(Reading time: 20 - 40 minutes)

எப்படிச் சொல்வேன் உன்னிடம்? - தங்கமணி சுவாமினாதன்

"த்த...இந்தாங்க அத்த டீ."..தனது வலது கையைப்பிடித்து அதில் டீ டம்ளரை வைத்த மருமகள் அகல்யாவிடமிருந்து டீ டம்ளரை இடது கையாலும் சேர்த்துப் பிடித்து வாங்கிக்கொண்டார் பார்வதியம்மா.டீ டம்ளரை கீழே வைத்திருந்தால் அது எங்கே இருக்கிறதென்று கண் தெரியாது.

குத்துமதிப்பாய் எடுக்க முயன்று சாய்த்துக் கொட்டியிருப்பார்.காரணம் பார்வதியம்மாவுக்கு இரு கண்களிலும் புறை. கண்கள் மிகவும் மங்கலாகத்தான் தெரியும்.கண்ணாடி போட்டாலும் இதே கதைதான்.இரண்டு கண்களிலும் சாளேச்வரம் என்றும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் ஒருவருடத்திற்கு முன் கண் மருத்துவரிடம் காட்டியபோது மருத்துவர் சொன்னது.ஆபரேஷன் செய்ய இன்றுவரை கைவரவில்லை.பணம் பணம் பணம் பாழாய்ப் போன பணப் பற்றாக் குறையால் ஆபரேஷன் கூடிவரவேயில்லை.எப்படியும் டாக்டர் பீஸ்,மருந்து மாத்திரை,மருத்துவ மனையில் தங்கியிருக்க வேண்டிய நாட்களுக்கான வாடகை,ஆபரேஷன் செலவு,பிறகு கண்ணாடி என ஒரு ஆறாயிரம் தாண்டி கையைப் பிடிக்கும்.கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கென்றால் மகனுக்கு பயமாய் இருக்கிறதாம்.அங்கு மட்டும் செலவு ஆகாதா என்ன?அங்கும்தான் பிடுங்கி வாயில் போட்டுக்கொள்கிறார்கள்.ஏதோ கொஞ்சம் குறையும்.

டீ தொண்டைக்கு மிகவும் இதமாக இருந்தது பார்வதியம்மாவுக்கு.என்னமா பாசமா பாத்துப்பாத்து செய்யறா அகல்யா..யாருக்குக் கிடைப்பா இதுமாதிரி மாமியாரிடம் பாசம் காட்டும் மருமகள்.ஏதோ இந்தமட்டில் இதுமாதிரி ஒரு பாசமான புள்ளைக்கும் பாசமான மருமகளுக்கும் கொடுத்துவச்சிருக்கமே அதுவே நாம செஞ்ச எத்தனயோ பாவத்துக்கிடையே செஞ்ச கொஞ்ச புண்ணியம்.

Eppadi solven unnidamமகன் சீனுவாசனுக்கு அப்படியொன்றும் பெரிய வேலையில்லை.பத்திரிகை ஆஃபீஸ் ஒன்றில் சாதாரண வேலைதான்.சாதாரண சம்பளம்தான்.அவனையும் நன்றாக பெரிய படிப்பு படிக்க வைத்திருந்தால் அவனும் பெரிய வேலைக்குப் போய் நிறைய நிறைய சம்பாதிப்பான்.நாம என்ன பாவம் செஞ்சுட்டு வந்தமோ நம்ம வறும அவன படிக்கவைக்க முடியாம போக இப்ப நம்ம புள்ள சம்பளம் பத்தாம கஷ்ட்டப் படறான்.அவன் என்ன செய்வான் பாவம்?தினம் தினம் அவன் எனக்குக் கண் ஆபரேஷன் செய்ய்யாம நான் படும் அவஸ்த்தையை பாத்துப் பாத்து வருத்தப்படரது எனக்குத் தெரியாமலா இருக்கு?

