(Reading time: 20 - 39 minutes)

 உன்னையே கைப்பிடிப்பேன் - சித்ரா.வெ

ந்தியா சீக்கிரமாக அலுவலகம் வந்துவிட்டாள், வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அவளால் முடியவில்லை, அவள் அம்மா காலையில் பேசியதே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"இங்க பாரு சந்தியா இது ரொம்ப நல்ல குடும்பம், ரொம்ப வசதியானவங்க, இந்த வீட்டுக்கு மருமகளா போனா எந்த பிரச்சினையும் இல்லை, உன்  தம்பியோட படிப்பு, தங்கயோட மேற்படிப்பு எல்லாத்தையும் அவங்களே பார்த்துக்கறோம்னு சொல்லிட்டாங்க, உன்னோட கல்யாணத்துக்கு பிறகு நம்ம இந்த சின்ன வீட்டில் கூட இருக்க வேணாம், அங்கேயே போய் இருந்திடலாம், மாப்பிள்ளை கூட இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டாராம், இப்படி மாச சம்பளத்த எதிர்பார்த்து குடும்பம் நடத்தனும்னு அவசியமில்லை, அதனால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ, அம்மா உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன்." என்று திடீரென்று ஒரு இடியை தூக்கி சந்தியா தலையில் போட்டாள் அவள் அம்மா வேணி.

Unnaiye kai pidippen

நேற்று கோவிலுக்கு சென்ற அம்மா, அப்பாவின் நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும், அப்பா இறந்த செய்தியை கேட்டு அவர் வருத்தப்பட்டதாகவும் கூறினாள், அதற்கு பிறகு அன்று இரவு அவர்களுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து விட்டு இவள் படுக்க சென்று விட்டாள், ஆனால் காலையில் எழுந்ததிலிருந்து, அவர்கள் அம்மாவிடம் இந்த வீட்டில் பெண் எடுக்க விருப்பப்படுவதாக கூறியதை சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டார், அவள் அதை காதில் வாங்காதது போல் அலுவலகத்திற்கு தயாராகி கொண்டிருந்தாள், ஆனால் அம்மா அவளை விடுவதாயில்லை, இன்றே முடிவை சொல்ல வேண்டும், இந்த திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி அவள் தலையில் இடியை இறக்கினாள்

"அம்மா இப்படி ஏன் அவசரப்படுற, அவங்கள பத்தி நமக்கு என்ன தெரியும், எதுவாயிருந்தாலும் யோசிச்சு முடிவெடுக்கலாம்" என்று கூறி நாட்களை கடத்த நினைத்தாள் சந்தியா.

ஆனால் அவள் அம்மா அதோடு விடவில்லை, நேற்று கூறிய விஷயத்தை விளக்கமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார், "சந்தியா நேற்று பார்த்தவர் உன் அப்பாவிற்கு நெருங்கிய நண்பர், உங்க அப்பா செஞ்ச உதவியால் தான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்ததாக அவர் அடிக்கடி சொல்வாரு, நீங்க சின்ன பிள்ளைங்களா இருக்கும் போது அடிக்கடி உங்க அப்பாவை பார்க்க வருவாரு, அப்புறம் நம்ம இந்த ஊருக்கு வந்துட்டோம், அதுக்கப்புறம் அவரோட  இருந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு போச்சு, இப்போ ரொம்ப வருஷம் கழிச்சு என்னை சந்திச்சாரு, உங்க அப்பா இறந்தது தெரிஞ்சு ரொம்ப வருத்தப்பட்டாரு, அவர் பிள்ளைக்கு நம்ம வீட்டில் இருந்து பொண்ணு எடுக்கனும்னு ஆசைப்படுகிறார்,  எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவர் குடும்பம் நல்ல குடும்பம் தான் சந்தியா, நீ கல்யாணத்திற்கு ஒத்துக்கோ"

"அம்மா அவங்க குடும்பம் நல்ல குடும்பமா இருக்கலாம், ஆனால் நம்ம வீட்டில் பொண்ணு எடுக்கனும்னு ஆசைப்படறாங்க என்பதால, நம்ம குடும்ப பிரச்சினைகளை அவங்க சுமக்கனுமா என்ன, இது எனக்கு பிடிக்கல."

You might also like - Thai piranthachu

"என்ன சந்தியா அவங்களே அதை சுமையா நினைக்கல அப்புறம் என்ன சொல்லு, உங்க அப்பா இறந்த செய்திய கேட்ட அவர், உங்க அப்பா செய்த உதவிக்கு நன்றி கடனா நம்ம வீட்டில் பொண்ணு எடுக்கனும், நம்ம கஷ்டத்தில் பங்கு எடுத்துகனும்னு நினைக்கிறார் சந்தியா, உனக்கென்ன சந்தியா, நீ அழகா இருக்க, படிச்சிருக்க, நல்ல வேலையில் இருக்க, வசதி மட்டும் தான் நம்மக்கிட்ட இல்லை, அதை அவங்களும் பெருசா எடுத்துக்கல, அப்புறம் ஏன் இந்த கல்யாணம் பண்ணிக்க இப்படி யோசிக்கிற சொல்லு"

"அம்மா நம்ம வீட்டு நிலைமையை என்னாலேயே சமாளிச்சுக்க முடியும், இதுக்கு நான் கல்யாணம் செஞ்சுக்கனும்னு அவசியமில்லை, புரிஞ்சுக்கோங்க"

"சந்தியா என்னோட நிலைமையை நீ புரிஞ்சுக்கோ, பொண்ணுக்கு கல்யாணம் செய்யாம, அவ உழைப்புல குடும்பமே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கு, இது என்ன குடும்பம், இவ என்ன அம்மானு எல்லாரும் பேசனுமா சொல்லு."

