(Reading time: 15 - 30 minutes)

பெண்- மீரா ராம்.

This is entry #32 of the current on-going short story contest! Please visit the contest page to know more about the contest.

சைகளும் கனவுகளும் நிறைந்த உலகில் வாழும் நிலையைப் பெற்றது தன் வரமா?... சாபமா?? என்ற கேள்வியுடன் காலை விடியலை உணர்ந்தாள் அவள்...

பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்தை அடைந்த போது மணி சரியாக 8.50... பத்து நிமிடம் முன்பாகவே வந்துவிட்டாள்...

கணிணியை உயிர்ப்பித்து தன் வேலையை ஆரம்பித்து சரியாக ஒரு மணி நேரத்தில் அவளது மேலதிகாரியிடமிருந்து போன் உடனே அவனது அறைக்கு வர வேண்டுமென்று...

போனை கீழே வைத்தவள் சிந்தியதென்னவோ விரக்தி புன்னகை மட்டும் தான்.. அதற்கும் மேல் தாமதிக்காமல் சென்றவள், முதலில் கண்டது அவனின் எகத்தாள பார்வையை தான்...

வழக்கம் போல் கண்டும் காணாதவாறு நின்றவள், தன்னை அழைத்த காரணத்தை கேட்க, ஏன் அதை சொல்லவில்லை என்றால் இங்கே நிற்க மாட்டாயா என்ற குதர்க்கமான கேள்வியுடன் அவளை வார்த்தைகளால் காயப்படுத்த ஆரம்பித்தான் அவன்...

அவளது நெருக்கமான தோழிகளிடம் சில சமயம் அவள் தன் நிலையை மேலோட்டமாக சொல்லும்போது, அவர்கள் சொல்வதோ ஒரே ஒரு பதில் தான்... நீ ஏன் அங்கே வேலைக்கு போகிறாய்?... நின்று விடு... வேறு வேலை தேடு...

வேலையை விடுவது எளிது தான்... ஆனால் அதன் பின் வேலை கிடைப்பது அரிதாயிற்றே... அதுவும் இந்த காலத்தில் கேட்கவே வேண்டாம்... படித்து நான்கைந்து பட்டம் வைத்திருந்தாலும் வேலை என்னவோ எட்டாக்கனி தான்...

அதுவும் அவள் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் அவளால் வேலையை விட இயலாது... அப்படியே விடுவதாக முடிவெடுத்தாலும், வேறு வேலை கிடைக்கும் வரை இதை பிடிமானமாக அவள் பிடித்தே ஆக வேண்டும்...

அதற்காக தன்மானத்தை விட்டு, சுயகவுரவத்தை விட்டு, வேலைப் பார்க்க இயலாது தான்... எனினும் தன்மானம் சோறு போடுமா என்ன அவளின் குடும்பத்திற்கு?... இல்லை வயதான தாய்-தந்தையரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளத்தான் அந்த தன்மானம் உத்திரவாதம் தருமா?...

நான் நீங்கள் கொடுத்த வேலையைப் பார்க்க செல்ல வேண்டும் என்று அவள் கூற, அதை நீ இப்போது செய்ய வேண்டாம் என்று அவன் கூறினான்.... என்னது என்ற யோசனையுடன் அவள், இல்லை நான் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்ல, நான் சொல்லும் வேலையை முடிக்க தான் நீ இருக்கிறாய்... நீ சொல்வதை கேட்க நான் ஆளில்லை... புரிந்ததா?... அந்த வேலையை முடிக்க வேண்டாம்... இதை முடி முதலில்.. போ... என்று விரட்டி விட்டு அவள் மௌனமாக செல்வதை வேடிக்கைப் பார்த்து சிரித்தான் அவன்...

