(Reading time: 11 - 21 minutes)

2017 போட்டி சிறுகதை 124 - காதல் கொன்றேன் - ஐஷ்வா

This is entry #124 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க.

எழுத்தாளர் - ஐஷ்வா

Heart stab

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்.. நினைக்கும்போதே சுளீர் என வலித்தது.

’மாங்கல்யம் தந்துனானே...’

மத்தள ஓசை அவள் தலையில் இடியாக விழ... அட்சதைகள் எரிநட்சத்திரங்களாக மேனியைத் தாக்க... கண்ணை மூடியவளாக.. அஸ்வின் கரங்கள் கட்டிய அந்த தாலியை கழுத்தில் வாங்கிக்கொண்டாள் மிதுனா!

ம்மாவிடம் பத்தாவது முறையாக கெஞ்சிப்பார்த்தாள். “அம்மா ப்ளீஸ்ம்மா இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் வேணாம்மா. கொஞ்சம் கொஞ்சமா இந்த கல்யாணத்தை என் மனசு ஏத்துக்கிட்ட பிறகுதான் சாந்தி முகூர்த்தமெல்லாம் நடக்கும்னு சொல்லி இருந்தீங்களே..”

“உன்னை சம்மதிக்க வைக்கறதுக்காக அப்படி சொன்னோம். அதையே நாங்க மாப்பிள்ளை வீட்டுல சொன்னோம்னா ஆயிரம் கேள்விங்க கேட்கமாட்டாங்களா? அதனால முட்டாள்தனமா தகராறு பண்ணாம... ஆண்டவனா பார்த்து அள்ளிக்குடுத்திருக்கிற இந்த வாழ்க்கையை புத்திசாலித்தனமா காப்பாத்திக்க.... ரஞ்சனி நீதான் இவளுக்கு எடுத்துச் சொல்லணும்”

அம்மா போவதுவரை காத்திருந்த ரஞ்சனி.. மெல்ல மிதுனா தோளைத்தொடவும் ...அவள் அப்படியே அண்ணி தோள்மேல் சரிந்து குலுங்கினாள்.

“என்ன அண்ணி.. எல்லாருமா சேர்ந்து ஒரே நாள்லேயே என் பிரதீப்பை மறக்கடிச்சிருவீங்க போல இருக்கே..”

“மறக்காம? அவனையே நினைச்சுக்கிட்டிருக்கப் போறியா? இன்னைக்கு காலையிலே ஏழுமணிவரை நான் உனக்காகவும் உன் காதலுக்காகவும் உங்க அண்ணன், அப்பா, அம்மான்னு ஒவ்வொருத்தர்கிட்டேயா போராடத்தானே செஞ்சேன். எப்போ உன் கழுத்துல அஸ்வினோட மூணு முடிச்சு விழுந்துச்சோ.. அதோட அந்த ப்ரதீப் சேப்டர் க்ளோஸ். ஏறமுடியாம போன பஸ்ஸை யாரும் தொரத்திட்டே இருக்க முடியாது. உனக்காகன்னு வந்த பஸ்ல ஏறித்தான் ஆகணும்.. அப்போதான் மீதிப்பயணம் சுலபமா அமையும். அதிலேயும் உனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்னன்னா... உடனே நீங்க மும்பைக்கு குடித்தனம் போகப்போறது. இனி உன் வாழ்க்கையே அஸ்வின்தான்... அஸ்வின்மட்டும்தான். அதுக்கு இந்த முதலிரவு இன்னைக்கு நடக்கிறதுதான் நியாயம். காதல் இல்லாத காமம் பெண்ணுக்கு பெரும் கஷ்டம்தான். ஒத்துக்கறேன். ஆனா இந்த காமத்துல உன் மனசு லயிச்சாத்தான் அந்த காதலை மறக்க முடியும். ம்... போ. படிச்சப்பொண்ணா கிடைச்சிருக்கிற வாழ்க்கையை முழுமனசா அனுபவிக்க கத்துக்க...”

