(Reading time: 21 - 41 minutes)

2017 போட்டி சிறுகதை 73 - உயிரூற்று - தமிழ்தென்றல்

This is entry #73 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை − நட்பு

எழுத்தாளர் - தமிழ்தென்றல்

Paddy field

திகாலை நான்கு மணி என்பதை சாமிகண்ணு எப்படி அறிவாரென்பது ஒரு அதிசயமே; சரியாக அந்த சமயத்தில் கண் விழித்து விடுவார்.  இந்த அதிசயத்திற்கு அவர்களின் ஆழமான உறவு காரணம்.  அவருக்கும் பயிர் நிலத்துக்குமான உறவு அது.    

வழக்கமான காலை கடமைகளை இன்று ஒரு பரபரப்புடன் முடித்து வந்தவர்

“ஏத்தா முருகாயி, வள்ளி எந்திருங்கம்மா.. விடிஞ்சும் தூங்கிகிட்டு..” என்றார் கண்டிப்பான குரலில்.

“நான் வயலுக்கு போயிட்டு வரேத்தா” தன்னை வளர்த்து வாழ வைத்து கொண்டிருக்கும் தெய்வத்தை நோக்கி நடந்தார் சாமிகண்ணு.

பெற்ற பிள்ளையிடம் பொங்கும் அன்பு கண்களில் பொங்கிட நெற்பயிரைப் பார்த்தவர் மனதிலெழுந்த வலி நிறைந்த வேதனையை விளக்க எந்த மொழியிடமும் வார்த்தைகளின்றி தவித்து போயின.  மேகமாய் மனதில் சூழ்ந்த வலி அவர் கண்களில் மழையை பெருக்கியது. 

மனதிலெழுந்த கேள்விகளுக்கு பதில் தேடி போராடி தோற்றவர் வரப்பில் அசைவற்று உட்கார்ந்திருந்தார்.  பித்துபிடித்த பரியென ஓடிய மனதினை கட்டுபடுத்தி ஒரு முடிவுக்கு வந்தவர், “என் உசுரு போகுமுன்ன உங்க உசுர போக விடமாட்டேன்” ஆவேசமாக நெற்பயிரிடம் சூளுரைத்தார் சாமிகண்ணு.

அவரின் ஆக்ரோஷமான வார்த்தைகளை கண்டறியாத காற்று பயந்தோடி மரங்களிடம் அப்பயத்தினை பரப்பியது.  அவை வெளவெளத்து சலசலத்தன.  அங்கொன்றும் இங்கொன்றுமாய் வயலிலிருந்த வெள்ளை நிற பறவைகள் சட்டென கேட்ட இடிமுழக்கம் போன்ற வார்த்தைகளால் சிதறிப் பறந்தன.

சாமிகண்ணுவின் உயர்ந்த மன எண்ணங்களும் உயரமான உருவமும்; நரை திரை விழுந்த பின்னரும் அவரின் கம்பீரத்தை அதிகபடுத்தின.  அவரின் வயதுடன் சேர்ந்து கம்பீரமும் கூடியது என்று அரசியூரில் எல்லோரும் நம்பினர்.  ஊர் மக்களிடையே அவரின் நிமிர்ந்த நடையும் கனிவான பேச்சும் அவருக்கு மரியாதையை ஈட்டியிருந்தன.

சாமிகண்ணுவின் கனிவான பேச்சை மட்டுமே அனைவரும் அறிந்திருக்க இன்றோ அவர் வெறியோடு பெருங்குரலெடுத்து ஆவேசமாய் கூவியதும் வயல்வெளி, மரங்கள், பறவைகளென அனைத்தும் பயந்து நடுங்கி போயின.

வீட்டை அடைந்தவர் காலை உணவை முடித்து வெள்ளை வேட்டி சட்டை துண்டணிந்து கம்பீரமாக தஞ்சாவூருக்குக் கிளம்பினார்.

“சாமி.. சத்தே திண்ணைல ஒக்காருங்க.. இந்தா வாரே..” என்றபடி வீட்டினுள் சென்றாள் முருகாயி.

சாமிகண்ணுவை வாழ வைக்கும் தெய்வம் பயிர் நிலமானால்; அவருடைய வாழ்வே மனைவி முருகாயி தான்.  தன் பதினாறாம் வயதில் தன்னை கை பிடித்த முருகாயி…. எப்படி தன் வாழ்வாகவே மாறிப்போனாள் என்று சில சமயங்களில் அவர் ஆச்சரியபடுவதுண்டு.  முருகாயி எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் என்பது அவரின் ஆழமான நம்பிக்கை.  இப்போதும் ஏதோ காரணமிருப்பதை அறிந்து அமைதியாக திண்ணையில் அமர்ந்திருந்தார்.   

சாமிகண்ணுவின் இத்தனை வருட விவசாய வாழ்வில் விவசாயம் குறித்த அவரின் கணிப்புகள் தவறானதில்லை.  அவரின் இளமை காலத்தில், ஒரு முறை அரசியூரில் கடும் வறட்சி நிலவியது.  பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் போனது.  காவேரியாற்று நீரும் திறக்கபடவில்லை.  ஊர் கிணறுகளில் இருந்த சிறிதளவு நீரை நம்பி யாரும் பயிர் செய்யவில்லை.  ஆனால் சாமிகண்ணுவின் மனமோ குறுவை சாகுபடி செய்தால் நல்ல விளைச்சல் பெறுமென சொல்லவும் அதற்கான ஏற்பாட்டில் முனைந்தார். 

அரசியூர் மக்கள், “இவனுக்கு கிறுக்கு புடிச்சிருக்கு… குறுவைக்கு அதிமான தண்ணீ பாய்ச்சனும்னு கூட தெரியாம… குடிக்கற தண்ணீக்கே திண்டாடுற இந்த நேரத்துல குறுவை சாகுபடி செய்யுறானா?” என்று அவரை எள்ளி நகையாடினர்.  அந்த இளம் வயதில் மனதிலிருந்த நம்பிக்கையை விடாது அவர் முன்னேறினார்.  சாமிகண்ணுவின் மனதின் வார்த்தை பொய்க்கவில்லை.  காவேரி நதி ஊற்றெடுக்கும் பகுதி மற்றும் நதியின் கரையோர பகுதிகளில் திடீரென பெய்த பெருமழையால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு தண்ணீர் அரசியூரையும் செழுமையாக்கியது.  சாமிகண்ணுவின் குறுவையும் நல்ல விளைச்சல் கொடுத்தது. 

அரசியூர் மக்கள் சாமிகண்ணுவின் கணிப்பை வியந்தனர்.  அதன் பிறகு பலமுறை எந்த விளைச்சலானாலும் அவரிடம் கேட்ட பின்பே ஆரம்பித்தனர்.  ஊர் மக்களிடம் அவர் மீதான மரியாதை பெருகியது.  அன்றிலிருந்து ஊரின் முக்கியமானவர்களில் ஒருவராகிப் போனாரவர்.  அதன் பிறகு அவர் மனதில் தோன்றியதன்படி பயிர் செய்தவருக்கு ஒரு நாளும் நஷ்டம் ஏற்பட்டதில்லை.  அவரின் விவசாயத்தின் மீதான காதலை உணர்ந்தவருக்கும் மட்டுமே புரியக்கூடிய அதிசயமது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.