வெளியே சென்றவளுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை... நேற்று, தான் வேலையை செய்யவே இல்லை அதும் அவன் சொல்லும் வேலையை செய்யவே இல்லை என்று அவனது மேலதிகாரியிடம் அவளைப் பற்றி புகார் செய்து திட்டு வாங்க வைத்தவன், இன்று நீ அந்த வேலையை செய்யவேண்டாம் என்கிறான்… சில மாதங்களுக்கு முன்பு வரை வேறொரு துறையில் வேலைப் பார்த்தவளை அவனது கீழ் கொண்டு வந்து இப்படி அவளை ஆட்டிப்படைக்கின்றான் அவன் தினந்தோறும்...

பல சமயம் அவன் மேல் அவளுக்கு கோபம் மிகுதியாக வரும்... கேட்டு விடலாமா, என்னை ஏன் இப்படி அலைக்கழித்து சாகடிக்கிறாய் என்றும் அவளுக்கு தோன்றியதுண்டு... ஆனால், கேட்பதற்கோ, சண்டை போடுவதற்கோ ஒரு நிமிடம் ஆகாது... ஆனால் அதன் பின் வரும் விளைவுகள் ????... அவள் ஒன்றும் செய்யாமலே அவளை இந்த பாடு படுத்துகிறவன், அவள் எதிர்த்து கேள்வி கேட்டால், சும்மா விட்டு விடுவானா?... ஆனால் அவள் அவனுக்கு பயந்து அவனை எதிர்க்காமல் இருக்கிறாள் என்பது அவன் எண்ணம்...

உண்மையில் அவள் பயப்படுவது அவள் குடும்பத்தை எண்ணி... சாக்கடையில் கல் எறிந்தால் அது தன் மேல் தான் படும் என்ற எண்ணம் அவளுக்கு உறைத்ததாலேயே அவள் ஒதுங்கி போகிறாள்... ஆனால், அந்த ஒதுக்கம் அவன் அவளை மேலும் ரணப்படுத்த உதவுகிறது என்பதை கடவுள் அறிந்தும் என்ன பயன் ???...

இவ்வளவு சொல்கிறேன்... செய்கிறேன்... வாயைத் திறக்கிறாளா பார்... என்ற அவனின் கோபத்தை அது மேலும் கிளறுகிறது என்பதும் விதி புரிந்து கொண்டு என்ன செய்ய ???...

நினைத்தாளா அவள்??... தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று... கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள் தான்... அவள் தந்தை பெரும் செல்வந்தர்... உடன் பிறப்புக்கள் நான்கைந்து பேர்... கூட்டு குடும்பம்... அவளின் தாயும் தகப்பனும் தாய்-தகப்பனில்லாத அவளின் சித்தப்பாக்களுக்கு எல்லாமாக இருந்து வளர்த்தனர்..

ஒற்றைப் பெண்ணாய் இவள் மட்டும் தனித்திருக்க, அவளின் சித்தப்பாக்களுக்கு எல்லாம் இரண்டு மூன்று பிள்ளைகள்... அந்த வயதிலே தனிமை உணர்வு அதிகம் ஆட்கொள்ளவில்லையெனினும் ஓரளவு ஆட்கொண்டது உண்மைதான்..

என்னதான் அக்கா, அக்கா என்று அவர்கள் அவளை சுற்றி வந்த போதிலும், சொந்த தங்கை ஆகிவிட மாட்டாளே அவள்... அப்படி ஒரு எண்ணத்தை விதைத்தனர் அந்த பிஞ்சுகளின் மனதில் அவர்களின் தாயார்... தெளிவாய் சொல்ல வேண்டுமென்றால் அவளின் சித்தப்பாக்களை மணமுடித்த சித்திகள்...

