(Reading time: 13 - 26 minutes)

ண்மை தான். மீனாட்சியைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்தே சிதம்பரத்தின் மனதில் மீனாட்சி நீக்கமற இடம் பிடித்துவிட்டாள். பார்த்து முற்றிலும் ஒரு நாள் கூட ஆகாத பெண்ணின் நினைவு அவரை இப்படி அலைக்கழிக்கும் என்று முன்தினம் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்.

மீனாட்சி அதிகாலையில் எழுந்து கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்குச் செல்வாள் எனத் தெரிந்து கொண்ட சிதம்பரம் அன்றிரவே நடுச்சாமத்தில் மீனாட்சியின் வீட்டுத் திண்ணையில் போய் தவம் கிடந்தார்.

இதையறியாத மீனாட்சி வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து வர, திண்ணையில் சுருண்டிருந்த சிதம்பரத்தின் உருவம் கண்களில் விழுந்தது. உடனே, “ஐயோ திருடன்” எனக் கத்த ஆரம்பித்தாள்.

மீனாட்சியின் அலறலில் சிதம்பரம் அவளின் வாயைப் பொத்தி, “நான் தான்... போலீசையே திருடனாக்கிட்டியே” என இரகசியக் குரலில் நகைச்சுவைத் ததும்பச் சிரித்த சிதம்பரத்தின் முகம் மீனாட்சியின் மனதில் ஆழப் பதிந்ததில் ஆச்சர்யமில்லை.

இருவருக்குமே அது முதல் காதல் என்பதில் ஐயமில்லை... ஆனால் எக்கணத்தில் காதல் பிறந்தது என்பதற்கு இருவரிடத்திலும் பதிலில்லை.

முதல் காதலின் வெற்றி என்பது காதலர்கள் ஒன்று சேர்வதிலில்லை. அதன் வெற்றி கடந்து போன வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்து இனிமை கொள்வதில் உள்ளது.

ழைய நினைவுகளில் மீனாட்சியும் சிதம்பரமும் நெகிழ்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அன்றிரவு வேலை முடிந்து, நள்ளிரவு தாண்டித் தான் சிதம்பரம் வீட்டுக்கு வந்தார். உணவை அருந்திவிட்டுக் கண்ணயர்ந்தவர், சற்று நேரத்தில் பாயில் படுத்துக் கொண்டிருந்த மனைவியின் “ஆ” வென்ற அலறலில் திடுக்கிட்டு எழுந்தார்.

அவசரமாக விளக்கைப் போட, குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் இருந்து விழித்து, கண்ணைத் தேய்த்துக் கொண்டனர்.

மிரள, மிரள நின்று கொண்டிருந்த மீனாட்சி, பாயைச் சுட்டிக் காட்டினார். அங்கே சிதம்பரத்தின் மீசையை விடப் பெரிய மீசையை வைத்திருந்த கரப்பான் பூச்சி, அதை ஒய்யாரமாக ஆட்டிக் கொண்டு நின்றது.

சிதம்பரத்தைப் பாதித் தூக்கத்தில் எழுப்பியதற்கு அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக மனைவி காட்டிய கரப்பான் பூச்சியை அடித்துத் தூர எரிந்துவிட்டு,

“ஏம்மா, இந்த அர்த்த ராத்திரியில இப்படிச் சத்தம் போட்டா நான் தான் உன்னை அடிச்சுக் கொடுமைப் படுத்தறேன்னு எல்லோரும் தப்பா நினைச்சுக்கவா? சத்தமில்லாம என் பெயரை ரிப்பேர் பண்ண நல்லா வேலை செய்யற...” என்றார் புன்சிரிப்புடன்.

சிதம்பரம் காவல்துறையில் பணியில் இருந்தாலும் இதுவரை யாரும் அவர் மற்றவரைக் கடிந்து பேசிப் பார்த்ததில்லை. நண்பர் பார்த்தசாரதி கூட, ‘நீ போலீஸ் வேலைக்கே லாயக்கில்லை, சிதம்பரம்’ என்று சொல்வார்.

மனைவி மக்களிடம் அதீத பாசம் கொண்டு அவர்களை நேசிப்பவர். சொத்து சுகங்களை விட அன்பையும், சந்தோஷத்தையும் முன் நிறுத்துபவர். அவர்கள் வாழும் வாழ்க்கை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஓர் அழகிய கனவு.

வீட்டைக் கட்டிய சில மாதங்களிலேயே சிதம்பரத்திற்கு வேலை உயர்வுடன் பணி மாற்றலும் கிடைத்தது. பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பை முன்நிறுத்தி சிதம்பரம் மட்டுமே மதுரைக்குச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

அவர்களின் அழகிய கூட்டைக் கலைக்கவென்று காலன் காத்திருக்கிறான் என்பது தெரியாமல் சிதம்பரம் மதுரைக்கு ரயிலேறினார். ஒரே வாரத்தில் மீனாட்சியின் தலையில் இடியை இறக்கியவாறு அந்தத் துயரச் செய்தி வந்து சேர்ந்தது.

முக்கிய புள்ளி ஒருவருக்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த சிதம்பரத்திற்கே பாதுகாப்பில்லாமல் போய் விட்டது. ரயில்வேத் துறை ஆட்களிடம் அந்த முக்கிய புள்ளியை ஒப்படைத்து விட்டு, மனைவி மக்களுடன் தொலைபேசியில் பேசுவதற்காக வீடு செல்ல வேண்டும் என அந்த இரவு நேரத்தில் உற்சாகமாகப் புகைவண்டியில் இருந்து இறங்கினார் சிதம்பரம்.

அதே சமயத்தில் மெதுவாக வண்டி நகர ஆரம்பிக்க, அவர் தன் காலை பிளாட்பாரத்தில் வைத்தார். அந்தக் காலன் வாயைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைப் போல் பிளாட்பாரம் உடைந்து பெரிய ஓட்டையுடன் இருந்ததை அந்த இருட்டில் அவரால் பார்க்க முடியவில்லை.

செப்பனிடப்படாத அந்த இடத்தில் இறங்கியது அவர் தவறா, இல்லை காலத்தின் தவறா?

எதிலும் நிதானமாகச் சிந்தித்து, நிதானமாகச் செயல்படும் அவரை எது அங்கே இழுத்துச் சென்றது? ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்?

எல்லாம் ஒரே நொடியில் முடிந்துவிட்டது. புகைவண்டியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டாரா, அல்லது காலத்தின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டாரா? மீனாட்சி சிதம்பரத்துடன் வாழ்ந்த அந்த இனிய வாழ்க்கைக்கு விதி முற்றுப் புள்ளியிட்டு முடித்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.