(Reading time: 10 - 20 minutes)

 ஒரு தளத்தில் ஐந்து ஃபிளாட்! தரை, முதல், இரண்டாவது தளங்களில் உள்ள ஃபிளாட்கள் எப்போதும் கலகலப்பாக மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும். ஆனால், மூன்றாவது தளத்தில் வெயில் அதிகம் பாதிக்கும் என்பதனால், அங்கு வசிப்பவர்களும் அடிக்கடி காலி செய்துவிடுவார்கள்! அந்த தளத்திற்கு பகலிலேயே மற்ற தளத்தில் உள்ளவர்கள் போகமாட்டார்கள், இரவில் கேட்கவே வேண்டாம்! நிசப்தமாக இருக்கும்.

 பற்றாக்குறைக்கு, லிஃப்ட்வசதி இருப்பதால், மூன்றாம் தளத்திற்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பது சிதம்பர ரகசியம்!

 இதை பயன்படுத்திக்கொண்டு, மூன்றாம் தளத்திலிருந்த ஒரு ஃபிளாட்டின் சொந்தக்காரன், தனது ஃபிளாட்டை விபசார விடுதியாக்கிவிட்டான்!

 குடும்பங்களுக்கு வாடகைக்கு வீட்டை தந்தால், பதினைந்தாயிரத்துக்குமேல் வராது, பிரும்மசாரிகளுக்கு விட்டால், இருபதாயிரம் கிடைக்கலாம்இதுபோல, விபசார விடுதியாக்கிவிட்டால், பலமடங்கு பணம் கிடைக்கும் என யாரோ விஷமத்தனமாக சொல்லிக் கொடுக்க, பேராசை பிடித்த சொந்தக்காரன், தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, ஒரு வழி கண்டுபிடித்தான்.

 ஒரு ஆணும் பெண்ணும் , கணவன்-மனைவி என்று சொல்லிக்கொண்டு முதலில் வந்தனர். இரவு நேரங்களில், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு ஆணும் பெண்ணும் வந்து போவார்கள். இரவு தங்கிவிட்டு, வாடகை தந்துவிட்டு, காலையில் இருட்டோடு போய்விடுவார்கள்.

 பேராசையின் விளைவாக, ஒன்று, இரண்டாக துவங்கி, நாளடைவில், துணிந்து, ஐந்தாறு ஜோடிகளாக அதிகரிக்கவே, அந்த தளத்திலிருந்த மற்ற குடித்தனக்கார்ர்களுக்கு தெரிந்துவிட்டது. அந்த ஓனரை அழைத்து, போலீஸுக்கு புகார் கொடுப்போம் என மிரட்டியவுடன், அவர் இரவோடு இரவாக அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினார்.

 மற்றவர்கள் தப்பித்தேன், பிழைத்தேன் என ஓடிவிட்டார்கள். ஒரே ஒரு பெண் மட்டும், கேட் அருகில் அழுதுகொண்டு நின்றிருந்தாள்.

 அவள் எக்கேடோ போகட்டும் என்று மற்ற ஃபிளாட்வாசிகள் தங்கள் வீட்டுக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டனர்.

 மூர்த்தி அங்கு இருந்தவர்களில் ஒருவன்! அவனால், அப்படி இரக்கமற்ற முறையில், அந்தப் பெண்ணை நிராதரவாக விட்டுச் செல்ல மனமில்லாமல், நெருங்கிச் சென்று விசாரித்தான்.

 அவள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவள். இந்த ஊரில் அவளுக்கு உறவினர், தெரிந்தவர், யாருமில்லை! அவளை விஜயவாடாவிலிருந்து அழைத்துவந்த புரோக்கர் போலீஸுக்குப் பயந்து அவளை தவிக்க விட்டுவிட்டு ஓடிவிட்டான்!

