(Reading time: 13 - 26 minutes)

முதல் காதல் - லாவண்யா

This is entry #68 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

miss

மாலை வேளைக் காற்று சிலுசிலுவென்று அடித்துக் கொண்டிருக்க, முருங்கை மர இலைகள் காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன. அந்த மரத்திற்கு அடியில் நாற்காலியைப் போட்டு, கண் இமைகளை மூடி, மலரும் நினைவுகளுக்குள் மலர்ந்து கொண்டிருந்தார் மீனாட்சி.

மீனாட்சியின் நினைவுகள் கலையா வண்ணம், ஓசை எழுப்பாமல் வெளிக் ‘கேட்’டைத் திறந்து கொண்டு வந்த அவரது மருமகள் நந்தினி, அவரை வாத்சல்யத்துடன் பார்த்தவாறே, கையைப் பிடித்துக் கொண்டிருந்த மகளிடம், “ஸ்ஸ்ஸ்...” என உதட்டின் மேல் விரலை வைத்து, சத்தம் போடாதே என்று சைகை செய்தாள்.

தாயின் செய்தியைப் புரிந்த கொண்ட மூன்று வயது மகள் சாதனாவும் தாயைக் கடைப்பிடித்து, பிஞ்சு இதழ்களின் மேல் தளிர் விரலை வைத்தபடி, ‘ஸ்ஸ்ஸ்’ என்று நுனிப் பாதங்களில் பூனையைப் போல் வீட்டின் உள்ளே சென்றாள்.

மரநிழலில் கண் மூடி அமர்ந்திருந்த மீனாட்சியின் செவிகளில் கலவையான குரல்கள் எதிரொலிக்க, அந்தக் குரல்களுக்கேற்ப முகத்தின் உணர்ச்சிகள் நொடிக்கொரு தரம் மாறிக் கொண்டிருந்தன.

தன் கணவர் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றியதால் அவருக்கு இந்த முருங்கை மர நிழலை மிகவும் பிடிக்கும். ஏதோ அவர் நிழலிலே இளைப்பாறுவதாகத் தோன்றும். அந்த இனிய நினைவுகளில் மீனாட்சியின் முகத்தில் முறுவல் பிறந்தது.

சிதம்பரம், காவல் துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றினார். வேலையை மூச்சாக நினைத்துச் செயல்படுவார். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கேற்ப, தனக்கு இருப்பது போதும் என்ற பெரும் மனம் கொண்டவர்.

சிறுகச் சேர்த்து, தன் ரத்தத்தின் ரத்தங்களை குடி வைப்பதற்கென அழகானதொரு சிறிய வீட்டைக் கட்டினார். அப்படிச் சொந்தமாகக் கட்டிய வீட்டைப் பார்வையிடுவதற்குத் தன் குடும்பத்தைப் பெருமையுடன் அழைத்துக் கொண்டு சென்றவர், அந்த வீட்டின் முன்னால் முருங்கைக் கொம்பை நடுவதற்கு குழி தோண்டிக் கொண்டிருந்தார்.

“ஏங்க, முருங்கை மரத்தை வீட்டுக்கு முன்னாடி வைக்கக் கூடாது எனச் சொல்லுவாங்க...” என்றபடியே வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி வெளியில் வந்தார்.

நிமிர்ந்து மனைவியைப் பார்த்து, “ஏம்மா, வேதாளம் வந்து தொங்குமா என்ன?” எனப் பரிகாசமாகக் கேட்டாலும் அவர் செய்து கொண்டிருந்த பணியைக் கைவிடவில்லை சிதம்பரம்.

“அதில்லைங்க, பலமாக் காத்தடிச்சா முறிஞ்சுடுமே... சீக்கிரம் முறிஞ்சிடுங்கறதால தான் அதன் பெயரே முருங்கை... அது நமக்கு இடைஞ்சலா இருக்குமே...” என மீனாட்சி ‘படபட’வென்று பதில் சொல்லும் பொழுதே, தாயைப் பின்பற்றி வெளியில் வந்த அவர்கள் பெற்ற புதல்வி ரஞ்சனி இடையில் புகுந்தாள்.

“வேதாளம் புதுசா வந்து தொங்கணுமா அப்பா? அதான் தினம், தினம் நம்ம வீட்டிலே நடக்குதே...” எனத் தம்பி விக்ரமை பார்த்துக் கிளுக்கிச் சிரித்தாள் அந்த மங்கை.

“வேண்டாம் அக்கா... அப்புறம் வேதாளத்தின் அக்கா மட்டும் என்ன பெரிய அழகியான்னு நான் கேட்க வேண்டி வரும்” எனச் சிலிர்த்துக் கொண்டான் விக்ரம்.

மகவுகளின் செல்லச் சண்டையில் தலையிடாமல் புன்சிரிப்புடன் ரசித்தனர் மீனாட்சியும் சிதம்பரமும்.

“சொல்லுவடா சொல்லுவ... என் முகம் அம்மா மாதிரி அழகு... அதைப் பார்த்து வேதாளம் எனச் சொல்லுவியா? அப்பா, நீங்களே சொல்லுங்க... அம்மாவோட அந்த அழகுல மயங்கித் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என வேறொரு திரியைக் கொளுத்திப் போட்டாள் ரஞ்சனி.

விக்ரம் தாயின் செல்லப் பிள்ளை. தாயை யாராவது குறை சொன்னால் அவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவான். அதனாலேயே அம்மாவைப் போல் அழகு என்று ரஞ்சனி சொல்லி வைக்க, அவனால் அதை எதிர்த்து ஓர் வார்த்தைச் சொல்ல முடியுமா, என்ன?

என்ன சொல்வது என வார்த்தைகளை விக்ரம் தேடிக் கொண்டிருக்க, “நீ வேற ஏம்மா... உங்க அம்மாவைப் பொண்ணுப் பார்க்கப் போனப்போ மஞ்சளைப் பூசி, நல்லா மஞ்சள் விளக்குல நிக்க வச்சு என்னை ஏமாத்திட்டாங்க...” எனச் சொன்ன சிதம்பரத்தின் வாய் தான் பொய்யை உதிர்த்தன.

கண்களோ, முதன் முதலில் மீனாட்சியின் மேல் கொண்ட அதே காதலைக் கொட்டிக் கொண்டிருந்தன .

“அந்தக் காலத்துலேயே ‘போட்டோ ஷாப்’* பண்ணிட்டாங்கன்னு சொல்லுங்க...” என மேலும் தாயை வம்புக்கு இழுத்தாள் மகள்.

“என்னை வம்புக்கு இழுக்கலைன்னா அப்பாவுக்கும் பொண்ணுக்கும் தூக்கம் வராதே.. வேலையை முடிச்சுட்டு வாங்க.... நேரத்தோட வீட்டுக்குப் போகலாம்” என மீனாட்சி அதட்டினார்.

“அய்... அப்பா இது தானே வேண்டாங்கறது... பொண்ணுப் பார்க்கப் போனப்போ அம்மாவை சரியாப் பார்க்க முடியலைன்னு மறுநாள் விடியலிலேயே போய் திண்ணைல உட்கார்ந்து ‘சைட்’ அடிச்ச ஆளாச்சே நீங்க...” என மகன் நேரம் பார்த்து அவர் காலை வாரினான்.

மகன் சொன்னதைக் கேட்டு முறுவலித்த சிதம்பரத்தின் கண்களில் அவர்கள் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்திருந்தது.


 

*போட்டோ ஷாப் – மென்பொருளை உபயோகித்து, புகைப்படங்களை மெருகு ஏற்றுவது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.