(Reading time: 22 - 44 minutes)

திரியில்லா பட்டாசுகள்.... - தங்கமணி சுவாமினாதன்

காலை மணி ஒன்பது.

வானதி ஃபயர் ஒர்கஸ் என்ற பெயர்ப் பலகையைத் தாங்கிய அந்த மினி பஸ் போலீஸ் ஸ்டேஷன் நிறுத்தத்தில் வந்து நின்றவுடன் அந்த பஸ்ஸுக்காகக் காத்திருந்த அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராய் ஏறத் தொடங்கினார்கள்.இன்னும் இந்த கண்ணம்மாவைக் காணும் பாரு என்று நினைத்தவளாய் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ராணியக்கா.இருபதடி தூரத்தில் கண்ணம்மா டிரைவர் அண்ணே... டிரைவரண்ணே என்று கத்தியபடி ஓடிவருவது தெரிந்தது.வண்டியை ஸ்டார்ட் பண்ணி எடுத்த டிரைவர் செல்வம் ஓடிவரும் கண்ணம்மாவைப் பார்த்துவிட்டு சற்று நிதானிக்க தட்டுத் தடுமாறி ஏறினாள் கண்ணம்மா..காலியாக இருந்த தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்ட கண்ணம்மாவுக்கு மூச்சிறைத்தது. தொண்டை வரண்டு போயிருந்ததால் ஒயர் கூடையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் சரித்துக்கொண்டாள்.டொர்..டொர் என்று  பசியால் உறுமிக்கொண்டிருந்த காலி வயிறு வந்து விழுந்த தண்ணீரை ஆசையோடு வாங்கிக்கொண்டது.பாட்டிலை கூடையில் வைத்துவிட்டு துண்டை எடுத்து கழுத்து வியர்வையைத் துடைக்க முற்பட்டபோது...

ஏங்கண்ணம்மா..ஏன் இம்புட்டு நேரம் வரத்துக்கு?..ஏன் லேட்டு?கேட்டாள் ராணியக்கா.

Pattasuப்ச்...சலித்துக்கொண்டாள் கண்ணம்மா...

எதுனா துண்ணியா வெறும் வவுத்தோட வந்துட்டியா..?

என்னாத்த துண்றது...எதாச்சும் வெஷம் இருந்தா துண்ணலாம் போலருக்கு...

ஏன் சலுச்சிக்குற..கண்ணம்மா?என்னாச்சு புருஷன் ரோதன பண்றானா..?

இன்னெக்கி என்ன புதுசா?நெதமும் ரோதனதான்..புருஷனா அவ..ஒண்ணா நம்பரு ஒதவாக்கர.. நெதமு ராத்திரி ஊத்திக்கிட்டு வரவேண்டிது..காது கொடுத்துக் கேக்க முடியாத வார்த்தைகளச் சொல்லிசண்ட போட வேண்டியது..ராத்திரி கவுச்ச ஏண்டி பண்ணி வக்கிலன்னு அடிக்க வேண்டிது..குடிக்க பணம் குடு பணம் குடுன்னு சத்தம் போட வேண்டிது..என்னிக்காவது பத்து காசு சம்பாரிச்சுக்கிட்டுவந்து பொண்டாட்டி கைல கொடுத்திருப்பானா?இல்ல பெத்த பொண்ணு வளந்து நிக்கிதே அத கட்டி கொடுக்கணுமே ...நாலு காசு சேக்ககணுமேன்னு ஏதாச்சும்  கவல இருக்கா?எங்கெரகம் இப்பிடி ஒரு புருஷன்...

கண்ணம்மா புலம்புவதை கேட்டுக் கொண்டு பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த லோகு

ஏங்.. கண்ணம்மா ஒ புருஷந்தான் இப்பிடி..ஒனக்கு தலக்கொசந்த புள்ள இருக்கான்ல அவனாச்சும் எதாவது வேலைக்குப் போயி சம்பாரிச்சு குடும்பத்த காப்பாத்துலாமில்ல...

ஆமாம் கேக்க வந்துட்டா வம்புக்காரி..முணு முணுத்தாள் ராணியக்கா.

லோகுவின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை கண்ணம்மா.காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இதோ வேலைக்குக் கிளம்பி வரும் வரை கணவனோடும் மகனோடும் மல்லுக்கட்டியது நினைவுக்கு வர கண்களில் கண்ணீர் கரை கட்டியது.என்ன வாழ்க்கை இது?

தான் வாழ்வது மகள் வசந்திக்காக மட்டுமே என்று தோன்றியபோது அவளுக்காகவாவது வாழத்தான் வேண்டும்  என்றும் தோன்றியது.வசந்தி தாயின் கஷ்டம் புரிந்தவள்.குடிகார அப்பாவிடம் தன் தாய் படும் பாட்டினை புரிந்து கொண்டு தாயின் மனதுக்கு மருந்தாய் இருப்பவள்.ப்ளஸ்டூ படிக்கும் வசந்தி எப்படியாவது ஒரு டிகிரி வாங்கி வேலைக்குச் சென்று அம்மாவை பூப்போல் வைத்துக்கொளவேண்டும் என்று நினைப்பவள்.