"அம்மா ஊர் ஆயிரம் பேசும், அவங்களுக்காக எல்லாம் நாம வாழ முடியாது, நமக்காக தான் நாம வாழனும்"

"இங்க பாரு சந்தியா விதண்டாவாதம் பேசறதால ஒன்னும் ஆகப் போறதில்லை, இந்த கல்யாணம் நடந்தா, நீயும் நல்லா இருப்ப, நாங்களும் நல்லா இருப்போம், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள உன்னோட முடிவை சொல்லு, நல்ல முடிவா இருந்தா சந்தோஷப்படுவோம், வேற முடிவா இருந்தா, உனக்கு கஷ்டம் கொடுக்கக்கூடாதுனு நாங்க வேற முடிவு எடுப்போம், எந்த முடிவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லு, இன்னும் இரண்டு நாள் தான் அவர்கள் ஊரில் இருப்பார்கள். " அம்மா உறுதியாக கூறி விட்டாள்.

ம்மா மிரட்டுவது போல் பேசியது தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை, இந்த குடும்பத்திற்காக தானே அவள் ஆசைகளை அவள் ஒதுக்கி வைத்திருந்தாள், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் ஜீவாவையே அவள் திருமணம் செய்து கொண்டிருப்பாளே, ஏன் செய்யவில்லை, எல்லாம் இந்த குடும்பத்திற்காக தானே, இந்த ஜீவாவை பற்றி அம்மாவுக்கும் தெரியும் தானே, அப்பொழுது ஏன் ஜீவாவை திருமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை, அப்போது ஏன் என் முடிவிற்கு விட்டு விட்டார்கள், இப்போது மட்டும் ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்,  ஏனெனில் ஜீவாவிடம் வசதி இல்லை, என்னைப் போலவே அவரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், ஆனால் இந்த திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவது அவர்கள் பணக்காரர்களாக இருப்பதால், பணம் தேவை தான், ஆனால் அதுவே வாழ்க்கை ஆகுமா, இது ஏன் அம்மாவிற்கு புரியவில்லை.

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போது சந்தியாவின் தந்தை இறந்து விட்டார், அவர் வேலை செய்த இடத்தில் கிடைத்த பணம், அவர் வாங்கிய கடனை அடைக்கவும், அவள் படிப்பு முடிந்து அவள் வேலையில் சேரும் வரை வீட்டுச்செலவுக்காகவும் தான் போதுமானதாக இருந்தது, அதன் பிறகு அந்த குடும்பத்து பொறுப்பை சந்தியா ஏற்க வேண்டியதாகியது, தங்கை திவ்யா, தம்பி சுரேஷின் படிப்பு செலவு, அம்மா வேணியின் மருத்துவ செலவு எல்லாம் இவள் தலையில் தான்,ஏதோ சொந்த வீடு இருந்ததாலும், தந்தையின் நண்பர் மூலமாக கிடைத்த வேலையாலும் அவளால் செலவுகளை சமாளிக்க முடிந்தது.

அலுவலகத்தில் அவள் உடன் வேலை பார்ப்பவன் ஜீவா, இவள் அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் இவள் வேலையில் திணறிய பொழுது ஜீவா பல உதவிகள் செய்திருக்கிறான், இதன் மூலம் அவர்கள் நட்பு வளர்ந்தது, நட்பு காதலாகவும் மாறியது, தன் குடும்ப சூழல் காரணமாக தன் காதலை சந்தியா மறைத்து வைத்திருந்தாள், ஆனால் ஜீவா வெளிப்படையாக கூறி விட்டான்.

அவர்கள் பேசியது எல்லாம் அலுவலகத்தில் மட்டுமே, நட்பு என்ற பெயரில் வெளியில் எங்கும் சந்திததில்லை, அன்று வழக்கம் போல் இல்லாமல், கொஞ்சம் பேச வேண்டும் வெளியே போகலாமா என்று ஜீவா அவளை அழைத்தான், அவன் தன் காதலை சொல்லத்தான் கூப்பிடுகிறான் என்று அவளுக்கு தெரியும், ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ள வில்லை, அவனுடன் சென்றாள், பூங்காவிற்கு சென்று அமர்ந்தனர், சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது, ஜீவா தான் முதலில் பேச ஆரம்பித்தான்.

"சந்தியா உன் கூட பேசனும்னு உன்னை இங்கு கூட்டிகிட்டு வந்திருக்கேனே, ஏன் தெரியுமா??"

"எனக்கு தெரியலை, ஏன் கூட்டிட்டு வந்தீங்க"

"உனக்கு தெரியும், ஆனால் சொல்ல மாட்டேங்குற, பரவாயில்லை நானே சொல்கிறேன்.

சந்தியா உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னை நான் காதலிக்கிறேன், கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசைப்படறேன், உன்னோட விருப்பம் என்ன சந்தியா "

"............."

"என்ன சந்தியா நான் சொன்னதுக்கு பதில் சொல்லாம இருக்க, ஏதாவது சொல்லு சந்தியா."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.