மனசே மனசில்லாமல் மிதுனா போவதை வேதனையோடே பார்த்து நின்றாள் ரஞ்சனி!

துவே விடிந்தபோது மிதுனாவிடம் தெரிந்த அதீத முகமலர்ச்சியைப் பார்த்து ரஞ்சனியே திகைத்துப்போனாள்.

“அண்ணி அண்ணி... அஸ்வின் ரொம்ப நல்லவர். என்னமா சிரிக்க சிரிக்க பேசுறார் தெரியுமா? சிரிக்கிறப்போ தெரியற அவரோட தெத்துப்பல் இருக்கே...ஸோ க்யூட். அப்புறம் இன்னொரு குட் நியூஸ்.. மும்பைல கூட கொஞ்சநாள்தானாம்.. அப்புறம் நியூஸிலாந்து போயிடப்போறோமாம். நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரி.. நான் அதிர்ஷ்டசாலிதான்”

முதன்முதலாக ரஞ்சனி தடுமாறினாள்..  ‘மிதுனா புத்திசாலியா? இல்லை ரொம்பவுமே சுயநலக்காரியா?’

காயம் முட்டி நின்ற முப்பதாவது மாடி பால்கனியிலிருந்தே, அஸ்வினின் ஆரஞ்சு வண்ண ஆடி கார் வருவதை பார்த்துவிட்ட மிதுனா, உற்சாகத்தோடு காபி போடப்போனாள். ஆனால் அவன் வந்தது காபி ஆறிப்போன பின்னர்தான்!

“பத்து நிமிஷம் முன்னாலேயே உங்க கார் நுழையறதைப் பார்த்தேனே.. அப்புறமும் ஏன் லேட்? “

“நம்ம ஃப்ளோர்ல தமிழருங்க இல்லைன்னு வருத்தப்பட்டியே.. நமக்கு கீழே இருபதாவது தளத்துல புதுசா வந்திருக்கிற ஒரு தமிழர் அறிமுகமானார். இண்ட்ரஸ்டிங் ஆள். ஆனா என்ன பேட் லக்னா, உனக்கு ஒரு தோழியா அவர் மனைவியை அறிமுகப்படுத்த வழியில்லை.. ஏன்னா அவர் பிரம்மச்சாரி”

”ப்ச்சு.. இந்த ஆறுமாசத்துலே.. நம்ம அறிமுகமே இன்னும் முழுசா முடியலை!“

“ஏய் நீ டபுள் மீனிங்க்ல எதுவும் பேசலையே?”

“ச்சீ போங்க, நான் போய் காபியை சூடு பண்ணிட்டு வர்றேன்”

“மிது.. அந்த ஆள் இண்ட்ரஸ்டிங் ஆசாமின்னு சொன்னேன்ல.. ஏன் தெரியுமா?. புது வேலையில ஜாய்ன் பண்றதுக்காக  சென்னையிலேர்ந்து மும்பைக்கு பைக்லேயே வந்திருக்கார்னா பார்த்துக்கோயேன். பைக்தான் அவரோட தோழி காதலி மனைவி குடும்பம் எல்லாமாம்..”

மிதுனா அதிர்ந்தாள் பலமாக.

“உனக்கே அதிருதுல்லே.. அப்புறம் எனக்கு எப்படி இருக்கும்? எனக்கும் பைக்குன்னா உயிர்தானே! உன்னை உட்கார வச்சு பைக்குல மும்பையை சுத்தணும்னு எவ்வளவு கனவு கண்டிருந்தேன், ஆனா தென்காசி பொண்ணு நீ பயந்துகிட்டு ஏறாதது மட்டுமில்லே.. வந்த மறுவாரமே அதை விக்கவும் வச்சுட்டே. அதான் தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் பார்த்ததும் நானே போய் பேசினேன். லோகல் பைக்னாலும் நிறைய எக்ஸ்ட்ரா பொருத்தப்பட்ட சூப்பர் பைக்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.