(Reading time: 10 - 20 minutes)

 இப்படி ஆளாளுக்கு, ஏதேதோ பேசி, பெரிய கலகத்தையே ஏற்படுத்தினார்கள், உடன் குடியிருந்தோர்!

 இவை, மூர்த்தியின் தாயின் காதில் விழுந்து அவள் அவமானத்தில் கூனிக்குறுகி வேதனைப்பட்டாள்.

 " மூர்த்தி! உன்னால் முடிந்தது, உன்னை பெற்றவளுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்துட்டே! அவ யாரோ, எவளோ, எந்த ஊரோ, உனக்கேன்டா, அவ எக்கேடோ கெட்டுப்போறா! பாவம்னு அவள்மீது பரிதாப்ப்பட்டு ஏதோ செய்யப்போய், இப்ப நம்மை நாலுபேர் காரித்துப்பும்படியா, பண்ணிட்டே........" என்று அழுதாள்.

 மூர்த்தி பாதிக்கப்படவே இல்லை!

 " 'மடியிலே கனம் இருந்தால்தானே வழியிலே பயம்?' ஒரு பெண் அபலையா நடுராத்திரியிலே ஆதரவுகேட்டு அழுதுகொண்டு நிற்கிறபோது, மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டேன். என் மனசாட்சி சொன்னபடி நடந்துகொண்டேன். ஊரிலே நாலுபேர் நாலுவிதமா பேசறதுக்குப் பயந்து நடந்தால், நான் நானாக வாழமுடியாது, பிறர் முடுக்கிவிட்ட பொம்மையாகத்தான் இருக்கணும், அதுக்கு நான் தயாரில்லே!"

 " மூர்த்தி! நீ நாலுபேர் வாழற சமுதாயத்திலே வாழறபோது, தனிக்காட்டுராஜாவா இருக்கமுடியாதுடா! அனுசரித்துத்தான் போகணும். அப்படியில்லேன்னா, அவங்களை இந்த சமுதாயம் ஒதுக்கிவைச்சிடும்,.........."

 " நீ சொல்கிற சமுதாயத்திலே, கழுத்திலே தாலி கட்டிக்காமலே, பிள்ளை பெற்றுக்கிறவங்களையும், வருஷத்துக்கு ஒருவனோட கூடிவாழறவங்களையும், மாலைபோட்டு வரவேற்கவும், ஆட்டோகிராப் வாங்கவும், நூற்றுக்கணக்கிலே காசு கொடுத்து டிக்கெட் வாங்கி அவங்க நடிச்ச சினிமாவைப் பார்த்து கைதட்டவும், வீட்டிலே அவங்க போட்டோவை மாட்டிவைத்து மகிழவும் செய்கிறாங்க! அம்மா! கோடிக்கணக்கிலே ஊர்ப்பணத்தை கொள்ளையடிக்கிறவங்களை, பதவியிலே உட்காரவைத்து, கும்பிடு போட்டு மரியாதை பண்றாங்க!

 அம்மா! ஏதோ சமுதாயம்னும் நாலுபேர்னும் அடிக்கடி சொல்றியே, அந்த நாலுபேரைப்பற்றி, அந்த சமுதாயத்தைப்பற்றி, ஒரு உண்மையை சொல்றேன், கேளு! 

 இந்த நாட்டிலேயே உச்சத்திலே இருந்த நீதிமன்றமே, ஒருமனதாக, ஒரு தீர்ப்பு சொல்லுது! அந்த தீர்ப்பின்படி, மூணு பெண்கள், ஒரு ஆண் கூட்டாகச் சேர்ந்து கணக்கிலே வராத பணம் கோடிக்கணக்கில் வைத்திருந்ததாகவும், நாடு முழுவதும் சொத்து வைத்திருந்ததாகவும், சந்தேகத்துக்கு இடமில்லாம நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிறைதண்டனை அளிப்பதாகவும் தீர்ப்பு அறிவித்து இரண்டு பெண், ஒரு ஆண் இன்று சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள், அந்த மூன்றாவது பெண், இல்லை, இல்லை, குற்றவாளிகள் வரிசையில் முதல் பெண் நோயில் இறந்துவிட்டாள். உயிரோடிருந்திருந்தால், இன்று குற்றவாளியாக சிறையில் இருந்திருப்பாள். 

 நீ பெருமையாக சொல்கிற சமுதாயத்துப் பெரிய மனிதர்கள், பிரதமர், முதல் அமைச்சர், கவர்னர், எல்லோரும் அவள் சிலைக்கு மாலை அணிவித்து கையெடுத்து கும்பிடுகிறார்கள்! அவளுக்கு 'பாரதரத்னா' பட்டம் வழங்க கோரிக்கை வைக்கிறார்கள், இந்த சமுதாயத்தை ஒட்டியா என்னை வாழச் சொல்கிறாய்? 

 அதுமட்டுமா? பாராளுமன்றத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள்மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்!

உறவுக்காரனுக்கு அரசாங்க டென்டர் விதிகளைமீறி அளித்ததாக அமைச்சர்கள்மீது வழக்கு, ஊழல் ஒழிப்பு இலாகாவின் தேசிய தலைமையிலேயே ஊழல் குற்றச்சாட்டுஇதுதான் இன்றைய சமுதாயம்!

 அம்மா! நன்றாக கேட்டுக்கொள்! எனக்குஎன் உள்மனது நல்லது, கெட்டது பிரித்துக்காட்டி, வழிநடத்திச் செல்கிறது!

 அதன்படிதான் நான் நடப்பேன்! நான் நானாகத்தான் வாழ்வேன்! இதில் மாற்றம் ஏற்படும் என்று வீணாக கனவு காணாதே! 

 தன் உள்மனதின்படி வாழ்ந்தவர்கள் மகாத்மா ஆகியிருக்கிறார்கள். பரமஹம்ஸராகியிருக்கிறார்கள். சத்குருவாக போற்றப்படுகிறார்கள்! 

 எனக்கு அப்படியெல்லாம் புகழப்படவேண்டும் என்ற கனவு எதுவுமில்லை, சாதாரண மனிதனாகவே, ஆனால் நான் நானாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். நீ நிம்மதியாயிரு! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.