அவள் தலைமாட்டிலிருந்து ஐந்து வெள்ளியை எடுத்துக் கொடுத்து "ஏதாச்சும் கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு, ராத்திரிக்கு வரும்போதும் ஏதாச்சும் வாங்கிட்டு வந்திரு!" என்றாள்.
காசை வாங்கிக் கொண்டு "ஏம்மா, ஒடம்பு சரியில்லையா?" என்று கேட்டான்.
ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு பேசாமல் போனான்.
பள்ளிக்கூடத்தில் இருந்த போதும் அம்மா நினைவு அதிகமாக இருந்தது. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அம்மா உடல் தளர்ந்திருக்கிறாள். இப்படி அவள் படுத்து அவன் பார்த்ததே இல்லை. இப்படி இருந்தால் எப்படி வேலைக்குப் போவாள்?
ஒரு வேளை தான் செய்தது தெரிந்து விட்டதா? தெரிந்தால் ஏன் கேட்கவில்லை? ஏன் கத்தவில்லை? ஏன் அடிக்கவில்லை? தெரிந்திருக்காது. வேறு காரணமாக இருக்கலாம்.
அன்று மாலை வீட்டுக்கு கொஞ்சம் அவசரமாகவே வந்தான். வரும் வழியில் மறக்காமல் எல்லாருக்கும் ரொட்டிச் சாணாய் வாங்கிக் கொண்டு வந்தான்.
அவன் சந்தேகப் பட்டதைப் போலவே அம்மா வேலைக்குப் போகாமல் படுத்தபடிதான் இருந்தாள். தலை கலைந்து முகம் ஒடுக்கு விழுந்து கண்மூடிப் படுத்திருந்தாள். மீனாவின் குழந்தை முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது. வீடு முழுவதும் இருள் கவிந்திருந்தது.
"என்ன மீனா, அம்மா ஏன் இப்படி இருக்காங்க?" என்று கவலையுடன் தங்கையைக் கேட்டான்.
"தெரிலிய! ஒடம்பு சரியில்லன்னுதான் சொல்றாங்க. எங்கிட்டயும் சரியா பேசமாட்டேங்கிறாங்க! மூணு நாளா சாப்பாட்டையே தொடல. தண்ணி மாத்திரம்தான் குடிக்கிறாங்க. அடுத்தவீட்டு அம்மா வந்து பாத்திட்டுப் போனாங்க. "ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போகவா"ன்னு கேட்டாங்க. அம்மா வேணான்ட்டாங்க!" என்றாள்.
முத்தையாவின் தொண்டைக் குழிக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களில்