" அதுக்கும் மேலேதான்......"
" ஐம்பது லட்சம்?"
" அதுக்கும் மேலே!"
" ஓ! சரி சரி, இப்படி ஓரமா வாங்க! பேசுவோம்!"
என்னை கையைப் பிடித்து அழைத்துச் சென்று அங்கிருந்த காலொடிந்த நாற்காலியில் அமரவைத்தான்.
" பெரியவரே! இந்த வேலை முடிய, ரொம்ப டயமாகும், ஒண்ணு பண்ணுங்க! உங்களாலே இங்க கால்கடுக்க காத்திருக்க முடியாது. பதிவு செய்றதுக்கு மட்டும் குறைச்ச பணம்தான், முந்நூற்றிஐம்பது ரூபாய்! அதுக்கு ரசீது உடனடியா தந்துடுவாங்க! ஆனால், சரிபார்க்கறதுக்குத்தான், கொஞ்சம் அதிகமாகும், நீங்க வீட்டுக்குப் போய்ட்டு, உங்க செக்புக்கை எடுத்துண்டு வாங்க! பக்கத்திலே இருக்கிற இந்தியன் வங்கிதானே? நான்போய், கேஷ் பண்ணிண்டு வரேன், ஒரு லட்ச ரூபாய் இருக்குமில்லே, உங்க அகௌண்டிலே? அவ்வளவுதான் ஆகும், இந்த செலவுக்கு ரசீது கிடையாது, ஆனா, இன்னிக்கே வேலை முடிஞ்சிடும். கொண்டாங்க, உயிலை!"
சிறிது தயங்கிவிட்டு, உயிலை பாலுவிடம் தந்தேன்.
நான் அங்கிருந்து வீடு செல்வதுபோல நாடகமாடிவிட்டு, திரும்பிவந்தேன்.
வெளியில் காணப்படாத பாலு, உள்ளே இருந்தான்.
பதிவாளரும், முனுசாமி உள்ளிட்ட குமாஸ்தாக்களும் குழுமி நின்று, என் உயிலை படித்துக் கொண்டிருந்தனர்.
"பத்ரிநாதன்-பரிமளத்தின் மகனாகிய ஏகநாதனும், குமாரவேலன்-காந்திமதியின் மகளாகிய பரமேஸ்வரியும் நல்ல உடல்நிலையில், மனப்பூர்வமாக, எழுதிவைக்கும் உயில் இது.
எங்களுடைய புத்திரன்கள், மகாதேவன், வயது 40, சகாதேவன், வயது முப்பத்தாறு, இருவருக்கும் எங்கள் சொத்தில் சம பங்கு உண்டு.
ஏகநாதன், என்கிற நான், கடலூரில் உதவிப் பதிப்பாளராக, முப்பதாண்டு சேவைக்குப் பிறகு, ஓய்வு பெற்றபோது, எதுவும் சேர்த்துவைக்கவில்லை. அரசாங்கம் தந்த சம்பளத்தை தவிர, ஒரு பைசாகூட தவறான வழியில் சம்பாதிக்காத காரணத்தாலும், மாத சம்பளம் முழுமையும் புத்திரன்களின் படிப்புக்கும் குடும்பச் செலவுகளுக்குமே சென்றுவிட்டதால், நான் ஓய்வு பெற்றபோது, பிராவிடண்ட் ஃபண்ட் கட்டாய சேமிப்பைத்தவிர, வேறெதுவும் சேமித்து வைக்கவில்லை.