அகல்யாவும் இப்பிடித்தான்."ஏங்க..இந்தமாசமாவது அத்தைக்குக் கண் ஆபரேஷன் செஞ்சுடனுங்க".. பாவங்க அத்தை..ரெண்டு கண்ணுலேந்தும் தண்ணி தண்ணியா வடியுது..தொடச்சி தொடச்சி கண்ணு ஓரமெல்லாம் புண்ணாருக்குங்க.....நானும் என்னால முடிஞ்சவர சிக்கனமா இருந்து காச மீக்கதான் பாக்குறேன்..எப்பிடியோ ஏதாச்சும் செலவு வந்து அந்த பணம் செலவாயிடுதுங்க..என்ன செய்யிறதுன்னு ஒண்ணுமே புரியலிங்க..தன் கணவனிடம் புலம்புவதை அடிக்கடி கேட்கமுடிந்தது.

மதுரை போன்ற பெரு நகரங்களில் குறைவான வருவாயில் குடும்பம் நடத்துவது அவ்வளவு எளிதல்ல. வீட்டு வாடகை குழந்தைகள் படிப்பு,அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவு,

கல்யாணம் காட்சி,பண்டிகை தினங்கள்,துணிமணி,தீடீர் எதிர்பாராசெலவுகள்..ம்ம்ம்..ஒவ்வொரு மாதத்தையும் நகர்த்துவது பிரம்மப் ப்ரயத்தனம்தான்.

அசதியாக இருந்தது பார்வதியம்மாவுக்கு.உட்கார்ந்திருந்த இடத்திலேயே சுருண்டு படுத்துக் கொண்டார்.வயதானவர்களுக்கு ஒரே துணை அவர்களின் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகள்தான்.பார்வதியம்மாவுக்கும் அடிக்கடி அன்னினைவுகள் வந்துபோகும்.அது இப்போதும் வந்தது.

வயலும் வயல்சார்ந்த இடமுமான தஞ்சாவூர் மாவட்டதில் வளம்கொழிக்கும் ஒரு சின்ன கிராமம் மருதாநல்லூர்.நஞ்சை,புஞ்சை என நீரோட்டம் மிகுந்த வயல்களும்,தோட்டங்களுமாய் வளம் மிக்க ஊர். பக்கத்தில் காவிரி,முடிகொண்டான்,திருமலை ராஜன், அரசலாறு,குடமுருட்டி என பொங்கிப் பிரவாகிக்கும் ஆறுகள்.பஞ்சம் என்பதே என்னவென்று தெரியாத பசுமையான வளமான வாழ்க்கை வாழும் மக்கள்.

இது கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பான நிலைமை.இப்போது எல்லாமே தலை கீழ்.அந்த மருதாநல்லூர் கிராமத்தில் பிறந்தவள்தான் பார்வதி.இப்போது அறுபத்தைந்தில் இருக்கும் பார்வதி அப்போது இருபதில்.பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு.அப்போதைய பள்ளி இறுதி வகுப்பான பதினோராம் வகுப்பை முடித்திருந்தாள் பார்வதி.கல்லூரிக்கு செல்லவேண்டுமென்றால் கும்பகோணம் செல்லவேண்டும்.கல்யாணமாகி ஒத்தன்வீட்டுக்குப் போவேண்டியவளுக்கு பெரிய படிப்பெல்லம் ஏதுக்கு..மாப்பிள்ளயப் பாத்தோமா கட்டிகோடுத்தோமான்னு இல்லாம ஊருவிட்டு ஊரு அனுப்பி என்னாத்துக்கு படிக்கவைக்கிறதுன்னு அப்பத்தா சத்தம் போட அடங்கிப்போனார் அப்பா.நிறைய படிக்கவேண்டுமமென்ற பார்வதியின் ஆசையில் மண் விழுந்தது.

பெரும் பணக்காரக் குடும்பம் இல்லை என்றாலும் ஓரளவு சின்ன விவசாயக் குடும்பம் என்பதால் அதிகப் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்தாள் பார்வதி. தையல் க்ளாஸ் போவதும் தோழிகளோடு டூரிங்க் டாக்கீசில் கொஞ்சம் பழய படங்களைப் பார்ப்பதுமாய் போழுது ஓடிக்கொண்டிருந்தது சந்தோஷமாகவே.அந்த கால கட்டத்தில்தான் ஹெல்த் இன்ஸ்பெக்டராக அவ்வூருக்கு வந்து சேர்ந்தான் கருணா.

