(Reading time: 9 - 17 minutes)

நீ

உச்சரித்த பிறகுதான்

என் பெயரே

எனக்குப் பிடித்தது;

நீ

உச்சரிக்காமலே

உன் பெயர் பிடிக்கிறதே!

என் டைரியின் இரண்டாவது பக்கம் நிரம்பியது.

வாழ்வின் ஒரே இலட்சியம் போல அவளை அணுகினேன். அவசரப்படாமல். கண்ணாடிப் பாத்திரத்தை கையாளும் கவனத்துடன். நட்பை உடைத்துவிடாமல் அதை காதலாய்ச் செதுக்க முயன்றுகொண்டிருந்தேன்.

எனக்கும் அவளுக்கும் நிறைய ஒற்றுமைகள்.

தமிழ் பிடிக்கும் இருவருக்கும்.

பாரதி, சுஜாதா, மாம்பழம், இனிப்பு, சிவன், பாட்டு, கவிதை... எல்லாவற்றிற்கும் மேலாய், மழை.

புனாவிற்கு மழை என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எங்கள் முதல் தனிமை மழையால் கிடைத்தது.

மழை

என் காதலி

கொட்டும் வைரங்களால்

சொட்டும் சொந்தக்காரி...

என்று சொன்னபடி நான் ஒரு மாலையின் மெல்லிய மழையில் நனைந்துகொண்டிருந்தேன். அதைவிட வேறு என்ன சுகம் இருக்க இயலும். (அப்போதெல்லாம் நனைந்துவிடுமே என்று அடைகாக்க பையில் கைப்பேசி கிடையாது. அம்மாவின் திட்டுக்கு மட்டும் அஞ்சினால் போதும்!)

வளர்ந்துவிட்டதன் தயக்கத்தோடு ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த புவனா என்னைப் பார்த்ததும் தானும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இறங்கி வந்தாள். அருகில் வந்தபிந்தான் அவளையே நான் கவனித்தேன்.

”என்ன மழைல நனையுற?”

“ஏன், நீ மட்டும்தான் நனையனும்னு உரிமை வாங்கிருக்கியா?”

அவளையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். மழையை மறந்துவிட்டேன்.

“அப்படியே நடப்போமா?”

“ம்ம்” எங்கே என்றெல்லாம் கேட்கவில்லை அவள்.

அடுத்த அரைமணி நேரம் என் வாழ்வில் என்றுமே மறக்க இயலாதவை. அதன் ஆயிரத்திஎண்ணூறு நொடிகளும் அத்துப்படி எனக்கு. அதை நான் கவிதையாகவோ வேறு எந்த வடிவிலோ எங்கும் எழுதிச் சேமித்து வைக்கவில்லை, அவை என் நெஞ்சிலேயே படிந்திருந்தன.

அதிகம் மழை பற்றியே பேசினோம். என் பேச்சில் பாதியைக் கவிதை என்றாள் அவள். சாகித்திய அகாடமி விருது கொடுத்திருந்தால் கூட அத்தனை மகிழ்ந்திருக்க மாட்டேன். ஏற்கனவே எழுதியவை என்று புளுகி வாயில் வந்ததையெல்லாம் சொன்னேன். அவளைக் கவர்ந்துவிட கவனமாய் வேலை செய்தது என் மூளை.

அடுத்த நாள் அவள் கண்ணில் படும்படி என் டைரியை வைத்துக்கொண்டிருந்தேன். எதிர்ப்பார்த்தபடியே என்னவென்று கேட்டாள். காட்ட மனமில்லாதவனைப் போலக் காட்டினேன். “இவ்ளோ கவிதை எழுதி இருக்கியா? படிச்சுட்டுத் தரவா?”

”சரி, ஆனா, வேற யாருக்கும் கொடுக்காத”

அவை எல்லாம் அவளுக்காக எழுதப்பட்டவை என்பதைச் சொன்னவுடன் அதிசயிப்பாள் என்று நினைத்தேன், அதிர்ந்தாள். அடுத்த ஒரு வாரம் அவள் என்னைத் தவிர்த்தாள். ஆனால் என் டைரி மட்டும் அவளோடே இருந்தது. அதில் இடம் பெற வேண்டிய புதிய கவிதைகள் என் நெஞ்சோடே.

டைரியைத் திருப்பித் தந்துவிட்டு மீண்டும் என்னோடு பேசத் தொடங்கினாள். காதல் பற்றி எதுவும் சொல்லாமல். சில நாள்கள் அப்படியே சென்றன. என் மழைக் கவிதைகளை எழுதித் தரச்சொன்னாள். அவளுக்காக நிறைய எழுதினேன். அவளையே மழையாய்க் கருதி எழுதினேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.