ராதா! நம்ம அனு எழுதற கதைகளை நீ படிக்கிறியோ? எல்லாம் காதல் கதையா இருக்கும்போலிருக்கே!"
" காந்தி! இப்படி பேசறது, உனக்கே நியாயமா இருக்கா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி நடத்தறோம், வீட்டிலே இருக்கிற நேரத்திலே நான் சமையலை கவனிக்கிறேன், நீ மற்ற வேலைகளை பார்த்துக்கிறே! கதை படிக்கிறதுக்கு உனக்கோ எனக்கோ நேரமிருக்கா, சொல்லு! அனுக்குட்டிக்கு நம்ம மேலே இந்த விஷயத்திலே பெரிய கோபமே உண்டு. 'ஊரெல்லாம் படிக்கிறாங்க, பாராட்டறாங்க, வார இதழ் நடத்தறவங்க என் எழுத்தை வியாபாரமாக்கி பணம் கொழிக்கிறாங்க, ஆனா என்னை பெற்றவங்க, ஒரு சொல்கூட படித்ததில்லே, அவமானம்!' னு புலம்பறா! காந்தி! இன்று ஞாயிற்றுக்கிழமைதானே, ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி அனு எழுதற கதையை படியேன்!"
" ராதா! நான் ஒரு முக்கியமான காரணமாத்தான், அனு கதைகளை படிக்கிறதில்லே! உனக்குத் தெரியும், அவளுடைய, ஏன், உங்கரெண்டு பேருடைய முற்போக்கு குணத்துக்கும் என்னுடைய பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் ஒத்துப்போகாது! நான் அவ கதையை படிச்சிட்டு ஏதாவது அபிப்பிராயம் சொல்லி, எனக்கும் அவளுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுவிடுமோன்னு பயமாயிருக்கு! அனு, நமக்கு இருக்கிற ஒரே குழந்தை, ஒரே மகள்!.............."
" காந்தி! ஆமாமாம், நீ சொல்றது நடக்கக்கூடியதுதான்! சரி, நானே படிக்கிறேன், கொஞ்ச நேரத்திலே!"
" அது ஒண்ணும் அவசரமா செய்யவேண்டிய அவசியமில்லே, எனக்கு இன்னும் ரெண்டு வருஷத்திலே சாகித்ய அகாடமி அவார்டு கிடைச்ச பிறகு, நிதானமா படிங்க! இப்ப உங்களுக்கு உங்க கம்பெனி வேலைதான் முக்கியம், போங்க!" என்று சொல்லிக்கொண்டே, அனு படியேறி மாடிக்குச் சென்று தன் அறைக்குள் நுழைந்தாள்.
பின்னாலேயே ஓடிய, ராதா அனுவின் அறைக்குள் நுழையுமுன், படாரென்று அறைக்கதவை மூடினாள், அனு!
"அனுகுட்டி! கதவை திறம்மா! உன் அம்மா கெஞ்சறேன்டா, ப்ளீஸ்டா!
நாங்க செய்தது, தப்புதாம்மா! இனிமே செய்யமாட்டோம்மா! கதவை திறம்மா! ப்ளீஸ்!............"
" அனும்மா! உன் டாடி பேசறேன்டா, கதவை திறடா! இனிமே உன் கதைகளை படிக்கிறோம்டா......"
உள்ளிருந்து பதிலே இல்லை!
இருவரும் கதவு அருகிலேயே அமர்ந்து ' அனுக்குட்டி! கதவை திற! அனும்மா! கதவை திற!' என திருப்பித் திருப்பி குரல் கொடுத்தனர்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, இருவரும் எழுந்து நின்று, அனுக்குட்டியை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.
" அப்பா! அம்மா! நீங்க உங்க ஒன்லி டாட்டருக்கு செய்துகொடுத்திருக்கிற வசதியான இந்த ரூமை பாருங்க! இருபதுக்கு பதினைந்து, பாத் அடேச்ட், ஏ.சி., மரக்கட்டில், பஞ்சுமெத்தை, பில்ட் இன் கப்போர்டு, ஸ்டீல் பீரோ, வார்ட்ரோப் நிரம்பி வழியுது புதுப்புது டிரஸ், என் பேங்க் அகௌண்டிலே லட்சக்கணக்கிலே பேலன்ஸ்,......"
"ஆமாண்டா, கண்ணு! எங்களுக்கு வேற யாருடா இருக்க, கவனிச்சிக்க! உன் ஒருத்திக்காகவே வாழறோம்டா!"