(Reading time: 22 - 44 minutes)

ம்மா..நீ படும்மா நான் பாத்துக்கிறேன்..தாயைத் தடுத்தாள் வசந்தி..

இவன கட்டிக்கிட்டதுக்கு நாந்தான் படனும்..நீ  சும்மாயிரு கண்ணு..ஒனக்கு ஏன் தலயெழுத்து..?

மகளை கைகளலால் கொஞ்சம் தள்ளிவிட்டு விழுந்து கிடக்கு கணவனை இழுத்து நகர்த்தி சுத்தப் படுத்திவிட்டு வாந்தியை அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்தினாள் கண்ணம்மா.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

மீண்டும் வந்து படுத்த தாயை..அம்மா..நீ ஒண்ணுமே சாப்புடலயே டீயாவது வெச்சு தரவா? கேட்ட வசந்தியை இல்ல கண்ணு நீ சாப்புடு எனக்கு ஒண்ணும் வேண்டாம் சொல்லிவிட்டாள்.வீட்டின் சூழ் நிலை வசந்தியின் மனதை வருத்த தானும் ஒன்றும் சாப்பிடாமல் படுத்துவிட்டாள்.

குமரேஷ் இரவு வரவே இல்லை என்பது காலையில் அவனின் படுக்கை பிரிக்கப் படாமல் சுருட்டிய படி இருந்தததிலிருந்து தெரிந்தது.

காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டாள் கண்ணம்மா.இரவு முழுதும் உடம்பு வலியாலும் ஜுரத்தாலும் தூக்கமின்றி போனதால் படுக்கையிலிருந்து எழுந்து நாலு எட்டு வைப்பதற்குள் உடம்பு நடுங்கியது.ராத்திரி லங்கணம் வேறு... ரொம்பவும் பலவீனமாய் இருந்தது உடல். 

அம்மா நீ ஏம்மா இம்புட்டு சீக்கிரம் எந்திரிக்கிற..ஒடம்பு இப்ப எப்பிடிருக்கு?.இன்னும் கொஞ்ச நாழி படு...வேலையெல்லாம் நான் பாத்துக்குறேன்..வசந்தி சொல்லவும்..

வேணாங் கண்ணு..ஒனக்கே இன்னிக்கு பரிச்சன்னு சொன்ன....நீ படி..நாம்பாத்துக்குறேன்..

பட்..பட்..வாசல் கதவைத் தட்டும் சத்தம்..கதவைத் திறக்கப் போன வசந்தியைத் தடுத்து விட்டு தள்ளாடிய படி தானே திறக்கப் போனாள் கண்ணம்மா.

கலைந்த முடியும் சிவந்த கண்களுமாய் நின்றிருந்த மகன் குமரேஷப் பார்க்க அடி வயிற்றிலிருந்து ஆத்திரம் வந்தது கண்ணம்மாவுக்கு.

ராத்திரி வீட்டுக்குகூட வராம தொற எங்க சுத்திட்டு வராப்ல..இஷ்டத்துக்கு வந்து போக இது என்ன சத்திரமா?சாவடியா?

ம்...வுடு வழிய...கண்ணம்மாவை தள்ளி நகர்த்திவிட்டு உள்ளே நுழைந்தான் குமரேஷ்.

ஏய்..வசந்தி..டீ குடு....

என்ன அதிகாரம் கொடி கட்டிப் பறக்குது?..நைட் ஷிப்ட் வேலைக்குப் போய்ட்டு வரீங்களோ?ரொம்ப டயர்டா இருப்பீங்க பாவம்..டீ குடிக்காம இருக்க முடியாது..வசந்தி கொதிக்கிற வென்னீர கொண்டுட்டு வா இவ மொகத்துல வீசுரேன்..வந்துட்டான் ஒதவாக்கர அதிகாரம் பண்ண..கத்தினாள் கண்ணம்மா.

என்னா..என்னா..ரொம்ப பேசுர..?எகிறினான் குமரேஷ்.நான் ஆம்பள எங்கவேனா போவேன் வருவேன்..

அமாம் ஆம்பள..இவுரு...ஆம்பளயா லட்சனமா என்னவெல்லாம் செய்யிராரு குடும்பத்துக்காக.. சம்பாரிசு சம்பாரிசுக் கொண்டுவந்து கொட்டுராரு..இவுருக்கு ராச மருவாத தரணும்..மானங்கெட்ட பயலே..

அம்மா வேண்டாம்மா..காலங் காத்தால...ஏற்கனவே ஒனக்கு ஒடம்புக்கு முடில..தடுத்தாள் வசந்தி.

ஏய் என்னடி அம்மாவோட சேந்துக்கிட்டு ரொம்ப ஒழுங்கு போல நடிக்கிற?

என்னடா ?அவ ஒழுங்குக்கு என்னடா பேமானி..தாய்க்கு மகனுக்கும் இடையே அந்த காலை நேரத்திலேயே வாக்குவாதம் முற்றியது.

மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வூட்டுல..? என்னா சண்ட..நாயிங்களா..கத்திக்கொண்டே எழுந்தான் குடிகாரக் கணவன்.

தோ எழுந்து வந்துட்டாரு ஜட்ஜ்...தீர்ப்பு சொல்ல..முணுமுணுத்தாள் கண்ணமா..

வசந்தி பள்ளிக்கும் கண்ணம்மா வேலைக்கும் கிளம்பியாயிற்று.

