(Reading time: 12 - 23 minutes)

ரிதி, சில தகவலுக்காக தமிழ்நாட்டை விட்டு வடமாநிலம் செல்லும் நிலை ஏற்பட்டது. தன்  வேலையை முடித்துக் கொண்டு வரும் பொழுது, தன்  நண்பன் ஒருவனைக் காண சென்றான்.அப்பொழுது, திடீரென்று ஒரு பெண் தன் பக்கத்தில் அமர்ந்ததும் சற்று திடுக்கிட்டான்.ஏனென்றால் அவ்விரவு நேரத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தன.சற்றே அதிருப்தியுடன் அவளைப் பார்க்க, அவள் பல வண்ணங்கள் கொண்டப் புடவை அணிந்து, முகத்தை சேலையால் மறைத்திருந்தாள். இவன் மனதில் “எங்கேனும் விழாவிற்கு சென்றிருக்க வேண்டும் ஆனால் இந்நேரத்தில் தனியாக! ரொம்பவும் தைரியமானவளா இருக்கனும்” என்று நினைத்துக் கொண்டான்.

அப்பெண்ணோ! இவனைப் பார்க்காமல் தலைகுனிந்து மேலும் சற்று நெருங்கி அமர்ந்தாள். பரிதிக்கு எரிச்சலும் சற்று கோபம்கூட வந்தது. அவன் பெண்களை மதிப்பவன்தான் சில தோழியரும் இருக்கின்றனர்.ஆனால் இப்பெண்ணின் செயல் அவனுக்கு கோபத்தை உண்டுபண்ணியது. மீண்டும் அப்பெண்ணைப் பார்க்க, அவள் யாருக்கோ பயந்து  அவனருகில் நெருங்கியது போல் தோன்றியது.

திடீரென்று இரண்டு பேர் ஏற, அந்தப் பெண்ணின் உடல்  நடுங்குவதைக் கவனித்தவன் சட்டென்று நெருங்கி அவளைத் தன் தோளில் சாய்த்து கொண்டான். அவள், ஒரு தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பு இப்படிதான் இருக்குமோ? என்று நினைக்கலானாள். அவர்கள் சென்றபின் மீண்டும் பழைய நிலையில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அவன் இறங்குமிடம் வர, அப்பெண்ணை எழுந்திருக்கச் சொல்லி அவளுடனே இறங்கினான். சிறிது தூரம் சென்றவுடன் திரும்பி பார்த்து முகத்தை சுளித்தான்.அதைப் பார்த்தவளின் முகம் துயரத்தைப் பூசியது. அழகிய முகம் கொண்டவள்தான் ஆனால் பொருந்தாத பூசிகளைப் பூசி சற்று விகாரமாக தெரிந்தாள் (குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பதினான்கு வயதில் இருபது வயதிற்கேற்ப ஒப்பனை கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி) அவளைப்பற்றி இந்தியில் விசாரிக்க ஆரம்பித்தான்.தான் காவல்துறையை சேர்ந்தவன் என்றும் அதனால் தயங்காமல் அவளுடையப் பிரச்சினையைக் கூறுமாறு கூறினான். அவன் காவல்துறையை சார்ந்தவன் என்றதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது.

அதை கண்டுகொண்ட பரிதி, அவளிடம் பயப்படாதே!உன்னுடையப் பிரச்சினை சொல் உனக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் என்றான். இப்பொழுது அவன் முகத்தில் சிறிது கனிவு வந்திருக்கவே, அவள்  தான் ஒரு அனாதையென்றும் அவள் தாய் சிறிது காலத்திற்கு முன்னால் இறந்துவிட்டதாகவும், இப்பொழுது தன் தாய் பிறந்த மாநிலமான தமிழ்நாட்டிற்குச் செல்வதாகவும் கூறினாள். அவன் அவளைப் பார்த்து, முழுமையாக உன்னைப் பற்றி கூறினால்தான் என்னால் உதவ முடியும் என்றான். அவள் தயக்கத்துடன் தன் தாய் ஒருவனை நம்பி ஊரைவிட்டு வந்தவள் என்றும், தன் பிறப்பிற்குக் காரணமானவன் தன் தாயை தன் இச்சைத் தீர்ந்தவுடன் விலைப் பேசி விற்று விட்டான் என்று சொல்லும் பொழுது அவனுக்கு அவள் துர்க்கையைப் போல் தெரிந்தாள். மேலும் தொடர்ந்து, என் தாய் என்னை அங்குதான் ஈன்றாள். எந்த குழந்தைகளுக்கும் அப்படி ஒரு பிறப்பு இருக்கவே கூடாது முடிந்தவரையில் அந்த ஈனப்பிறப்புகளினன் நடுவே என்னைப் பாதுகாத்தாள். உங்களுக்குத்  தெரியுமா? சிறுப்பிள்ளைகள் என்றுகூட பார்க்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் என் தாய் தனியே என்னை அழைத்து வந்து வளர்த்தார். அதனால் அவள் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் சொல்லவே இயலாது. எனக்காக  அவளுக்குப்  பிடிக்காததை செய்ய பழகிக் கொண்டு என்னை வளர்த்தாள். என் தாய் போன்றவர்கள் மற்றவர்களைப் போல் வாழ முயன்றாலும் இச்சமுகம் விடுவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன்  இந்த துன்பம்? நீங்கள் எங்களுக்குத் தந்த அடையாளம்தான் என்ன? நான் ஒரு இளங்கலைப் பட்டதாரி ஆனால் என் அடையாளமாக சமூகம் தந்தது  விலைமாதின் பெண். நீங்கள்  பார்த்தீங்களே! அந்த இருவரும் எனக்கு, விலைமாதின் பெண்ணுக்குப் பதிலா விலைமாதுப் பட்டத்தைத் தர ஆசப்படும் அரக்கர்கள். அவங்ககிட்ட இருந்துதான் தப்பித்து வந்தேன் என்று கூறி நிறுத்தினாள்.

பரிதி அவளின் நிலையைப் பார்த்து வருத்தம் கொண்டு அவளுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்று முடிவு செய்தான். ஒரு முடிவுடன் அவளிடம், உன் பேர் என்ன? என்று கேட்டான். அவள் நிறைமதி என்று  கூற அவனுக்கு அப்பெயர் பிடித்திருந்தது (நிறைமதி-முழுமையான அறிவுடையவள் மனதில் கூறிக் கொண்டான்) நான் உன்ன ஒரு முதியோர் இல்லதுல சேர்த்து விடுறேன், அவங்களுக்கு உறுதுணையாக இருப்பதுதான் உன் வேலை இதுக்கு சம்மதமா? அப்படியே பகுதிநேரமா மேலும் படிப்பதற்கும் வழி  செய்கிறேன் என்று  சொன்னான். மதி மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள் (மனதில் ஒரு குரல், “இவரை நம்பிப் போ மதி உனக்கு நல்லதே நடக்கும்” என்று கூற, இவளும் ஆமாம் எனக்கும் இவரிடம் ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றுகிறது என்று கூறினாள். இது உண்மைதானே! சில நேரங்களில் நமக்கு சில பேரிடம் அவ்வுணர்வு தோன்றும் அவர்கள் நமக்கு நெருங்கியவராக இல்லாமலும் இருக்கலாம், சில நபர்கள் மட்டுமே பொய்த்துப் போவர். மதிக்குதான் அவன் அரவணைப்பிலே புரிந்துவிட்டதல்லவா).   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.