(Reading time: 8 - 15 minutes)

சிறுகதை - எனக்கு அவனை பிடிக்கவேயில்லை! - ரவை

man_silhouette

னக்கென்னவோ அவன் வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தேஅவனை பிடிக்கலே! பார்த்தாலே, சோம்பேறி மாதிரி, தலைமயிரை ஒழுங்கா சீவிக்காம, அழுக்கு சட்டையை போட்டுண்டு, முகம் கழுவாம, தலையை சொறிஞ்சிண்டு வந்து நிக்கிறான், நான் அவனை பிச்சைக்காரன்னு நினைச்சிண்டு, 'சமையலாகலே, கொஞ்சநேரம் கழிச்சு வா'ன்னு விரட்டினேன். அப்புறம்தான் சொல்றான், 'வீட்டு வேலை செய்ய ஐயா வரச்சொன்னாரு'ன்னு! 

 போயும் போயும், இவன்தானா கிடைச்சான், என் புருஷனுக்கு!

 அதை அவருகிட்ட கேட்டுட முடியுமா? அவ்வளவுதான் வீடே ரெண்டாயிடும்!

 அவரு ஒரு முன்கோபி! கழுத்துக்கு மேலே வேலை, எப்பவும்! இருக்காதா பின்னே, அமைச்சரோட பி.ஏ.வாச்சே!

 இந்த அமைச்சருங்களை நினைச்சாலும், சில சமயங்களிலே, பரிதாபமாயிருக்கு! நிம்மதியா தூங்கக்கூட முடியாம, தண்ணி அடிச்சிட்டோ, மாத்திரையை விழுங்கிட்டோதான் தூங்கறாங்களாம்!

 விழக்கூடாதவங்க கால்லே விழவேண்டியிருக்கும், விழவேண்டியவங்க காலை வாரிவிடும்படியா நேரிடும்! ச்சே! இது ஒரு பொழைப்பா!

 ஆசை! அதிகாரத்திலே இருக்கணுங்கற ஆசை! அப்படி நிஜமாவே அதிகாரம் செய்யறாங்கன்னா நினைக்கிறீங்க? முதல் அமைச்சரோட செக்ரடரியோட சின்ன வீட்டிலேருந்து போன் வந்தாக்கூட, எழுந்து நின்னு பேசணும்! 

 சீஃப் செக்ரடரியை பர்மிஷன் கேட்டுக்கிட்டுத்தான் எந்த பேப்பரிலேயும் கையெழுத்துப் போடணும்! ஏன்னா, அமைச்சருக்கு இங்கிலீஷ் சுத்தமா தெரியாது, தமிழ் பேசற அளவுக்குத்தான் தெரியும், கரடுமுரடா சட்டரீதியான மொழியிலே இருந்தா, சுத்தம்!

 கண்டிராக்டர் சொன்னபடி கமிஷனை தந்தானான்னு பத்து தடவை கேட்டு தெரிஞ்சிக்கணும், ஏன்னா, முதலமைச்சர் பி.ஏ. கேட்டுக்கிட்டே இருப்பாராம்!

 இதெல்லாம் எனக்கெப்படி தெரியும்னு நினைக்கிறீங்களா

 என் புருஷன் போனிலே பேசறதிலிருந்தும், நேரிலே வீட்டுக்கு வரவங்களோட பேசறதிலிருந்தும் தான்!

 ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, எங்கெங்கிருந்தோ கட்டுக்கட்டா பணம் வரும், எங்கெங்கேயோ கட்டுக்கட்டா பணம் போகும், அதுவும் தேர்தல் சமயத்திலே கேட்கவே வேண்டாம்! 

 திடீர்னு வருமான வரி அதிகாரிங்க, ரெய்ட் வராங்கன்னு ரகசியமா செய்தி வந்துதுன்னா, இவரு தலையை பிய்ச்சிண்டு பல்லை கடிச்சிண்டு தவிக்கிறதை பார்க்கணுமே, இந்த கேவலமான பொழைப்பைவிட பிச்சையெடுக்கறது மேல்னு தோணும். அடுத்த நிமிஷமே, வந்தது புரளின்னு இன்னொரு செய்தி வரும், அப்பத்தான் இவரு மூச்சு விடுவாரு! 

 வெட்கத்தைவிட்டு சொல்றேன், நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படுத்து கடைசியா நிம்மதியா தூங்கினது எப்பன்னு யோசித்துத்தான் சொல்லணும்!

 இத்தனைக்கும், இவருக்கு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு காசு கிடைக்காது, இவரும் ஆசைப்படமாட்டாரு, ஏன்னா, இவரு இந்த வேலைக்கு வந்ததே, அமைச்சரும் இவரும் ஒரே ஊர்க்காரங்க, ஒண்ணா ஹைஸ்கூல்லே படிச்சவங்க, பக்கத்து வீட்டுக்காரங்க, ரெண்டுபேர் விவசாய நிலமும் அடுத்தடுத்த நிலங்க, இவருக்கு வேலைக்கு வர அவசியமே இல்லை, நட்புக்காக வந்திருக்கிறார்!

 ஆமாம், ஏதோ சொல்லவந்த நான், வழி தவறி, எங்கேயோ போயிட்டேன்!

 வீட்டு வேலைக்காரனைப் பற்றி சொல்லவந்த நான், ரூட் மாறிட்டேன்!

 திரும்பி வந்தாச்சு, பழைய பாதைக்கு!

 அந்த சோம்பேறியை எங்கிருந்துதான் பிடிச்சு இழுத்துவந்தாரோன்னு சந்தேகப்பட்டேன். இவரே, ஒருநாள், நல்ல மூட்ல இருந்தப்ப, சொன்னாரு, அந்த சோம்பேறி முதலமைச்சரோட உளவாளியாம்!

 இப்படித்தான், எல்லா அமைச்சருங்க, அவங்க பி.ஏ.க்கள் வீடுகளிலே முதலமைச்சரோட உளவாளி, வேலைக்காரனா இருப்பானாம். எதுக்குன்னா, எல்லா வீடுகளிலும் நடக்கிறதை உன்னிப்பா கவனிச்சு அப்பப்ப தகவல் தரணுமாம், முதலமைச்சருடைய தனிப்பட்ட ஆபீஸ்க்கு!

 இந்த அரசியல்வாதிங்களே, குறிப்பா, மந்திரிங்க ஒருத்தரை ஒருத்தர், என்னிக்கும் நம்பவே மாட்டாங்க! எந்த நிமிஷமும் முதுகிலே குத்திடுவாங்கங்கற பயம்! ஏன்னா, அப்படித்தானே ஒவ்வொருத்தரும், மேல மேல வந்திருக்காங்க!

 ஆனா, எங்களுக்கு பயமில்லே, மடியிலே கனமிருந்தால்தானே, வழியிலே பயம்! அதனாலே, இவரும் சரி, நானும்சரி, அந்த சோம்பேறிக்கு எந்த வேலையும் தரமாட்டோம். அவனா, பொழுது போகாம, ஏதாவது செஞ்சுகிட்டிருப்பான். 

 ஆனாஅவன்கிட்ட ஒரு நல்ல விஷயம்! பேசவே மாட்டான், ஏதாவது நாம அவனை கேட்டால் ஒழிய! 

 வீட்டுக்கு வந்துபோறவங்களிடமும் எதுவும் பேசமாட்டான். நடக்கறதை பார்த்து, கேட்டுக்கொண்டிருப்பான், அவ்வளவுதான்! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.