கணவன்மார்களை மனைவியர் சொல்வதெற்கேற்ப ஆட வைத்து கூடப்பிறந்த அண்ணனின் தொழிலையே நஷ்டமாக்கினர்... ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நம்பிக்கைதுரோகம் செய்தனர்... கூட இருந்தே குழிப் பறித்து அவரை ஒன்றும் இல்லா செல்லக்காசாக்கினார்கள்... அன்று வரை, தம்பியர் தான் உலகம் என்றெண்ணியவருக்கு அவர்களின் உண்மை சொரூபம் புரிய நேர்ந்த வேளை, தன்னை நம்பி வந்த மனைவிக்கும், தான் பெற்ற ஒற்றை மகளுக்கும் ஒன்றுமே சேர்த்து வைக்காததும் சுட, காலம் போன பின்பு, கூலி வேலைக்கு சென்றார்.... இருந்த இடத்தை வித்து மகளை படிக்க வைத்து, அவளின் எதிர்காலத்திற்கு பணம், நகை சேர்த்து வைக்காமல், படிப்பை மட்டும் ஆதாரமாய் கொடுத்திருந்தார் அவளுக்கு...

அப்படி கிடைத்த ஆதாரத்தை வார்த்தைகளால் குத்தி கிழிப்பவனுக்காக ஒரே நொடியில் தூக்கி எறிந்திட முடியுமா அவளால்...???...

பெருமூச்சுடன் அவனது அறையிலிருந்து வெளிவந்து தன் இருக்கையில் அமர்ந்து விட்டு, அன்றைய வேலையை செய்து முடித்தாள் பிழையில்லாது...

வீட்டிற்கு வந்ததும் தாயுடனும் தகப்பனுடனும் சிறிது நேரம் பேசி சிரித்துவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது அவளின் கைபேசி சிணுங்கியது...

திரையில் மின்னிய பெயர் பார்த்ததும், கொஞ்சம் மனம் லேசாக, எடுத்துப் பேசினாள்... அக்கா......... என்ற அவனின் குரல் ஒலிக்க, சற்று நிம்மதியாக உணர்ந்தாள் அவள்... அவன் அவளுக்கு ரத்த பந்தத்தில் உறவு இல்லை... ஆனாலும், சொந்தமாகவே அவன் பேச்சு இருக்கும்... அவளின் தோழி மூலம் அறிமுகமானான் அவன் அவளுக்கு... அன்றிலிருந்து இன்று வரை, அவன் நல்ல தமையனாக தான் இருக்கின்றான் அவளுக்கு...

அவனிடம் அவள் அதீத உரிமை எடுத்ததில்லை... எடுத்துக்கொள்ள விழைந்ததுமில்லை... அதனால் தானோ என்னவோ இன்று வரை அவர்கள் சொந்தமாயிருக்கிறார்கள் இதுவரை...

இந்த எண்ணம் அவளுக்கும் உண்டு... ஆனால், அதை அவளின் பள்ளியில் படித்த சீனியர் அக்கா ஒருவரும் சொல்லுவதுண்டு அடிக்கடி...

அக்காவின் நினைவு எழ, அமைதியாய் கண்மூடி யோசித்தாள் அவள்... சரியாக ஒருவருட பழக்கம் தான்... ஆனாலும், என்னவோ மனதளவில் மிக நெருங்கியது போல் ஒரு உணர்வு... பள்ளியில் படித்த பொழுது பார்த்து சிரித்துக்கொள்வதோடு சரி, பின்பு ஒரு நாள் சமூக வலைத்தளத்தில் சந்தித்த பொழுது மீண்டும் துளிர்விட்டு தொடர்ந்தது அவர்களின் நட்பு...

அக்கா அவளுக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிய வைத்தார்கள்... வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை கற்றுக்கொடுத்தார்கள்... அவளுக்காக பரிதாபம் கூட அவர்கள் கொண்டதுண்டு...

கிட்டத்தட்ட அடி ஆழத்தில் கிடந்தவளை மேலே தூக்கிவிட்டு நிற்க வைத்த பெருமை அவர்களையும் சாரும்...

அடி ஆழம்???... அப்படி என்ன ஆழம்... வேறென்ன இருக்க முடியும்??... காதலைத் தவிர???...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.