(Reading time: 13 - 26 minutes)

ரசுப் பணி என்பதால் கருணை அடிப்படையில் கிடைத்த எழுத்தர் வேலையில் வைராக்கியத்தைக் கடைபிடித்துக் கொண்டு, ‘உங்க அம்மாவுக்கு எதுவும் தெரியாது’ என்று சொன்ன சிதம்பரத்தின் கூற்றைப் பொய்யாக்கிவிட்டு, பெற்ற மகவுகளைக் கரையேற்றப் போராடினார் மீனாட்சி.

ஆண்டாண்டு காலமாகப் பொழிய வேண்டிய அன்பையும், பாசத்தையும் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் மனைவி மக்கள் மேல் சிதம்பரம் செலுத்தியது, இந்த முடிவை முன்பே அறிந்து வைத்ததால் தானோ என்று மீனாட்சி அடிக்கடி நினைப்பது உண்டு.

முருங்கை மர நிழலில், அமர்ந்திருந்த மீனாட்சியின் கண்களில் கண்ணீர் கோடுகளாக இறங்கியது. இது இன்று நேற்றல்ல, சிதம்பரம் அவரை விட்டுச் சென்று பல வருடங்கள் கடந்தும் மீனாட்சியின் மனதில் இன்றும் அவரின் பிரிவு ரணமாக அறுத்துக் கொண்டு தான் இருக்கிறது.

முருங்கை மரத்தில் இருந்த முட்டை போன்று முழித்துக் கொண்டிருந்த மொட்டொன்று, மெத்தென மீனாட்சியின் கன்னத்தில் விழுந்து அவரை நனவுலகத்திற்கு அழைத்து வந்தது.

அப்பொழுது தான் கன்னங்களில் வரைந்த காவியம் அவர் நினைவுக்கு எட்ட, அவசரமாக அதைக் கை கொண்டு துடைக்க முனைந்தார். அதுவரை அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர் பேத்தி அதை விட அவசரமாக, “பாட்டி உங்க ‘கிரையிங் ரூம்’ல போய் அழுதுட்டு வாங்க... இது சிரிக்கிற இடம்”... என்றதும் மீனாட்சிக்குப் புன்னகை அரும்பியது.

அவள் குறும்பு செய்து அடம் பிடித்து அழுதால் இப்படித் தான் அவளைக் கண்டிப்பார்கள் அவளைப் பெற்றவர்கள். அவளும் கண்ணைத் துடைத்தவாறு, ‘ஹி.. ஹி..ஹி..’ என்று சிரிப்பாள்.

அதை அவள் பாட்டியிடமே சொன்னதும் மீனாட்சிக்குச் சிரிப்புப் பொங்க, பேத்தியை அணைத்துக் கொண்டார். இதை உள்ளிருந்து மருமகள் நந்தினி கவனித்துக் கொண்டிருந்தாள்.

ன்றிரவு நந்தினி, கணவன் விக்ரமிடம், “ஏங்க, அத்தை இன்னும் எத்தனை நாள் தான் மாமாவை நினைச்சு அழுதுட்டே இருப்பாங்க...? இத்தனை நாள் சாதனா வீட்டில் இருந்தாள். அதனால் அவங்களுக்குத் தனிமை இல்லை... இப்போ அவளும் ஸ்கூலுக்குப் போறா... அதனால நான் ஒண்ணு சொல்லட்டுமா?” எனக் கேட்டு அவள் மனதில் உதித்த ஆலோசனையைச் சொன்னாள்.

நந்தினி சொன்னதை அப்படியே தாயிடம் எடுத்துச் சென்று பேசினான் விக்ரம். “அம்மா, நீங்க பகல்ல தனியா இருக்கறீங்களே... வேணா ஓர் குழந்தைகள் கவனிப்பு மையம் ஒன்றைத் துவக்கலாமா?” எனக் கேட்டான்.

மீனாட்சிக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும் என்ற எண்ணத்தில் தான் விக்ரம் அவ்வாறு கேட்டது.

ஆனால் மீனாட்சி, “பணத்திற்காகப் பார்த்துக்கறதா? அதில அன்பு எங்கிருக்கு? அது சரி வராது” என்று மெல்லிய குரலில் சொன்னார்.

விக்ரமிற்கு மனம் பாரமாகக் கனத்தது. படபடவென்று பேசும் அந்தத் தாயை அவன் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. தாய் சொன்னதற்கு மறுபேச்சு பேசாமல் சென்றுவிட்டான்.

ஆனால் சில தினங்களில் மகனை அழைத்த மீனாட்சி, “வேணா ஒரு முதியவர் காப்பகம் நடத்தலாம். பணம் செலவாகும்... பரவாயில்லை... சமாளிக்கலாம். அவர்களுக்குத் தான் இப்போது நிறைய அன்பு தேவைப்படுகிறது” என்றார்.

தாய் சொன்னதைக் கேட்டதும் விக்ரமிற்கு உற்சாகம் தாளவில்லை. உடனே தாயின் மனதில் உருவான கருவிற்கு, அவர்கள் வீட்டின் பின்னாலேயே உயிர் தந்துவிட்டான்.

மூன்று வருடங்கள் கழிய, அந்த மையத்தில் இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் இருக்கிறார்கள். நன்கொடை, அன்பளிப்பு, சொந்தப் பணம் என்று அந்தக் காப்பகம் மிக நன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.

மீனாட்சியையும், அவர் பணியையும் கேள்விப்பட்டு ஊடகங்களில் இருந்து வந்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியோடு அவரைப் பாராட்டிச் செய்தியும் பத்திரிக்கைகளில் வெளியானது.

“பரவாயில்லை மீனாட்சி... எப்படியோ, நீ உன் கஷ்டத்தில இருந்து வெளியே வந்துட்ட... எதையும் தாங்கும் பக்குவம் வந்துடுச்சு” எனப் பக்கத்து வீட்டு பத்மா மெச்சிக் கொள்ள, மீனாட்சி மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டார்.

அந்தச் செய்தியினைப் படித்த பெங்களூரில் வசிக்கும் மகள் ரஞ்சனி, தாயை அழைத்து, தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டாள். “இப்போ தான்ம்மா எங்களுக்கு நிம்மதியா இருக்கு. ஒருத்தர் உலகத்தை விட்டுப் போய்ட்டா அவரோட நம்ம வாழ்க்கை முடிஞ்சிராது. அதை நீங்க இப்போ புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க” என்றாள் மகள்.

தந்தை மேல் அதீத அன்பு கொண்டவள் தான். தந்தை பிரிந்த சமயத்தில் அவரை நினைத்து கண்ணீருடன், கவிதையையும் சேர்த்து வடித்தவள் தான். ஆனால் காலம் அவளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைத்தது. அதனாலேயே தாய்க்கும் அதை எடுத்துச் சொன்னாள்.

தமக்கைக்குச் சற்றும் குறையாமல் விக்ரமின் மனநிலைமையும் உற்சாகமாகத் தான் இருந்தது. தினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அன்னைக்கு இப்பொழுது நேரமே கிடைப்பதில்லை.

காலையில் எழுந்தால் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொண்டு பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறாரே. இல்லாவிட்டால் அழுதே கரைந்திருப்பார்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.