"ஏம்மா இப்படியெல்லாம் பேசிற?" என்றான்.
"ஆமாப்பா! நான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சீரளிஞ்சி போனாலும் நீ நல்லா படிச்சி இந்தக் குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வருவேன்னு நெனச்சேன். அது நடக்கப் போறதில்லன்னு நீ காட்டிட்ட! நீ உங்கப்பனப் போலத்தான் இருக்கப் போற! படிப்ப குட்டிச் சுவராக்கப் போற! ஒரு வயசு வந்ததும் ஒருத்திய ஏமாத்தி இழுத்து ஓடி இப்படி நம்ப குடும்பம் மாதிரி இன்னொரு லட்சியமே இல்லாத ஏழைக் குடும்பத்த ஆரம்பிக்கப் போற! குழந்தைகளப் பெத்துப் பாழாக்கப் போற! அதையெல்லாம் நான் உயிரோட இருந்து இன்னொரு தடவ பாக்கணுமா?"
அவள் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் முதுகில் அடி அடியென்று அடித்திருக்கலாம். முன்பு அப்படி அடித்து அவன் தாங்கியிருக்கிறான். ஆனால் இந்தச் சொற்களின் அடி அவன் மனத்தில் வெட்டு வெட்டாகக விழுந்தன. மனத் தசைகளை இரத்தம் வழியக் கிழித்தன.
"ஏம்மா இப்படியெல்லாம் பேசிற? நான் என்ன செஞ்சிட்டேன் இப்ப?" அழுகையோடு கேட்டான்.
"ஒனக்குத் தெரியாதா முத்தையா? தெரியலன்னா நான் சொல்லிப் பிரயோஜனம் இல்ல! தெரியாத மாதிரி நடிக்கிறேன்னுதான் அர்த்தம். எத்தனையோ பொய்யோட இன்னும் ஒரு பொய்ய சொல்லப் போற அவ்வளவுதானே!" மெதுவாக முகத்தைத் திரும்பிக் கொண்டாள்.
பேசாமல் உட்கார்ந்து கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தான். இனி மறைக்க முடியாது. இது முன்பு போல இல்லை. அம்மா முன்பு போல அடிக்காமல் ஏசாமல் தானாக தன் கழுத்தில் இறுக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டு அதன் ஒரு முனையை அவன் கையில் தந்திருக்கிறாள்.
மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னான். "சரி அம்மா, நான் செஞ்சது தப்புத்தான். பள்ளிக்கூடம் போகாம கேசவனோட சேர்ந்து படம் பார்த்தேன். நெசந்தான். இனிமே சத்தியமா அப்படி செய்ய மாட்டேம்மா! என்ன மன்னிச்சிரும்மா!"
திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். "பிரயோஜனம் இல்ல முத்தையா! உன்னோட சத்தியம், என்னோட மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு மதிப்பும் கெடையாது. நீ சத்தியம்