(Reading time: 20 - 39 minutes)

"ல்ல ஜீவா என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியாது, உங்களுக்கே தெரியும் என்னோட குடும்பம் என்னோட சம்பளத்தில் தான் நடக்குது, நான் கல்யாணம் செய்துக்கிட்டா என்னோட குடும்பம் என்ன ஆகறது,  என் தங்கைக்கு ஒரு கல்யாணம், என் தம்பிக்கு ஒரு நல்ல வேலை இதெல்லாம் அமைஞ்சதுக்கு அப்புறம் தான் என்னோட எதிர்காலத்தைப் பற்றி நான் யோசிக்க முடியும், அதனால...."

"சந்தியா என்னைப் பற்றி உனக்கு தெரியும், என்னோட குடும்பம்னு சொன்னா அது என்னோட அக்கா, மாமா மட்டும் தான், அவங்க இப்போ டில்லியில் இருக்காங்க, என்னை நம்பி அவங்க

இல்லை என்று உனக்கு தெரியும், நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உன்னோட குடும்பம், எனக்கும் குடும்பம் தான் நம்ம சேர்ந்து நம்ம குடும்பத்தை பார்த்துக்கலாம் இல்லையா??"

" ஜீவா நீங்க இப்படி சொல்றது உங்க நல்ல மனசை காட்டுது, ஆனால் இதெல்லாம் சரி வராது,"

 "ஏன் சந்தியா என்னை நீ நம்பலையா நான் மாறிடுவேன்னு நீ நினைக்கிறியா?? "

You might also like - Arasiyalla ithellam saatharanamappa

"அப்படி இல்லை ஜீவா, நீங்கனு இல்ல,நானே கூடத் தான் மாறிடலாம், கணவன் குழந்தைனு ஆனப்பிறகு,  என் குடும்பத்தை சரியா பார்த்துக்காம போகலாம், ரெண்டுப்பேரும் குடும்பத்தை நல்லாவே பார்த்துக்கிட்டாலும் வேற பிரச்சினைகள் கூட வரலாம், அதுல மனஸ்தாபம் ஏற்பட்டு, ஏன் இப்படி ஒரு கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூட தோணலாம்"

"ஏன் சந்தியா இப்படி யோசிக்கிற, நல்லதாவே நினைச்சா நல்லதே நடக்கும் இல்லையா??  பிரச்சினை வந்தாக் கூட அதை சமாளித்து நம்மால வாழ முடியாதா?? ரெண்டு மனசும் ஒத்து போகும் போது எல்லா பிரச்சினைகளையும் ஈசியா ஃபேஸ் பண்ணலாம் தெரியுமா?? "

"நீங்க சொல்வது சரிதான், ஆனால் நான் அப்படி நினைக்கல, கல்யாணம் செஞ்சுக்கிட்ட அப்புறமும் என் குடும்பத்த இப்படி பார்த்துக்க முடியாது, இன்னும் சில கடமைகள் எனக்கு வந்துவிடும், எனக்குனு ஒரு குடும்பம்னு வந்துட்டா, இப்போ இருப்பது போல் உரிமையா என்னிடம் பேச அவங்க தயங்களாம், அக்காவை நம்பிதான் நம்ம இருக்க வேண்டியிருக்கேனு அவங்க யோசிக்கலாம், அவங்களுக்கு தேவையானதை கேக்கககூட தயங்கலாம், அவங்களுக்கு இதுபோல கஷ்டத்தை குடுக்க நான் விரும்பல ஜீவா"

" சந்தியா நான் சொல்வதை...."

"ப்ளீஸ் ஜீவா என்னை கட்டாயப்படுத்தாதீங்க, நான் இந்த முடிவில் இருந்து மாற மாட்டேன்."

"ஒகே சந்தியா உன்னை நான் கட்டாயப்படுத்தல, நீ உன்னோட கடமையெல்லாம் முடிச்சிட்டு உன் வாழ்க்கையை பத்தி யோசிப்ப இல்ல, அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்"

"என்ன சொல்றீங்க ஜீவா, எனக்காக ஏன் நீங்க காத்திருக்கனும்"

"ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன், நீ கூடத்தான் என்னை காதலிக்கிறாய்"

"என்ன சொல்றீங்க" அதிர்ச்சியாக கேட்டாள்.

"நான் உன்கிட்ட காதலிக்கிறேன், கல்யாணம் செய்துக்க ஆசைப்படுகிறேன், என்று சொன்ன போது,  கல்யாணம் செய்துக்க முடியாதுனு சொன்னியே தவிர காதலிக்கவில்லைனு சொல்லலியே, எனக்கு அதுவே போதும், நீ என்னை காதலிக்கிறாய் என்று தெரியும்,  நீயும் கல்யாணம் செய்துக்கலாம் என்று ஒரு நாள் யோசிப்ப அதுவரைக்கும் உனக்காக நான் காத்திருப்பேன்."

"ஜீவா நீங்க...."

"உன்னை கட்டாயப்படுத்த வேண்டாம்னு நீ சொன்ன இல்ல, நீயும் என்னை கட்டாயப்படுத்தாதே இதுதான் என் முடிவு"

அதற்கு பிறகு அவன் அவளை வாதாட விடவில்லை, அவளுக்கு தான் சங்கடமான நிலை உருவானது, அவனிடம் இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை, அந்த நாட்களுக்கு பிறகு அவன் அவளை , என்னை காதலிக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொல்லை செய்யவில்லை, ஆனால் அதற்காக அவன் அமைதியாகவும் இருக்கவில்லை, சந்தியாவின் குடும்பத்தோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டான், அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்தான், அவர்களும் அவனுடன் இயல்பாக பழகினர்.

