(Reading time: 33 - 65 minutes)

மூன்று மணிக்கு விழிப்பு வர, மூச்சுவிட முடியாமல் மொத்த நெஞ்சும் அடைத்திருக்க, ரண ரணமாய் நுரையீரல் விரிய, அதற்குள் கல்லாய் அவன் மரணம், பிரிவு, இனி பார்வைக்கு கூட அவன் இல்லை என்ற பெரு உண்மை எல்லாம் சமைந்திருக்க “ஐயோ யேசப்பா என்னால தாங்க முடியலையே...ஐயோ என்னால முடியலையே...” என் இருகை உயர்த்தி முழந்தாளிட்டு சுவரில் முகம் புதைத்து நான் கதறிய கதறல் இன்னும் ஞாபகம் இருக்கின்றது.

மெல்ல புரிய நான் யேசுவின் மார்பில் அணைப்பில். அவர் அழுதுகொண்டிருந்தார் என்னோடு.

“நீ ஏன் அவனை காதலிச்ச?” என்று அவர் குற்றம் குறை சொல்லவில்லை.

அழுதார்.

“மகளே உன் வலி, உன் வேதனை அதன் ஒவ்வொரு துகளும் அடி ஆழமும் அனைத்தும் எனக்கும்” என்றது குரலற்ற அவர் மொழிதல்.

அவர் அழுகையில் கரைந்து மறைந்ததோ என் வலி? என் அழுகை நின்று போனது. மந்திரம் போல் மறு நொடியே நான் ஆடி பாடிடவில்லை. ஆனால் அன்றிலிருந்து நான் எனக்குள் மீண்டுமாய் உயிர்க்க தொடங்கியது ஞாபகம் இருக்கின்றது.

அவனை பற்றிய வலி வேதனை தவிப்பு துடிப்பு தனிமை தாங்கமுடியாமை எல்லாம் மெல்ல மெல்ல மறைய தொடங்கியது.

“மரணமே உன் கூர் எங்கே? “ என்ற வசனம் போன்று ப்ரின்ஸின் மரணம் அதன் கூரை, அதன் கத்தி குத்தலை, அது என் உணர்வுகளில் ஏற்படுத்திய கொலை தாக்குதலை இழக்க தொடங்கியது.

இதோ இப்போதும் ப்ரின்ஸின் ஞாபகம் நன்றாக இருக்கின்றது என் நினைவுகளில். ஆனால் என் உணர்வுகளில் அவன் இல்லை. காதல் என்பது உணர்வானால் அவன் மீதிருந்த காதல் கர்த்தரின் கண்ணீரோடு. இங்கு என்னிடம் இல்லை.

ஆனால் மறுபடியும் திருமணமா? இன்னொரு காதல் கொள்ள என் ஆன்மாவால் இயலாது. காதல் இன்றி கணவனுடன் காலம் தள்ள ....ம்கூம் முடியாது. கூடவும் கூடாது. அது கணவனாய் வரும் மனிதனுக்கு செய்யும் அநியாயம் அல்லவா? இப்படியாய் ஒரு முடிவு.

காரணம் புரியாமல் அப்பா கொதித்தார். அம்மா என் கால் பட்ட தரையில் விழுந்து இரவெல்லாம் அழுதார்.

பெற்றோர் பற்றிய நியாய உணர்வு திருமணத்திற்கு சம்மதிக்க செய்தது. முதல் வரியில் கொண்ட தீர்மானத்திற்கும் அதுவே காரணம்.

மணப்பவனை காதல் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் சம்மதித்தேன் திருமணத்திற்கு.

இவனை காதலிக்க வேண்டும் என முடிவெடுத்தால் அவன் மீது வந்துவிடுமா காதல்?

அப்படி ஒருவேளை காதல் வந்துவிட்டாலும் அதன் பின் இவனும் எனக்கில்லாமல் போய்விட்டால்...? குழந்தை என்றான பின்பு குழந்தை இறந்து விட்டால்.....ஒரு வேளை விபத்தில் எனக்கோ இவனுக்கோ கை கால் போய்விட்டால்...ஒரு விபத்தின் தாக்கம் எல்லாவற்றையும் யோசிக்க செய்கிறது.

