" அங்கே பாரேன்! ஸ்பூனை கீழே வைச்சிட்டு, கையாலே நக்கி நக்கி சாப்பிடறதைப் பாரேன், எப்படிடீ இவனை ரேணு தேர்ந்தெடுத்தா!"
முப்பத்தொன்பது மாணவிகளும் இதே பேச்சு!
ஆடலிலும், பாடலிலும், சில மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக செய்தனர். ரேணுவின் கருப்பனோ, எதிலும் கலந்துகொள்ளாமல், ரேணுவுடன் மட்டும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். இல்லை, இல்லை, அவனை இழுத்துவைத்து ரேணுதான் பேசினாள்!
மற்றவர்களுக்கு ஒரு ஆர்வம், துடிப்பு! ரேணு அவனை தேர்ந்தெடுத்த மர்மத்தை தெரிந்துகொண்டே ஆகவேண்டும்!
அதற்கு ஒரு ப்ளான் தீட்டினார்கள். ஒவ்வொரு மாணவியும் மேடையேறி, தன் நண்பனை அறிமுகம் செய்துவைக்கவேண்டும், அப்படிச் செய்யும்போது, அவனை தேர்ந்தெடுத்த சந்தர்ப்பம், சூழ்நிலை, காரணம், பொருத்தம் பற்றியும் கூறவேண்டும் என்பதே!
ஒவ்வொருவராக, நண்பனை அறிமுகப்படுத்தியதோடு, அவனை தேர்ந்தெடுத்த காரணத்தையும் சொன்னார்கள்.
அதில் சில நகைச்சுவையானதாகவும் இருந்தன.
" இவனை ஏன் தேர்ந்தெடுத்தேன்னா, எனக்குப் பிடித்த சினிமா ஹீரோவை இவனுக்கும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மசால்தோசை, ஏ.ஆர்.ரகுமான் இசை, வைரமுத்து பாடல் எல்லாம் இவனுக்கும் பிடிக்கும். இவைகளைப்பற்றி பேசினோம்னா, நேரம் போவதே தெரியாது........"
இன்னொருத்தி, " இவனை நான் தேர்ந்தெடுக்கவேயில்லை........ஆச்சரியமாயிருக்கா? என்னை ஏறெடுத்துப் பார்த்தவன் இந்த ஏமாளி ஒருத்தன்தான்! விடுவேனா, வலுவிலே வந்து மாட்டிண்டவனை! லபக்னு பிடித்து ஒட்டிக்கிட்டேன். இல்லை, ரகு?" என்று மேடையிலேயே தமாஷாக அவள் அவனை சீண்டியதும், அவன் உடனே பாடினான்.....'அவளுக்கென்ன அழகியமுகம், அவனுக்கென்ன இளகிய மனம்......" கைதட்டல் ஓய நெடுநேரம் ஆகியது.
இப்படி ஒவ்வொருவராக மேடையேறி பேசினர். எல்லோருக்கும், ரேணுகாவின் பேச்சை கேட்பதில்தான் முனைப்பு!
இன்னும் நான்குபேர் தான் பாக்கி. 'குண்டுமல்லிகை' என கேலி செய்யப்பட்ட பரணி என்ற மாணவி பேசினாள்.
" என்னைப் பார்த்து எல்லாரும் 'குண்டு'ன்னு பரிகாசம் பண்றபோது, எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கும். ஆனா, அவங்களை குற்றம் சொல்வதற்கில்லை, நான் குண்டாகத்தான் இருக்கிறேன், பட்டினி கிடந்து பார்த்தேன், ஜிமுக்கு போனேன், நீச்சலடித்தேன், விரதம்