(Reading time: 11 - 21 minutes)

 " சாரதா! உன்னோட பிரச்னை, வேலைக்காரி லேட்டா வரது இல்லே, சமையலுக்கு பாத்திரங்கள் குறைவாயிருக்கு, திருப்பித் திருப்பி ஒரே செட் பாத்திரங்களை சுத்தம் செய்து உபயோகப்படுத்த வேண்டியிருக்கு, இதுதான் பிரச்னை! சரியா?"

 " ஆமாம்ப்பா!"

 " நம்ம வீட்டு பரணிலே உங்க மாமியார் உபயோகப்படுத்தின பாத்திரங்கள் நிறைய இருக்கு! நான் எடுத்து தரேன், உபயோகப்படுத்திக்கோ! உபயோகத்துக்கு இல்லாம, பரணிலே தூங்கறதுக்கா பாத்திரங்கள் வாங்கறோம்?"

 " ஆமாம்ப்பா! இது எனக்கு தோணாமல் போச்சே!"

 " தோணாமல் போனதுக்கு காரணம், நீ சம்பளம் கொடுக்கிற வேலைக்காரி, நீ சொல்றதை கேட்கமாட்டேங்கறாளேங்கிற கோபம் உன் அறிவுக் கண்களை மறைக்கிறது! கோபம் நம்முடைய முதல் எதிரி! எது நடந்தாலும் 'நான்' என்கிற எண்ணம் உடனே தலைதூக்கும், அதனுடன்கூட ஆத்திரம், கோபம், ஏமாற்றம், வெறுப்பு எல்லாம் சரக்கு ரயில் மாதிரி வரும், அறிவை மழுங்கச் செய்யும்........"

 " ஒத்துக்கிறேன்ப்பா! அதுக்கு தீர்வு என்னப்பா?"

 " ரொம்ப சிம்பிள்! எந்த எண்ணம் தலை தூக்கினாலும், உடனே அதை கவனிச்சு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கணும்னு அவசரப்படாம, அந்த எண்ணத்தை ஊறப்போடு, ஆறப்போடு! அதனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமா குறையும், தெளிவு வரும், அப்ப நிதானமா யோசித்தால், தீர்வு நிச்சயமா கிடைக்கும்.........முயற்சி பண்ணிப்பார்!"

 பெரியவர், தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டு, தனக்குள் சிரித்துக்கொண்டார்.

 இன்றைக்கு இத்தனை தெளிவாக, மகனுக்கும் மருமகளுக்கும் வாழும் வித்த்தை விளக்குகிறவர், தான் அப்படி விவேகமாக வாழ்ந்தாரா

 எண்பது வயதிலே, எட்டிப் பார்க்கிற தெளிவும் ஆழமும் அவரை நாற்பது வயது வரை அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்துவிட்டது.

 அப்பப்பா! எத்தனை கோபம்! எத்தனை விரோதம்! எத்தனை பணநஷ்டம்! எத்தனை மனக்கஷ்டம்!

 வாழ்க்கையில் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், சுகம், துக்கம், செல்வம், வறுமை எல்லாம் அனுபவித்தவர்!

 வெளிக்காரணங்களால் அவர் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கால் பங்குதான்! முக்கால் பங்கு, அவருடைய அகம்பாவம், பிடிவாதம், முன்கோபம், அலட்சியம், இத்யாதி!

 அவருக்கு நல்ல பெரிய கம்பெனியில் வேலை கிடைத்ததே, அவர் படிப்புக்காகவோ, திறமைக்காகவோ அல்ல, அந்தக் கம்பெனியில் அவருடைய தந்தை நாற்பது ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, அந்தக் கம்பெனி முன்னேற உதவி செய்தார், என்பதற்காக அவர் ஓய்வுபெற்ற மறுநாளே, மகனை கூப்பிட்டு வேலை தந்தார்கள்!

 அப்போது அவருக்கு பத்தொன்பது வயது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், அரைகுறையாக படிப்பை கைவிட்டு, வேலையில் சேர்ந்தார். அவர் படிப்பு முடித்து பட்டம் பெற்றபிறகு கிடைக்கக்கூடிய பதவியை அவருடைய தந்தையின்மீதுள்ள மரியாதையினால் கொடுத்தார்கள்.

 அந்தக் கம்பெனிக்கு அவர் எத்தனை விசுவாசமாக இருந்திருக்கவேண்டும்!

 அதுதான் இல்லை! முதல் ஆறுமாதங்களுக்குள்ளாகவே, தொழிற்சங்கத்தில் தீவிர பங்கு எடுத்துக்கொண்டு, கம்பெனிக்கு எதிராக கொடி பிடித்தார். தர்ணா செய்தார். ஸ்டிரைக்கில் கலந்துகொண்டார்.

 அவரைக் கூப்பிட்டு முதலாளி அறிவுரை செய்தபோது, அவரை அவமரியாதையாக பேசிவிட்டு அதை மற்றவர்களிடமும் சொல்லி தம்பட்டம் அடித்தார்.

 காரணம் என்ன தெரியுமா? அவருடைய பக்குவப்படாத மனதிலே, அறிவு வளராத நிலையிலே, இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், ரஷ்யாவிலே நடந்ததையும், சீனாவிலே நடந்ததையும் பெரிதுபடுத்தி கூறி அவரை வர்க்கப்போருக்கு தயாராக்கிவிட்டார்கள்!

 வேறுவழியின்றி, கம்பெனி முதலாளி அவருடைய தந்தையை அழைத்து மகனின் தீவிரவாத செயல்களை விவரித்து, இறுதி எச்சரிக்கையாக மகனை திருத்தும்படியாக கூறினார்.

 வீட்டில், தந்தை அவரிடம், குடும்பத்தின் நிலைமை பொருளாதார ரீதியாக, சரியில்லை, அதனால் மகனின் சம்பளம் நின்றுபோனால் குடும்பமே தெருவில் நிற்கும் என்று காலில் விழாத குறையாக கெஞ்சினார்.

 " அப்பா! இப்படி ஒவ்வொருவரும் அவரவர்கள் குடும்ப பிரச்னைக்காக, முதலாளிகளுக்கு அடங்கிப்போனால், கோடானுகோடி ஏழைகளின் வாழ்வில் என்று விடியலைக் காண்பது? அப்பா! முதலாளி என்மீது கைவைத்து, வேலையிலிருந்து நீக்கினால், கம்பெனியே முடங்கிப் போய்விடும், ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் எனக்காக வேலைநிறுத்தம் செய்வார்கள். முதலாளி என்னை ஒன்றும் செய்யமுடியாது. நீ கவலைப்படாதே!" என்று யதார்த்தநிலை புரியாமல், வாதிட்டார்.

 வேறுவழியின்றி, முதலாளி அவரை வேலையிலிருந்து நீக்கினார். மறுநிமிடமே, அத்தனை தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று அவர் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை!

 தொழிற்சங்கம், மாறாக, தொழில் கோர்ட்டில், வழக்குப் போட்டது!

 அவருக்கு சங்கத்தின்மீது கோபம்! நிர்வாகிகளுடன் சண்டை போட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.