ஒரு நாள் சினிமா தியேட்டரில்தான் அவர்களின் முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பித்தது.கடும் வாக்குவாதம்.தோழிகளோடு சேர்ந்துகொண்டு அவனை ஒருவழி ஆக்கிவிட்டாள் பார்வதி.இது வீட்டுக்குத் தெரிந்து போக அன்றிலிருந்து சினிமா கட். அதன் பின் கோயில்,கும்பகோணம் கடைத் தெரு என எதிர்பாராத சந்திப்புகள் நிகழ நிகழ சினிமாவில் சண்டையும் கோபமும் மாறிப்போய் கதானாயகனுக்கும் கதானாயகிக்கும் காதல் மலர்வது போல் பார்வதிக்கும் கருணாவுக்கும் காதல் மலர்ந்தது.விரலும் தீண்டாக் காதல்.கண்களால் மட்டுமே கருத்துப் பரிமாற்றம்.மூன்றாம் பேருக்குத் தெரியாத காதல்.கலப்படம் இல்லா உண்மைக் காதல்.உடல் சாரா உள்ளக் காதல்.இயதயப் பூர்வமாய் இருவரும் வளர்த்த காதல் ஆலவிருட்சமாய் வளர்ந்தது.எத்தனைக்காதல் உலகில் வெற்றி பெற்றிருகிறது என்று கணக்குப் பார்த்தால் விரல்விட்டு எண்ணிச் சொல்லி விடலாம்.இந்தக் காலம் என்றால் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு என்றால் வீட்டைவிட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்வதும்,பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டு கழுத்தில் தாலியோடு வீட்டிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் சினிமா பாணியில் வாழும் தைரியம் உண்டு சில பெண்களுக்கு.அனால் அத்தகைய தைரியம் பார்வதிக்கோ கருணாவுக்கோ இல்லை.பயந்து பயந்துதான் காதலித்தார்கள்.

அன்னிலையில்தான் ஆலமரத்தையே சுழற்றிச் சாய்க்கும் சூறாவளியாகப் பார்வதியின் வாழ்க்கையில் வில்லனாக வந்தான் சேகர்.

பார்வதியின் அப்பா சின்னசாமி அவ்வப்போது கொஞ்சம் சாராயம் குடிப்பதுண்டு.மொடாக்குடியர் இல்லை.சீட்டாடும் பழக்கமெல்லாம் கிடையாது.தூரத்துச் சொந்தக்காரப் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு வந்த சேகர் அவரை என்ன செய்தானோ எப்படி மடக்கினானோ அவன்  வலையில் வீழ்ந்தார் சின்னசாமி.தான் மிக வசதியானவன் என்றும் ரெயில்வேயில் தான் உயர் பதவி வகிப்பதாகவும் கூறி பார்வதியை தனக்கு மணம் முடித்துத் தரும்படி கேட்டபோது இதைவிட நல்ல இடம் கிடைக்குமா என்ன என்று சின்னசாமி மட்டுமல்ல வீட்டிலுள்ள மற்றவர்களும் நினைக்க பார்வதியின் சம்மதம் கேட்காமலேயே சேகர்-பார்வதி திருமணம் முடிவாயிற்று.இதற்கு மேலும் சும்மா இருக்கக் கூடாதென்று அப்பத்தாவிடம் பயந்து பயந்து தன் காதல் விவகாரத்தைச் சொல்ல விஷயம் பூதாகாரமாய் வெடித்தது.அப்பா முழக்கயிற்றோடு நிற்க பார்வதி மௌனமானாள்.   திருமணம் முடிந்தாயிற்று.கணவனோடு அவனது ஊருக்குச் செல்ல ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல மாட்டு வண்டியில் ஏறவேண்டிய நேரம்.நாலைந்து வீடு தள்ளி ஒரு மரத்தடியில் சோகமே உருவாய் கருணா நின்றிருப்பதைப் பார்த்தாள் பார்வதி.வலது கையை இடப் புற மார்பின் மீது வைத்து அவன் ஏதோ உச்சரிப்பது புரிந்தது.அவன் உதட்டு அசைவிலிருந்து அவன் பார்வதீ என்றுதான் உச்சரித்திருக்க வேண்டும் என்று புரிந்தபோது அதற்கு மேல் அவனை பார்க்க முடியாமல் கண்கள் குளமாகி அவனை மறைத்தது.சட்டென வண்டியில் ஏறினாள் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.