(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - இது என் வாழ்க்கை! - ரவை

myLife

"மூர்த்தி! மணி ஆறு ஆயிடுத்து, சந்தியாவந்தனம் பண்ணினியா?"

" இல்லை!"

"ஏன்?"

"இனிமே பண்ணப்போறதில்லே...."

" அடப்பாவி! பூணூல் போட்ட பிராமணன், சந்தியாவந்தனம் பண்ணாம இருக்கக்கூடாதுடா!"

 உடனே மூர்த்தி, தன் மார்பிலிருந்த பூணூலை கழற்றி எறிந்தான். 

 "அடப்பாவி! மகா பாவம்! பிராமணனா பிறந்துட்டு, இப்படி அக்கிரம்ம் பண்றியேஇது அடுக்குமா?"

 " அம்மா! பூணூல் போட்டவனெல்லாம் பிராமணனா? அப்படின்னா, செட்டியார், நகை செய்றவங்ககூட பூணூல் போட்டுக்கிறாங்களே, அவங்களும் பிராமணனா?"

 "குதர்க்கமா பேசாதே! மறுபடியும் பூணூலை எடுத்து போட்டுக்கோ, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே, ஞாபகம் வைச்சுக்கோ!"

 " மற்ற சாதிகளிலே உள்ள பெண்களில் ஒருத்தியை கட்டிண்டா போச்சு!"

 " கர்மம்! கர்மம்! உங்கப்பா உயிரோடு இருந்திருந்தால், இப்படி நீ செய்வியா?"

 " அம்மா! அப்பா என்னை படிக்கச் சொல்லி கொடுத்த புத்தகங்களை படித்தபிறகுதான், எனக்கு ஞானோதயமே ஏற்பட்டது. உட்கார், விவரமா சொல்றேன்!"

 " போடா! குதர்க்கமா பேசி என்னை மாற்றப் பார்ப்பே! எக்கேடோ கெட்டுப்போ! நான் என் வேலையை பார்க்கிறேன்........"

 " தப்பிச்சுக்கப் பார்க்காதே! இன்னிக்கி கால்மணி நேரம் லேட்டா சாப்பிடுவோம், உட்கார்!"

 மூர்த்தி அடுத்த அரைமணி நேரத்தில் விளக்கிய உண்மைகளைக் கேட்டு, அதிசயித்தாள்.

 " அம்மா! முதல்லே, இப்ப வாழறவங்களிலே யாருக்குமே தன்னை பிராமணன்னு சொல்லிக்கிற தகுதி கிடையாது, அது அவங்க தவறில்லே! காலம், உலகம், மாறிப்போச்சு! பிராமணன் என்பவன் 'பிரும்ம'த்தை அறிந்தவன்! 'பிரும்மம்' என்பது பிரும்மா, சிவன், விஷ்ணுன்னு சொல்றோமே, அந்த பிரும்மா இல்லை, இது'பிரும்மம்'! அதாவது, சர்வலோகத்தையும் படைத்து, காத்து, அழிக்கிற ஒரே அரூப சக்தி! அந்த ஒரு சக்தி, தன்னையே பல கோடி உருவங்களா பிரித்துக்கொண்டு, நாம பார்க்கிற உலகமாகவும், உயிர்களாகவும் நமக்கு காட்சியளிக்கிறது. பலவாகத் தெரிந்தாலும், எல்லாம் ஒன்றுதான்! தலைக்கு மேலே வானத்திலே இருக்கிற சூரியனை, பூமியிலே ஆற்றுத் தண்ணீரிலே, குளத்திலே, கிணற்றிலே, தொட்டியிலே, பாத்திரத்திலேயும் பார்க்கிறபோது, வேற வேற சூரியனாகத் தெரிகிறமாதிரி, உலகமும் படைக்கப்பட்ட அனைத்துமே, அந்த ஒரு சக்திதான்! இதிலே ஒண்ணு உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பதெல்லாம் அறிவீனம்! இதை நான் சொல்லலே, 'விவேக சூடாமணி' எழுதிய ஆதிசங்கர்ர், விளக்கியிருக்கிறார். 'அத்வைதம்' என்கிற அபேதவாத்த்தின் பொருளே, 'அ த்வைதம்' இரண்டு இல்லை என்பதே! அம்மா! இடைக்காலத்திலே வந்தவங்க தப்புத்தப்பா எது எதையோ பரப்பி பேதங்களை உண்டாக்கிட்டாங்க........."

 "மூர்த்தி! நீ சொல்றது உண்மைன்னா, இன்றைக்கும் மடங்களிலே ஏற்றத்தாழ்வு, சாதிவித்தியாசங்கள் பாராட்டறாங்களே? அது தப்பா?"

 " அம்மா! நான் விளக்கின பெரிய உண்மையை, எல்லாராலேயும் சுலபமா புரிஞ்சிக்கமுடியாது, தவிர, இடையிலே புகுந்த பாகுபாடுகள் மக்கள் மனசிலே ஆழமா ஊறிப்போயிடுத்து! அவைகள் ஒழிகிற வரையிலும், மடங்கள் ஒரு தற்காலிக சமாதானமா சில பழக்கங்களை கடைப்பிடிக்கிறாங்க! அம்மா! உண்மையிலே, கடவுள் இல்லைன்னு சொல்கிறவனுக்கும், அபேதவாதிக்கும் ஒரே ஒரு அடிப்படை வேறுபாடுதான், நாத்திகன் கடவுளே இல்லைங்கறான், அத்வைதம் பேசறவன், ஒரே ஒரு கடவுள்தான் என்கிறான்! இதை அஷ்டாவக்கிர முனிவர் ஒரு நூலாகவே எழுதியிருக்கிறார்........."

 மூர்த்தி விஷயஞானத்தோடுதான் பேசுகிறான் என்று அவன் அம்மாவுக்கு புரிந்தது.

 " மூர்த்தி! ஊரோடு ஒத்துவாழ்!னு பெரியவங்க சொல்லியிருக்காங்கடா! சரியோ, தவறோ, எல்லாரையும்போல, நாமும் வாழ்ந்துவிட்டுப் போயிடுவோம்டா!"

 " நீ சொல்றதையே, ஆதிசங்கர பகவத்பாதாளின் அம்மாவும் சொல்லி, சந்நியாசம் வேண்டாம்னு மகனை தடுத்தபோது, அவரும் கேட்டிருந்தால், இன்று நமக்கு சத்தியவாக்கு கிடைத்திருக்குமா?"

 " நீ என்னதான்டா சொல்லவரே?"

 " நான் நானாக வாழ நினைக்கிறேன், எதை செய்தாலும் நம்பிக்கையோட செய்யணும்! உலகத்துக்காக நான் வேஷம் போடத் தயாராயில்லே!"

 மூர்த்தியின் தாய், மகனை உடனடியாக மாற்றமுடியாது, விட்டுப் பிடிக்கவேண்டும் என்று தீர்மானித்து எழுந்து தன் காரியங்களை கவனிக்கச் சென்றாள்.

 அவர்கள் வசித்தது, ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு ஃபிளாட்டில்! மொத்தம் இருபது ஃபிளாட்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.