கம்பீரமாக நடந்து சென்றார் அசோகர். சிற்றரசன் மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தார். திடீரென்று மாமன்னரை நேரில் கண்ட அதிர்ச்சி காவலர்களைப் பிரமிக்க வைத்தது. வாளை உயர்த்தி வணக்கம் கூறினர். "அசோகர் வந்திருக்கிறார் என்று உங்கள் அரசனிடம் போய்ச் சொல்" என்று கூறினர் அசோகர். ஒரு காவலன் ஒடினான். அசோகர் ஈசுவரநாதன் பின் தொடர நடந்தார்.
அந்தச் சிற்றரசன் ஓடோடி வந்து வணங்கி வரவேற்றான், இருவருக்கும் உயர்ந்த இருக்கை தந்து தான் கீழே நின்றான். அவனுடைய அமைச்சர்களும் எழுந்து வணங்கி நின்றனர்.
அசோகரிடமோ, ஈசுவரநாதனிடமோ அப்போது வாளில்லை. வேறு எவ்விதமான ஆயுதமுமில்லை. ஆனல் அந்தச் சிற்றரசன் ஏன் அப்படிப் பணிய வேண்டும்? வணங்க வேண்டும்?
சின்னஞ்சிறு பிள்ளை கூட இதன் காரணத்தைக் கூறி விட முடியும் வஞ்சகமாக, அசோகரிடம் அந்தச் சிற்றரசன் நடந்து கொண்டிருந்தால் அந்தச் செய்தி வெளிப்பட்டவுடன் அவனுக்கு என்ன கதி நேரிட்டிருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. மக்களிடையே அசோகருக்கு அவ்வளவு மதிப்பிருந்தது; அவ்வளவு அன்போடு மக்கள் அசோகரை நேசித்தார்கள். இதை அந்தச் சிற்றரசன் அறியாதவனல்ல. ஆகவே, அவன் எதிர்பாராத விதமாக - ஆயுதமற்றுத் தன் முன்னிலையில் திடுமென வந்து நின்ற அசோகரைக் கண்டவுடன் வியப்பும் திகைப்பும் அடைந்து வணங்கி நின்றது ஆச்சரியத்திற்குரியதல்ல.
ஆனால், ஒரு பகைவன் கோட்டையில் துணிந்து நுழைந்து கையில் எவ்விதமான படைக்கலனுமின்றி நெஞ்சுறுதி ஒன்றே துணையாக அவன்முன் நிற்கின்ற தன்மை அசோகரை யன்றி வேறு யாருக்கு வரும்? ஈசுவரநாதன் அசோகரின் நெஞ்சுறுதியைக் கண்டு பிரமித்தவாறே அவர் பின் நின்றான்.
வணங்கி நின்ற சிற்றரசனை நோக்கி அசோகர் சில கேள்விகள் கேட்டார். அவன் படையெடுத்துக் கலகம் செய்து சுகந்திரம் பெற முயன்ற செய்தி உண்மை யென்பதை அவன் வாய் மூலமாகவே அறிந்து கொண்டார். பின் அவர் பேசத் தொடங்கினார்.