(Reading time: 4 - 8 minutes)

நானும் ஒரு பெண் தான் !? - மாலதி . டி

 முகிலினி குட்டி… எழுந்திருடா… இன்னும் எவ்ளோ நேரம் தூங்குவ???” என்ற அம்மாவின் குரல் கேட்டது. எனக்கேனோ எழுந்திருக்கவே தோன்றவில்லை. என்ன செய்வது?? எழவில்லை என்றால் இன்னும் கெஞ்ச ஆரம்பித்து விடுவார். எனக்கென்னவோ இந்த வீடு பிடிக்கவில்லை. முன்பு நான் இருந்த வீடு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்ந வீட்டில் இருந்த போது எனக்கும் அம்மாவிற்கும் ஒரு நெருக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அம்மாவைச் சுற்றிலும் பல பேர். எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்பதை எப்படி அம்மாவிடம் சொல்வது. சொன்னாலும் அம்மாவுக்கு நான் சொல்வதெல்லாம் புரிய போவதும் இல்லை. “சரி… கண்களைத் திறந்து விடுவோம்…அம்மாவை ரொம்ப நேரம் காக்க வைக்கக்கூடாது”

“ம்மாஆஆஆ”…

“ம்ம்ம்… இப்போதான் நீ குட் கேர்ள்”… “சரி வா… நாம சாப்பிடலாம்”… “ஏன் குட்டி இன்னிக்கு ரொம்ப அமைதியா இருக்கீங்க???” என்ற அம்மாவின் கேள்விக்கு ஒரு சோம்பலான புன்னகையை மட்டும் உதிர்த்தேன். பெண் குழந்தையைப் பிடிக்காத குடும்பத்தில் பிறந்து நான் இன்னும் நடக்கவில்லை என்பதால் அம்மா தினம் தினம் இந்தக் குடும்பத்தில் வாங்கும் ஏச்சு எனக்குப் பிடிப்பதில்லை. “ஏண்டி ஒன் பொண்ணு நடக்கமாட்டாளா.. உட்கார்ந்து கிட்டும் நின்னுகிட்டுமே இருக்கா… போய் டாக்டர பாருங்களேன்.. அப்புறம் நடக்கவே முடியாம போய்டப் போகுது…” போன்ற கடுஞ்சொற்கள் அம்மாவின் காதில் மட்டுமல்ல என் காதிலும் அடிக்கடி விழுது…“பரவாயில்லை… பாமா… விடு… முகிலினி எப்போ நடக்குறாளோ அப்போ நடக்கட்டும்… அது வரை யார் எது சொன்னாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுடு…” என்று ஆறுதல் கூறும் அப்பாவை எனக்குக் கொஞ்சம் தான் பிடிக்கும். “என் மகள் … நீங்க ஒன்னும் நாட்டம பண்ணத் தேவையில்லை” என்று அப்பா சொல்லி இருக்கணும்.

ம்ம்ம்… இப்போவெல்லாம் அம்மாவிடம் பேசக்கூடத் தோன்றவில்லை… கிட்சனில் ஏதோ வேலையா இருக்காங்க போல… சரி .. நாம் தான் ஏதாவது முயற்சி செய்து பார்ப்போமே…

ம்ம்ம்… ஐயோ எழுந்து நிற்கவே இந்தப் பாடா இருக்குது… இதுல எங்க நடக்குறது… பேசாம உட்கார்ந்துகுலாம்… உட்கார்ந்தா அப்புறம் எப்படி நடக்குறது??? ச்சே… இதுக்குதான் பேசாம அந்த வீட்டிலேயே இருந்துருக்கலாம்னு சொல்றது… மத்தவங்களுக்காக இல்லனாலும் எனக்குப் பிடிச்ச அம்மாவுக்காக நான் ஏதாவது செஞ்சித்தான் ஆகனும்… பெண் பிள்ளையா பிறந்தாலே இப்படித் தானோ???

ம்ம்ம்… ப்ப்பாஆஆ… ஆவ்… எப்படியோ நின்னுட்டேன்… சரி… அப்படியே இந்த நாற்காலிய புடிச்சி புடிச்சி நடந்து பார்ப்போம்… ஐய்ய்ய்ய்ய்… நடக்க முடியுதே… அம்மாவைக் கூப்பிட்டுக் காட்டுவோமா… ம்ம்ம்ம்… ஐயோ… முருகா..!!!!    இப்படி பப்பரப்பானு விழுந்திட்டேனே… நல்ல வேளை … வீட்டில என்னையும் அம்மாவையும் தவிர யாருமேயில்லை… இல்லனா இப்படி விழுந்து வச்சதுக்கு கெக்க பெக்கனு சிரிச்சி வைப்பாங்க … இல்லனா… ஐயோ.. விழுந்துட்டியானு.. தூக்கி விடுவாங்க… இந்த ரெண்டுமே எனக்குப் பிடிக்காது.. வீட்டில யாரும் இல்லாதது நல்லதா போச்சி…

சரி.. அதான்.. யாருமேயில்லையே… மீண்டும் ஒரு முறை எப்படியாவது நடக்கப் பார்ப்போம்..ம்ம்ம்.. ஆஹா.ஆஆஆ… நடக்கமுடியுதே… ம்ம்ம்… எதையுமே பிடிக்காமலேயே நடக்க முடியுதே… அம்மா பார்த்தா நிச்சயம் சந்தோஷம் படுவாங்க… இன்னும் கொஞ்ச தூரம் நடந்து அம்மாக்கிட்ட போவோம்… முருகா… என்னை விழ வச்சிடாதே… ம்ம்ம்… இன்னும் கொஞ்ச தூரம் தான்..

“ம்மாஆஆ”” என்ற என் குரலைக் கேட்டு அம்மா திரும்பிப் பார்த்தார்… அவர் கண்ணில் மகிழ்ச்சி பொங்கித் ததும்பியது. “முகில் குட்டி… நடந்துட்டியா… செல்லக்குட்டி… எப்டிடா???” என்ற அம்மாவின் குரல் எனக்குள்ளே மகிழ்ச்சியைப் பெருக்கெடுக்க வைத்தது. அம்மாவின் இந்த மகிழ்ச்சியைக் காண இனி என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வேன்.

அம்மா ஒரு கையில் என்னை அணைத்தவாறு அப்பாவிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார். “என்னங்க நம்ம பொண்ணு நடந்துட்டாங்க… இனிமே நம்ப வீட்டில யாரும் நம்ப பொண்ண தப்பு சொல்ல மாட்டாங்க தானே…நீங்க இன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு வாங்க.. நம்ப பொண்ணு நடந்துட்டாங்க… வாங்க வந்து பாருங்க..” என்று உள்ளக் கிடக்கை அம்மா கொட்டித் தள்ளினார்.

அம்மாவின் முகத்தில் இருந்த பூரிப்பை அந்த இருட்டு கருவறை வீட்டிலிருந்திருந்தா பார்த்திருக்க முடியுமா?? ஒரு வயதைத் தாண்டி ஒரு மாதமே ஆகியிருக்கும் நான் நடக்காததால் அத்தனை பேருடைய இழிச்சொல்லையும் தாங்கிய அம்மாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… அம்மாவின் கன்னத்தில் என் அதரங்களை அழுத்திப் பதித்து முத்தமிட்டேன்… சிரித்தப்படியே…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.