அண்ணன் குமரேஷும் அப்பாவைப்போல் குடும்ப பொறுப்பு கொஞ்சமுமமில்லாமல் கூட்டாளிகளோடு சேர்ந்து கொண்டு ஊர்சுற்றுவதும்  குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்மன்றத்தில் சேர்ந்து கொண்டு அவரின் படம் வெளியாகுமன்று நடிகரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதும் முதல் மூன்று காட்சிகளை ஒன்றுக்கு பத்து கட்டணத்தில் பார்ப்பதும் அந்த தன் அபிமான நடிகரைப் போலவே ஹேர்-ஸ்டெயில் வைத்துக்கொளள கூடுத்தல் கட்டணம் வசூலிக்கும் சலூன்களை தேடிச் செல்வதும் நடிகர் தன் படங்களில் பேசும் பன்ச் டயலாக்குகளை அவரைப் போலவே கை காலகளை ஆட்டிப் பேசுவதுமாய் இருப்பதும் பத்தாவதைக் கூட முடிக்காமல் பத்துகாசு கூட சுயமாய் சம்பாதிக்காமல் அம்மா உழைத்துச் சம்பாதிக்கும் வருவாயில் சண்டை பிடித்து அதிகாரம் செய்து பணத்தைப் பறித்துச் செல்வதும் வசந்தியின் மனதில் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இருபத்தியிரண்டு வயதாகியும் குடும்பப் பொறுப்பின்றி அலையும் அண்ணணிடம் அவனின் கடமையை ஒரு தங்கையாய் எடுத்துச் சொல்லும்போது வசந்திக்குக்கிடைப்பது அசிங்கமான வார்த்தைகளும் சிலசமயங்களில் அடியுங்கூட.அப்பாவைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு நாள் அப்பா ஏம்ப்பா இப்பிடியிருக்கீங்க? அம்மா பாவம்பா...ஒண்டியா ஒழச்சு குடும்பத்த காப்பாத்துறாங்க...நீங்க குடிக்காதீங்கப்பா..நீங்களும் ஏதாச்சும் வேலைக்குப் போய் சம்பாரிச்சா வீடு எப்பிடி இருக்கும்?நீங்களும் இப்பிடீருக்கீங்க.. அண்ணணும் இப்பிடிருக்கு..அம்மா ஒண்டியா...என்று கேட்கப் போக..

ஏண்டி..தே...முண்ட..ஒங்கம்மா சொல்லிக்குடுத்துச்சா? அப்பன பாத்து ஒரு பொண்ணு கேக்குர கேள்வியா இது?நீல்லா எனக்கு புத்தி சொல்ல வதுட்டியா?ஒங்கம்மாவ பாத்தா ஒனக்கு பாவமா இருந்துச்சின்னா நீ போயேண்டி சம்பாரிக்க தள தளன்னு நல்லாத்தானே இருக்குற?...

காதி பொத்திக்கொண்டாள் வசந்தி.

அடப் பாவி ம்னுசா...பெத்த பொண்ண பாத்துக் கேக்குர கேள்வியா இது..நீ நல்லா இருப்பியா..? குடி கார நாயே..ஒவ்வாயில புத்து வெக்க..லாரி மொதி சாவ..ஒன்னெல்லாம் சாவு கொண்டு போவ மாட்டேங்குதே..? தாய் கண்ணம்மா கத்த அப்பா தாயை அடிக்க வீடு அல்லோல கல்லோலப்பட்டது..

ரணப் பட்டுப் போனது வசந்தியின் மனது.அதன் பிறகு தந்தையிடம் அதிகம் பேசுவதில்லை வசந்தி.

ரவு பத்து மணி.உடம்பெல்லாம் வலியாய் வலித்தது கண்ணம்மாவுக்கு.ஜுரம் வீசி அடித்தது.

கண்களைத் திறக்கவே முடியவில்லை.அப்படியொரு எரிச்சல்.முனகிக்கொண்டு படுத்துக்கிடந்தாள்.

இன்னும் கணவனும் மகனும் வரவில்லை.மறுனாள் நடக்கவிருந்த டெஸ்ட்டுக்காகப் படித்துக்கொண்டிருந்தாள் வசந்தி.

டீ..கதவத் தொறங்கடி...மகா ராணியாட்டம் ஆத்தாவும் மவளும் தூங்கிட்டீங்களாக்கும்...பட படவென்று கதவைத் தட்டுவதும் ஊரே கேட்கும் அளவு சத்தம் போடுவதும் கேட்டது.குடித்து விட்டுத்தான் வந்திருக்கிறான் கணவன் என்பது அவனின் குரலிலிருந்தே தெரிந்தது கண்ணம்மாவுக்கு.இத்தனைக்கும் கதவு வெறுமனேதான் சாத்தியிருந்தது.கண்ணம்மாவோ வசந்தியோ பதில் ஏதும் தரவில்லை.

மனைவியும் மகளும் பதில் சொல்லாமலும் வந்து கதவைத்திறக்காமலிருப்பதும் அவனுக்கு கோபத்தைத் தந்ததோ என்னவோ கதவை ஓங்கி ஒரு  உதை விட்டான்.உதைத்த வேகத்தில் படார் என்று கதவு திறக்க உள்ளே போய் குப்புற அடித்து விழுந்தான் குடிகாரக் கணவன்.

ழேய்.என்னாங்கடி... என்னைய தள்ளியா வுடுரீங்க..ஒங்கள....கத்திக்கொண்டே எழ முயன்றவன்..கப..கபவென்று வாந்தியெடுத்து விட்டு அதன் மீதே மீண்டும் குப்புற விழுந்தான்.

வாந்தியின் மீதே விழுந்து கிடக்கும் கணவனைப் பார்த்துவிட்டு படுத்துக்கிடக்க முடியவில்லை கண்ணம்மாவால்.குடிகாரப் பாவி..குடிகாரப் பாவி..நீ ....நாசமாப் போவ....இப்பிடி உயிர எடுக்கிறியே அந்தக் கடவுளுக்குக் கண்ணு தெரியலயே..ஒன்ன கொண்டு போகாம வச்சுருக்கானே..?கத்திக்கொண்டே எழுந்தாள் கண்ணம்மா.ஜுரவேகத்தில் உடம்பு நடுங்கியது.தள்ளாடியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.