(Reading time: 9 - 17 minutes)

 

வர் பேசுவதைக் கேட்டு நான் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். 

"அடுத்தவன் சொல்ற போல நடந்துக்ககூடாது மாரிமுத்து. நாளைக்கு உன் புள்ளை மேல்படிப்பு படிக்க ஆசைப்பட்டா காசு இல்லாம முடியுமா? நல்லவனா இருக்கிறது முக்கியமில்ல, காசு உள்ளவனா இருக்கிறது தான் முக்கியம். இல்லனா பொஞ்சாதி கூட மதிக்கமாட்டா" என்று கூறிக்கொண்டே இஸ்திரிக்கான கூலியை என்னிடம் நீட்டினார். 

அவர் கூறியதை எல்லாம் நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் நான். எப்பொழுதும் மதிய வேளையில் உறங்கும் நான் அன்று உறங்காமல் ஆலமரத்தடியில் படுத்தபடி மழை பொழியத் தயாராகிக்கொண்டிருக்கும் கருமேகங்களை வெறித்தபடி சிந்தித்துக்கொண்டிருந்தேன். செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு அன்று மாலை நொண்டியபடி வீடு வந்துசேர்ந்தாள் கனகம். 

"என்ன புள்ள நொண்டிட்டு வர?" என்று பதறியபடி கேட்டேன் நான்.

"காலுல கல்லு விழுந்திடுச்சி. நடக்கவே முடியல" என்றாள் அவள்.

"நீ கொஞ்சம் தூங்கு புள்ள. எல்லாம் சரி ஆயிடும்" என்று கூறிவிட்டு வீங்கிய அவள் பாதங்களுக்கு பச்சிலை வைத்து பத்து போட்டுவிட்டேன் நான். 

ன்று இரவு மழை கோரத்தாண்டவம் ஆடியது. எங்கள் வீட்டு கூரை ரொம்ப காலமாக மாற்றப்படாமல் இருந்ததனால் மழை நீர் வீட்டுக்குள் வர ஆரம்பித்தது. நீர் ஒழுகும் இடத்தில் பாத்திரங்களை வைத்தோம். வலியால் முனகிக்கொண்டே கனகம் பேசினாள்.

"இந்த வீட்டு கூரைய மாத்தணும்னு எத்தன தடவ சொல்றது? நீ வேலைக்கு போனாலும் பரவால்ல. நான் ஒத்த மனுஷியா எத்தன நாள் கஷ்டபடுறது? நாளைக்கே எனக்கு எதாச்சும் ஆச்சுன்னா நம்ம புள்ளைய வச்சிகிட்டு நீ என்ன செய்யபோறியோ?" என்று நொந்தபடி படுத்தாள் கனகம். 

அன்று இரவு என் உறக்கம் தொலைந்துபோனது. இத்துணை நாள் நான் தவறாக நடந்துகொண்டேனா? என்று எனக்குள் நானே யுத்தம் புரிந்துகொண்டிருந்தேன். அடுத்த நாளும் மழை விடாமல் பெய்தது. மழை நீரில் போராடியபடி சமையல் செய்துகொண்டிருந்த கனகத்தின் அருகில் சென்றேன் நான். என்னை நோக்கினாள் அவள். 

"நான் சினிமா கொட்டகைக்கு வேலைக்கு போறேன் புள்ள" என்றேன்.

அவளால் இதை நம்ப முடியவில்லை. "நிஜமாத்தான் சொல்லுறியா?" என்று கூறியபடி எழுந்தாள்.

"ஆமா. அஞ்சு துணி இருக்கு. அத நாளைக்கு இஸ்திரி பண்ணிட்டு, மதியத்திலிருந்து வேலைக்கு போறேன்" என்று சொல்லிவிட்டு கனத்த இதயத்தோடு வெளியே சென்றேன். நான் மனம் மாறியதை எண்ணி கனகம் அகமகிழ்ந்தாள். 

ரண்டு நாட்கள் விடாமல் மழை பொழிந்ததால் ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து ஆரம்பமானது. நெடு நாட்கள் கழித்து அந்த அற்புதக்காட்சியை காணுகையில் என் கண்கள் என்னையும் அறியாமல் கண்ணீரைச் சொரிந்தன. 