இதையெல்லாம் அவன் எதற்காக செய்கிறான் என்று அவளுக்கு தெரியும், அவன், அவள் குடும்பத்தோடு பழகுவதை பார்த்து , நம்பிக்கை பிறந்து அவனை திருமணம் செய்ய அவள் ஒப்பு கொள்வாள், என்று நினைக்கிறான், ஆனால் அது தெரிந்தும் தெரியாதது போல் அவள் இருக்கிறாள்.

சந்தியாவின் அம்மாவோ ஜீவாவின் எண்ணத்தை புரிந்து கொண்டார், இதைப்பற்றி சந்தியாவிடம் பேசினார், சந்தியா அவள் மனதில் உள்ளதை மறைத்து, அவனுடன் பேசியதை கூறினாள், அவளின் அம்மாவும் அவன் நல்லவனாகத்தான் இருக்கிறான், அவன் நம் குடும்பத்தை ஏற்று கொள்வான், அவனை திருமணம் செய்துக் கொள் என்று கூறினார், ஆனால் இது சரி வராது என்று அவள் தட்டிக்கழித்து விட்டாள், அவரும் இரண்டு மூன்று முறை அதைப் பற்றி பேசினார், இவள் கேட்கவில்லை என்றதும் அதோடு விட்டு விட்டார்.

னால் இன்று பிடிவாதமாக இருக்கிறார், இந்த நிலையில் ஜீவாவைப் பற்றி அவர் யோசிக்கவில்லை, இந்த திருமணத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தான் நினைக்கிறார், அவரையும் குற்றம் சொல்வதற்கில்லை, தன் கணவர் இறந்த பின் தன் பிள்ளைகளின் வாழ்வு என்னாகுமோ என்ற கவலை அவருக்கு, ஆனால் சந்தியாவால் அப்படி நினைக்க முடியவில்லை, அவளுக்குகாக காத்திருக்கும் ஜீவாவிற்கு அவள் என்ன பதில் சொல்வாள், அவனை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்வதாகவும் அவள் இதுவரை சொன்னதில்லை, அவள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அவன் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க முடியாது, ஆனால் அவளால் அப்படி செய்ய முடியுமா, அவளும் அவனை காதலிக்கிறாளே.

நான் ஜீவாவையே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று அவள் அம்மாவிடம் கூறினாலும் இப்போது இவள் சுயநலமாக யோசிக்கிறாள் என்று தான் அவர் நினைப்பார். என்ன முடிவெடுப்பது என்று அவள் குழம்பினாள்.

இந்த குழப்பங்களுடனே அவள் அலுவலக வேலையை முடித்துவிட்டு கிளம்ப தயாரானாள், வீட்டிற்கு போனால் அம்மாவிடம் என்ன சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள், அப்போது அவள் இருப்பிடத்திற்கு ஜீவா வந்தான், இதுவரை இருந்த குழப்பத்தில் அவள் ஜீவாவை மறந்தே போனாள், அவள் அலுவலகத்திற்கு வந்த உடன் ஒரு முறையாவது ஜீவா அவளிடம் பேசி விட்டு செல்வான், அவளும் அதை எதிர்பார்த்திருப்பாள், ஆனால் இன்று அவன் அப்படி வரவும் இல்லை, அவளுக்கு இருந்த குழப்பத்தில் அவனை எதிர்பார்க்கவுமில்லை, ஏனோ இன்று அவன் முகம் பார்த்து பேசவே அவளுக்கு தயக்கமாக இருந்தது, இந்த விஷயத்தை அவன் கேள்விப்பட்டால் அவன் என்ன நினைப்பான், அவனால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா?? என்று சிந்தித்து கொண்டிருந்தாள்.

அவன் வந்ததை பார்த்தும் கூட, ஏதோ சிந்தனையில் இருந்த சந்தியாவின் முன் கையை அசைத்து அவள் சிந்தனையை கலைத்தான் ஜீவா "என்ன சந்தியா ஏதோ தீவிரமா யோசிச்சிகிட்டு இருக்கப்போல"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை ஜீவா, இன்னிக்கு செய்ய வேண்டிய வொர்க் எல்லாம் முடிச்சிட்டேனான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், என்ன ஜீவா வீட்டுக்கு போகலையா"

"ம்... போகனும், சந்தியா அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசனும், வெளியே எங்காவது போகலாமா??"

அன்று அவன் காதலை சொல்ல வெளியில் அழைத்து போனதோடு சரி, அதன் பிறகு அவனொடு அவள் எங்கும் வெளியில் சென்றதில்லை, அவள் குடும்பத்தோடு நட்பை வளர்த்துக் கொள்ள வீட்டிற்கு தான் வருவான், வந்தாலும் வீட்டில் உள்ளவர்களோடு தான் அதிகம் பேசுவான், இன்று எதற்காக அழைக்கிறான், மனதில் நினைத்து கொண்டாலும் கேள்வி கேட்காமல் அவனுடன் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.