 " நான் எங்கே இந்த இரவில் தங்குவேன்? எனக்கு யார் அடைக்கலம் தருவார்கள்? பொழுது விடிந்தால், வெளிச்சத்தில் ஏதாவது வழி தேடிக்கொள்வேன், புரோக்கரே வந்து அழைத்துச் செல்லவும் வாய்ப்பு உண்டு. இந்த ஒரு இரவு, யாராவது வீட்டின் ஒரு மூலையில் ஒதுங்க இடம் கொடுங்கள்!" என்று தெலுங்கில் கெஞ்சியவாறு மூர்த்தியின் காலடியில் விழுந்தவுடன், அவன் இரக்கப்பட்டு, அவளை தன் வீட்டிற்குள் அழைத்துவந்து, தாயின் எதிர்ப்பையும் மீறி அவளை தங்வைத்தான்.

 ஒரு மணி நேரத்துக்குமேல் தாய்க்கும் மகனுக்கும் இடையே, வாக்குவாதம்! ஒரு நிலையில் சண்டை முற்றிப்போய், தாய், வீட்டைவிட்டு வெளியேறுவதாக கையில் ஒரு பையுடன் கிளம்பினாள்.

 அந்தப் பெண், ஓடிவந்து, தான் போய்விடுவதாக சொல்லி தாயை தடுத்தி நிறுத்தி, சொல்லியபடியே வெளியேறினாள். அப்போது நள்ளிரவு!

 மூர்த்திக்கு மனம் துடித்தது. அந்தப் பெண், மொழி தெரியாதவள், இருட்டில், எங்கே போவாள்? மனித வேங்கைகளை விடுங்கள்! தெருநாய்களே அவளை கடித்துக் குதறிவிடுமே! ரோந்து போலீஸ் அவளை பார்த்துவிட்டால், கேட்கவே வேண்டாம், சகாக்களுடன் அவளை சீரழிக்கத் தயங்கமாட்டார்கள்! 

 ஒரு முடிவு எடுத்து, மூர்த்தி அவளை பின்தொடர்ந்து வந்து, கேட் அருகிலேயே அவளை படுக்கச் சொல்லிவிட்டு, பொழுது விடியும்வரையில் கண்விழித்து காவலுக்கு அவளருகிலேயே நின்றான்!

 பொழுது விடிந்ததும், மூர்த்திக்கு அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினாள்!

 பிரச்னை முடிந்தது என்றுதானே நினைக்கிறீர்கள், இல்லை, இங்கிருந்துதான் துவங்குகிறது!

 மறுநாள் முதல் காரியமாக, வாட்ச்மென், வீடு வீடாகப்போய், இரவு அந்தப்பெண் கேட் அருகில் தூங்கியதையும் மூர்த்தி அவளருகில் இருந்ததையும் பரப்பினான்.

 கேட்கவேண்டுமா, புரளிக்கு! வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற்போல!

 " அதெப்படி விரட்டியடித்த பெண்ணை இரவு முழுதும் இங்கே தங்கவைக்கலாம்?"

 " அந்தப் பெண்ணுக்கு மூர்த்தி காவல் காத்தாரா, இல்லை அவளுடன் காதல் செய்தாரா?"

 "அதுமட்டுமா? முன்பாக, அவளை வீட்டுக்குள் சில மணி நேரம் படுக்கவைத்திருந்தார்களாமே, தனியாகப் படுத்தாளா, ஜோடியாகப் படுத்தாளா?"

 "ஒரு விபசாரிக்கு ஆதரவு காட்டறவன், விபசாரத்தை ஆதரிக்கறதா தானே அர்த்தம்! அப்படிப்பட்டவனை நல்லகுடும்பத்துப் பெண்கள் வாழற இடத்திலே நடமாட விடலாமா?"

 " புருஷன் செத்துப்போய் பொம்பளை வளர்த்த ஒத்தப்புள்ளை வேறெப்படி இருக்கும்? தறுதலையாத்தான் திரியும்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.