அடுத்த நாள், கொடுக்க வேண்டிய கடைசி துணிகளை இஸ்திரி போட்டு முடித்துவிட்டு கண்ணீரோடு அமர்ந்திருந்தேன் நான். என்னிடமிருந்து ஏதோ ஒன்று பிரிந்து செல்வதைப் போன்ற உணர்வு என்னுள் எழுந்தது. இஸ்திரிபெட்டியின் சூடு அடங்கும் வரை வெறித்துக்கொண்டிருந்தேன். என் நிலையைப் புரிந்துகொண்ட கனகமும் என் மகனும் அமைதியாக இருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் சூடு அடங்கிவிடும் என்று என் மனம் வலியோடு சொன்னது. அப்பொழுது தர்மகர்த்தா சண்முகம் அவசர அவசரமாக என்னை நோக்கி ஓடி வந்தார்.

"மாரி! மாரி! இஸ்திரி பெட்டில சூடு இருக்குல. இந்த சட்டைய இஸ்திரி பண்ணி குடுப்பா. நேத்து வரைக்கும் மூணு மணி நேரம் போன கரண்ட்டு இப்போ ஆறு மணி நேரத்துக்கு மேல போகுது. கரண்ட்டு பஞ்சம்னு வேற பேப்பர்ல போட்ருக்காங்க. இன்னிக்குனு பாத்து அரசு அதிகாரிங்க வேற கோவிலுக்கு வராங்களாம். அவங்க முன்னாடி சுருங்கிப்போன சட்டைய போட்டா நல்லாவா இருக்கும்?" .என்று கூறியபடி சட்டையை என்னிடம் கொடுத்தார்.

நான் அவர் பதற்றத்தை உணர்ந்து வேகமாய் இஸ்திரி செய்து கொடுத்தேன். அவரைப் போன்று பல நபர்கள் துணிகளைக் கொண்டு வந்தார்கள். "கரண்ட்டு இல்ல தம்பி. கொஞ்சம் சீக்கிரம் தேச்சி குடு" என்றார்கள். நான் இன்முகத்தோடு வேலையை செய்தேன். என் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியைக் கண்டு கனகமும் சந்தோசமடைந்தாள். அடுத்த சில நாட்களில் சலவை செய்வதற்கும் இஸ்திரி செய்வதற்கும் துணிகள் அதிகமாய் சேர்ந்தன. 

ஊரில் மேலும் மின் பஞ்சம் அதிகமானதால் என் தொழில் மறுபடியும் துளிர்விடத்துவங்கியது. மூட்டை மூடையாகக் குவிந்திருந்த துணிகளைத் துவைக்க ஆற்று நீர் உதவி புரிந்தது. நதியின் குளிர் நீரில் நின்றுகொண்டு அழுக்குத்துணியை பரவசத்தோடு துவைத்துக்கொண்டிருந்தேன் நான்.

எனக்கு உதவி செய்ய கனகமும் ஆற்றுக்கு வந்தாள். 

"புள்ள, உனக்கு தான் காலுல அடிபட்டு இருக்குல. எதுக்கு வந்த?"

"காலுல தான அடிபட்டு இருக்கு. கையில இல்லையே. நீ ஒரே ஆளு இத்தனை துணிய துவைக்க முடியுமா?" என்றாள் கனகம். நான் அவளைப் பார்த்து புன்னகைத்தேன். 

"அப்பா! மூணாவது வீதில இருக்கவங்களும் துணி கொடுத்திருக்காங்க" என்று கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தான் மணி. கழுதையிலிருந்து துணிமூட்டையை இறக்கமுடியாமல் தடுமாறினான்..

"டேய், ராசா! இரு வரேன்" என்று கூறி அவனை நோக்கி ஓடினேன் நான்.

திடீரென கனிந்த இந்நாட்கள் ஒரு நாள் மாறலாம். மாறும் வரை நிம்மதியோடும் சந்தோசத்துடனும் என் தொழிலைச் செய்வேன் நான். அதோ! சலசலக்கும் நதி, 'சீக்கிரம் வந்து வேலை செய்!" என்று அழைக்கிறது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.