வீட்டில் தங்கை மீனா மட்டும் தனியாக இருந்தாள். முத்தையா குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு அம்மா வீடு வரும் நேரத்துக்கு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிப்பதாகப் பாவனை செய்து கொண்டிருந்தான். அம்மா வரும் நேரம் நெருங்க நெருங்க அம்மாவின் சகதொழிலாளி தன்னைக் கேசவன் வீட்டில் பார்த்த நினைவு அடிக்கடி வந்தவாறிருந்தது. அம்மாவுக்குத் தெரிந்து விட்டிருக்குமா? பயம் கவிந்தது.
சனியன், ஏன் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்? பார்த்தால் எல்லாம் பம்மாத்து வேலை. சில சினிமா காட்சிகளைக் காட்டி அப்புறம் தலையில்லாத முகந்தெரியாத முண்டமான பெண்களை வெட்டி ஒட்டி... எல்லாம் சுத்த ஏமாற்று வேலை. இதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு, அம்மாவிடம் பொய் சொல்லி, நாளைக்குப் பள்ளிக்கூடத்திலும் பொய் சொல்லி.... சீச்சீ!
அம்மா ஏழு மணிக்கு வந்தாள். அவள் முகத்தில் தன் குட்டு உடைந்துவிட்ட அறிகுறிகள் தெரிகின்றனவா என்று முத்தையா ரகசியமாகப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. அம்மாவின் முகத்தில் நீண்ட நேர உழைப்புக்குப் பின் தெரியும் வழக்கமான களைப்பும் இறுக்கமும்தான் இருந்தன போலத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் குளிக்கப் போனாள். அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஒன்றும் அம்பலமாகவில்லை.
அம்மா பகல் ஷி·ப்ட் செய்யும் போதெல்லாம் இரவில் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். முத்தையாவுக்கு பயங்கள் தெளிந்தவுடன் காலையில் அம்மா சமைத்த ஆட்டுக் கறியின் நினைவு வந்தது. நாக்குச் சப்புக்கொட்டிக் காத்திருந்தான்.
அம்மா குளித்து வந்ததும் ஒன்றும் பேசாமல் கறியைச் சுடப் பண்ணி சாப்பாடு எடுத்து வைத்தாள். குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் அவள் டிவி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள்.
"ஏன் அம்மா, நீங்க சாப்பிடலயா?" என்று மீனா கேட்டாள்.
"நீங்க சாப்பிடுங்க! எனக்குப் பசியில்ல!" என்றாள் பார்வதி.