மனுஷன் காலையிலயே ஒங்க சண்டையால தூங்காம கூட எழுந்து குந்திருக்கேன்..ஏதுடா இவன் நம்ம புருஷனாச்சே..இவுனுக்கு டீ குடுக்கணு நாஷ்டா குடுக்கணும்ன்னு நெனிக்காம கெளம்பிட்ட.. ஒரு மருவாதி வேணாம் புருஷன்னா..அதப்பாரு மினிக்கிக்கிட்டு கெளம்பிடிச்சி பள்ளியோடத்துக்கு.. அப்பனுக்கு ஒரு மரியாத உண்டா அது மனசுல..?எல்லாம் நீ கொடுக்குர எடம் டீ..

தூ..நீயெல்லாம் எனக்கு புருஷன் எம் மவளுக்கு அப்பன்...கொஞ்சமாச்சும் ஒனக்கு குடும்பத்துல பொறுப்பு இருக்குதா?..

ஏய் நிறுத்துடி..நெத நெதம் ஒன் ஒப்பாரிய கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சி..டீ குடு குடுக்காம போ ..நாஷ்டா குடு குடுக்காம போ..எனக்கு நூறு ரூபா வேணும் குடு..

எதுக்கு நூறு ரூவா..?என்னவோ சம்பாரிச்சுக் கொண்டுவந்து கொடுக்குறாப்புல கேக்குற?

ஆமாண்டி கேப்பேன்..ஒன்னய வேலைக்குப் போக அனுமதிச்சேனே அதுக்கே..நீ..நா கேக்குரப்பல்லா பணம் குடுக்கணும்..

தூத்தேறி....என்னா பேசுர நீ..நா ஆசப் பட்டா வேலைக்குப் போவுறேன்..ஆம்புளையா லட்சணமா நீ வேலைக்குப் போய் குடும்பத்த காப்பாத்தணும்.ஆனா நீயி..நான் கொண்டுவர்ர பணத்துலயே குடிச்சிப்பிட்டு வந்து அதிகாரம் பண்ணுர..ஒன்ன மாரியே ஒம் புள்ளையும் ஊரெல்லாம் கோயில் காளையாட்டம் சுத்தி திரிஞ்சிகிட்டு தாயக் காப்பாத்தணும் தங்கச்சிய ஒரு நல்ல எடத்துல கட்டி கொடுக்க சம்பாதிக்கணும்ன்னு இல்லாம கண்ட கண்ட கழுதைங்களோட பொறுக்கித்தனமா சுத்திக்கிடு இருக்குறான்..பொண்ண பத்துன கவல பெத்த அப்பன் ஒனக்கே இல்ல..அந்த நாய்க்கு எங்க இருக்கப் போவுது..ஏற்கனவே பலகீனமாய் இருந்த கண்ணம்மாவுக்கு உடம்பு மேலும் பலவீனமாயிற்று.

அம்மா ஒடம்பு முடியாம இருக்குற நீ இன்னிக்கி வேலைக்குப் போவ வேண்டம்மா..பேசாம படுத்துக்கெடம்மா...மகள் வசந்தி தடுப்பதையும் கேட்காமல் கிளம்பினாள் கண்ணம்மா.

வானதி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயர் கொண்ட அந்த தீப்பெட்டி மற்றும் வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டிடம் வெட்டவெளி  மைதானத்தின் நடுவில் அமைந்திருந்தது.அதன் சுற்று வட்டாரத்தின் பல பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை ஏற்றிவந்த மினி பஸ்கள் அணி வகுத்து நிற்க கண்ணம்மா ஏறி வந்த வாகனமும் அங்கு வந்து நின்றது.பஸ்ஸிலிருந்து இறங்கிய கண்ணம்மா தனக்கு அன்று எந்த பிரிவில் பணி என்பதை அறிந்து கொள்ள ..நோட்டீஸ் போர்டின்அருகில் சென்று பார்த்தாள்.

சீனி வெடி ஒத்தவெடி பிஜிலி வெடி லெட்சுமி வெடி யானை வெடி அணுகுண்டு ஏரோப்ளேன் ராக்கெட் ஹன்ரெட் வாலா தௌசன்வாலா என்று வெடி வகைகளும் மத்தாப்பூ மற்றும் ரோப்ரெய்ல் தரைசக்கரம் விஷ்ணு சக்கரம் பாம்பு மாத்திரை சட்டி,கொம்பு டபுள் ஷாட் த்ரிபிள்ஷாட் என்ற எல்லா வகை வெடிகளும் மத்தாப்பு வகைகளும் தயாரிக்கப் படுவதால் ஒவ்வொன்றுக்கும்  தனித்தனி பிரிவுகள் உண்டு.வேலை செய்பவர்களை ஒரே பிரிவில் போடாமல் மாற்றி மாற்றி போடுவார்கள்.

அன்று அணுகுண்டு தயாரிக்கும் பிரிவில் கண்ணம்மாவுக்கு வேலை.

காலை ஒன்பதரை மணிக்கு வேலை செய்ய ஆரம்பித்தால் மாலை ஐந்தரை மணிவரை வேலை முதுகை உடைக்கும்...நடுவில் இரண்டு தடவை இடைவேளை.அதுவு மிகக் குறைந்த நேரமே.

சிலர் காகிதத்தை செப்பு மாதிரி செய்வதும் சிலர் செய்யப்பட்ட அந்த செப்பில் வெடி மருந்தை நிரப்புவதும் சிலர் அதற்குள் நீண்ட திரியை நுழைப்பதும் அதன் பின் சிலர் அவற்றின் மீது சணல் கயிற்றை இறுக்கமாக பல சுற்றுக்கள் சுற்றுவதும் சிலர் அவற்றின் மீது கலர் பேப்பரைச் சுற்றுவதுமாக அணுகுண்டு வெடியின்  தயாரிப்பு அங்கு வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.