இந்த மரணத்தை என் உயிருக்கு இணையானவனை இழந்த இந்த மரணத்தை, இத்துன்பத்தை, இழப்பை என்னால் தாண்டி மீண்டுமாய் எழ முடிந்திருக்கிறது எனில் இனி என்னால் தாங்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. எதுவந்தாலும் மீண்டுமாய் உயிர்ப்பேன்..இன்று வந்த தெய்வம் இனியும் துணை வரும் .மனதிற்குள் ஒரு தைரியம் விடுதலை.

துணிந்து இறங்கிவிட்டேன் மீண்டும் காதலுற.

இதோ இன்று பெண் பார்க்கும் நிகழ்வு. இருவரும் முக முகமாய் பார்க்க மட்டுமே இது. அப்பா மட்டுமல்ல நானுமே எனது கருத்துகளை, உயிர் போயினும் மீற மாட்டேன் என்ற சில கொள்கைகளை கணிணி வழியாய் கண்ணியமாய் முன்பே அவனுடன் பகிர்ந்து முடித்தாயிற்று.

இதோ வெளியே வர சொல்கிறார்கள். இதன் பெயர்தான் கால் பின்னுதல் என்பதா? கதையில் சொல்லபடும் இன் நிகழ்வு நிஜத்திலும் உண்டா? முதன் முதலாக என் கால் நடை பின்னி துவண்டு இப்படி ஒரு அனுபவம் சாத்தியம் என நிருபிக்கிறது. ஆச்சர்யம். மனதில் எந்த படபடப்பும் பட்டாம் பூச்சியும் இல்லை என்பது என் உணர்வு. பின் இந்த காலுக்கு என்ன வந்ததாம்?

.ஸோஃபாவின் ஒரு ஓரத்தில் அவன். பெயர் தற்சொரூபன்.

யேசுவின் பெயர் என்பதால் பெயரை விமர்சிக்க மனதிற்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் இப்படியும் ஒரு பெயர் வைப்பார்களா என்ற ஒரு எண்ண ஓட்டம் முதலில் எழுந்தது இப்பொழுதும் ஞாபகம் வருகிறது.

அவன் பார்வை முழுவதையும் என் மேல் மாத்திரமே நிறுத்தி இருக்கிறான். எனக்கு என் கண்களை எங்கு நிறுத்த என தெரியவில்லை. சுற்றிலுமாய் அதை ஓடவிட்டேன். ஒரு வயதான தம்பதி, இவனுடன் இன்னொரு இளைஞன்.

“இது ஸ்வரூப், இது அவனோட தம்பி...” அறிமுக படலம்.

ஒரு சிறு புன்னகையுடன் அவனுக்கு எதிரில் எனக்கான இருக்கையில் அமர...இன்னும் அவனது சிறு புன்னகையுடனான பார்வை என் மீதே.

“நீ எப்பமா ஏசுவை உன்னோட ஸேவியரா ஏத்துகிட்ட?” அந்த பெரியவர் கேட்க அவரைப் பார்த்தே பேச தொடங்கினேன். இவர்கள் என்னை கேட்கும் கேள்விகளை நான் அவனைக் கேட்கும் முன்னமே அதற்கான பதில்களை அவன் மெயில் செய்திருந்தது ஞாபகம் வருகிறது.

எல்லாம் முடிந்து “கிளம்புறோம் அங்கிள்” என்றபடி அவன் விடை பெற என் தந்தை முகம் செத்து போனது.

பின்னே அடுத்து என்ன என சொல்லாமல் கிளம்பினால்....எனக்கு இப்படி எதையும் யோசிக்க கூட தோணவில்லை. அவன் சம்மதமும் சம்மதமின்மையும் ஒன்றாய் தான் தோன்றும் போலும். மனதில் எந்த தளும்பலும் இல்லை. ஒருவேளை நிச்சயமாக அவனுக்கு சம்மதம் தான் என்று எனக்கு தோன்றிவிட்டதா?

வந்தவரை வழி அனுப்ப செல்லும் வழக்கத்தில் வாசல் வரை நானும் செல்கிறேன் என் பெற்றோருடன். போர்டிகோவிலிருந்த அவனது காரை நோக்கி நடந்தவன் வாசலில் நின்ற என்னை நோக்கி திரும்பி வந்து “எங்கேஜ்மென்டுக்கு என் பேமிலியை கூட்டிடுட்டு வரட்டுமா” என்றான். அவன் கண்களில் மின்னல்.

