"ஹலோ மீரா... நாளைக்கு அக்கா வீட்டுக்கு போகலாம்னு பிளான்... அவளுக்கு பிடிக்கும்னு முறுக்கு செஞ்சுட்டு இருக்கேன்... அப்புறம் பேசவா?" என அந்த பக்கம் இருந்து பரபரப்புடன் குரல் கேட்டது!
அந்த வினாடி இதயத்தில் சின்னதாக வலி தோன்றியது. ஆனால் என்ன சொல்ல முடியும்?
"சரிம்மா..."
"சும்மா தானே கூப்பிட்ட? எப்படி இருக்க? அவர் எப்படி இருக்கார்? பேசினாரா?"
வழக்கமான விசாரிப்புகள்... இதற்கு என்ன சொல்வது? இல்லை விவேக் என்னிடம் சரியாக பேசுவதில்லை என்றா? ஆனால் மனதை மறைத்து,
"நல்லா இருக்கேன் அம்மா. சும்மா தான் கூப்பிட்டேன்... முக்கியமா ஒண்ணுமில்லை அப்புறம் பேசுறேன்..." என்று சின்ன குரலில் சொல்லிவிட்டு, இணைப்பை துண்டித்தாள் மீரா.
அம்மாவிடம் ஏதாவது சொல்ல போக, அது அப்பா காதுக்கு சென்றால் அப்புறம் அவ்வளவு தான்.. ரசாபாசமாகி விடும். எதற்கு இந்த வம்பு...
ஆனால் அம்மா சொன்ன முறுக்கு செய்யும் விஷயம் மட்டும் மனதில் ஒட்டிக் கொண்டது. அம்மா எப்போதும் இப்படி தான் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்று கேட்டு கேட்டு செய்வார்கள். இன்று வரை யாரேனும் அம்மாவிற்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு செய்து கொடுத்திருக்கிறார்களா தெரியவில்லை. ஊருக்கு சென்றால் கட்டாயம் அம்மாவிற்கு பிடித்ததாக சமைத்து கொடுக்க வேண்டும், பிடித்த பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.திருமணமாகும் வரை அவளுடைய அம்மா தான் அவளுக்கு எப்போதும் உணவை ஊட்டி விட்டு பழக்கம். அதுவரை ஏதோ சின்ன குழந்தையாக இருந்தவளின் வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளில் தான் எவ்வளவு மாறி போய் விட்டது? இந்த திருமணம் குடும்பம் இவற்றை எல்லாம் யார் கண்டுபிடித்தது... அப்படியே மகளாகவே எந்த வித கவலையும் இல்லாமல் எப்போதும் இருந்தால் எவ்வளவு இனிமையாக