“ம்” இயல்பாய் நான் தலை அசைக்க “அப்பாட்ட பேசிட்டு அவங்களுக்கு எந்த டேட் வசதியா இருக்கும்னு சொல்றேன் அங்கிள்..உங்க வீட்டிலேயே சின்னதா எங்கேஜ்மென்ட் வச்சிடலாம்...” மகிழ்ச்சியாய் என் அப்பாவிடம் அவன். அப்பா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப்.

முதல் முறையாக அவனை எனக்கு கொஞ்சம் பிடித்தது. நாங்கள் ஒரே டீம் என்பதுபோல் ஒரு நெருக்கம். அத்தனை பேரையும் தாண்டி என்னை நேரடியாக கேட்டதினாலா?

றுநாள் மாலை அலுவலகம் விட்டு படி இறங்கி காருக்காக பார்த்திருக்க ஒரு பைக்கில் இருவர் என் எதிரில் வந்து நின்றனர்.

பில்லியன் ரைடர் கையில் பூங்கொத்து. “நீங்கதான ஸ்வரூப் ஃபியான்சி?, இதை சார் கொடுக்க சொன்னார்...” அந்த நபர் நீட்ட ஏனோ என் கண்கள் பூக்களை பார்க்காமல் பைக் ஓட்டுனர் மீதே சென்று மொய்க்கிறது. முழு முகம் மறைத்து ஹெல்மெட் அணிந்திருந்தான் அவன். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு. அவன் கண்களில் என் கண்களை நிறுத்தினேன். அதில் சிரிப்பு இருந்தது.

புன்னகைத்தேன். கவசத்தை கழற்றி விட்டான். “ஹேய் புதுப் பொண்ணு, கண்டு பிடிச்சிட்டியே....என்றவன்..ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் மேடம் எனக்காக தர முடியுமா...?.”

அப்பா முகம் என் மன கண்ணில். என் முகபாவத்தைக் கண்டு கொண்டான் போல. ஜஸ்ட் “ஒரு ஸ்வீட் சாப்பிடுட்டு வீட்டுக்கு போயிடலாம்...7மின்ஸ்.” எப்படி சாத்தியம் இது என என் மனதில் எண்ண ஓட்டம்.

அதை படித்தான் போலும். “இதே ரோட்டில் ஒரு ஸ்வீட் சென்டர் இருக்குது” அவன் கண்களை மறுக்க முடியவில்லை.

“நீ காரை எடுத்துட்டு வா மாப்ள....” தன் பின்னிருந்தவனை இறக்கிவிட்டு என் முகம் பார்த்தான்.

அடுத்த நிமிடம் நான் அவன் பின்னால். முதன் முதலாக அப்பா தவிர ஒரு ஆண் பின் நான்!! இந்த உறவுக்கு பெயர் என்ன?

வார்த்தை மாறாமல் ஏழாம் நிமிடம் இனிப்பு முடித்து “தினமும் ரொம்ப பேசுவேன்...என் கால்ஸுக்கு மட்டும் இந்த மொபைல்...” என்றபடி

அவன் தந்த ஒரு மொபைலையும் பரிசாக பெற்றுக்கொண்டு என் காரில் நான் ஏறிவிட்டேன். “ஸீ யு டா,” இருகண்களையும் சிமிட்டி சிரித்தான்.

என்னுள் ஒரு புத்துணர்வு. வலி இழந்திருந்த மனதில் முதல் உற்சாக ஊற்று. புது நட்பு விதை தாண்டி மண் நீங்கி முளைவிட்டது.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்தான் அலை பேசியில். 11.45 இரவு பணி முடிந்து தினம் அவன் கிளம்பும் நேரம் தொடங்கும் ஒரு நீள உரையாடல். பேசுவது அவன் பணி. கேட்பது என் செயல். ஏன் பேசுகிறான் என ஒரு போதும் தோன்றியதில்லை.

தனிமை சாபம் நீக்க வந்த சகோதரம் கண்டேன் அவனில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.