(Reading time: 11 - 21 minutes)

ருவேளை..ஒருவேளை அ...வ....ன். அவனோ?’ - மிதுனா மிடறு விழுங்கினாள்.

“எந்த ஊராம்?“

”தமிழ் பேசுன சந்தோஷத்துல ஊரைக் கேட்கலை.. ஆனா பேரைக் கேட்டேன்..”

மிதுனா மூச்சடக்கி நின்றாள்.

“பேர் பிரதீப்பாம்”

காபிகோப்பை ’ணங்’கென விழுந்து சிதறியது.

’கடைசியில் இங்கேயே வந்துவிட்டானா?’

னி வாழ்வு சுமுகமாயிருக்கப் போவதில்லை, முன்னாள் காதலி தேடி மும்பைவரை வந்த  பிரதீப் அடுத்து என்னென்ன செய்வான் என்பதை எத்தனை சீரியல்களில் பார்த்திருக்கிறாள்! பைக், பீர் என அஸ்வினுடன் நெருக்கம் வளர்த்து, மிதுனாவுடனான காதலையும்.. பைக்கில் குற்றாலம் சுற்றியதையும்  வீடியோ சாட்சியுடன் சொல்லி அவளது எதிர்காலத்தை நாசமாக்குவானோ? அல்லது... காதல்விவகாரத்தை கணவனிடம் போட்டுக்கொடுக்காமல் இருக்க  ’அப்பப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என நிகழ்காலத்தை நரகமாக்குவானோ? இரண்டில் எதுவானாலும் அவன் பக்கம்தானே நியாயம் என்று கடந்தகாலம் சொல்லும்!

‘தானுண்டு தன் பைக் உண்டு’ என திரிந்தவனை கண்ணாலே சுழற்றி சுழற்றி இழுத்து காதலிக்க வைத்தவள் மிதுனாதானே! கல்யாணத்துக்கும் அவள்தானே அவசரப்படுத்தினாள்.

‘கொஞ்சம் பொறுடி செல்லம். என் திறமைக்கு சூப்பர் ஜாப் கிடைக்கும். முதல்மாசம் சம்பளம் வாங்கின கையோட உங்கப்பாவைப் பார்த்து கவுரவமா பொண்ணு கேட்கிறேன்..”

“எங்கப்பாவைப் பத்தி உனக்கு தெரியாது. எல்லாம் அவர் ஆசைப்படிதான் நடக்கணும்கிற பிடிவாதக்காரர். ஆனாலும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டு கொஞ்சநாள் கழிச்சு வந்து காலிலே விழுந்தா ஏத்துக்குவார். ஏன்னா அவ்வளவு பாசக்கார அப்பா”

அழுது அரற்றி வற்புறுத்தி பிரதீப்போடு பைக்கில் இரவோடு இரவாக சென்னை நோக்கி பறக்கையில் சிவகாசி தாண்டும் முன்னரே மடக்கப்பட்டபோதுதான்... அப்பாவின் பவர்  பயங்கரமாகத் தெரிய வந்தது. மகள் என்றும் பாராமல் மிதுனாவையே நையப் புடைத்த கையோடு மொபைலில் இரண்டு மூன்று வரன்களையும் காண்பித்தார்.

“புத்திசாலித்தனமா இதுல ஒருத்தனை செலக்ட் பண்ணா, ஓடிப்போன விஷயம் ஊருக்கே தெரியாம உன் கல்யாணத்தை முடிச்சுருவேன்.  அதில்லாம இந்த முட்டாளைப்போல இத்தனை உதை வாங்கியும் ’வாழ்வோ சாவோ அது உங்க பொண்ணோடதான்’ங்கிறாப்பிலே வசனம் பேசினா உன்னையே முடிச்சிருவேன்”

அதற்குமேல் அடிவாங்க திராணியில்லாமல்.. விரக்தியாக போட்டோக்கள் பார்த்த மிதுனாவின் விழிகள் தயக்கமாக ஒரு போட்டோவில் நிலைத்ததும் அப்பா சந்தோஷமானார்.

“புத்திசாலிப்பொண்ணு இந்த மும்பை வரன் சூப்பர் சாய்ஸ். கல்யாணம் முடியறவரைக்கும் உன் லவ்வரை ஸ்டேஷனிலேயே வச்சிருக்க ஏற்பாடு பண்றேன்”

சொல்லிக்கொடுத்தபடியே ‘நான் இந்த பிரதீப்பை காதலிக்க மறுத்ததால கடத்திட்டு போகப் பார்த்தான் சார்’னு இன்ஸ்பெக்டரிடம் சொன்னபோது பிரதீப்பின் ஹீனமான பார்வை பரிதாபமாகவே தோன்றியது. இப்போதுதான் தெரிகிறது... உள்ளபடியே அது பழிவாங்கலுக்கான பதுங்கல் பார்வையோ!

ரம் துடைத்து கண் விரித்தாள். ‘கூடாது.. தோற்கக் கூடாது. வாழ்க்கை என்பதே வெற்றிக்கான யுத்தம்தான். அவன் என்னை ஜெயிக்கும் முன்பாக நான் அவனை ஜெயித்தாக வேண்டும். நியாயம் அநியாயம் ஈவு இரக்கம் எதுவும் பார்க்க தேவையில்லை’.

பார்க்கத் தொடங்கினாள், காலை மாலை என இடைவிடாமல்.. அத்தனை தமிழ்சேனல் மெகா தொடர்களையும்! அவை கற்றுக்கொடுக்காத குற்ற வழிமுறைகளா? ஒருகாலத்தில் அழுவுணி ஆட்டம் என கலாய்க்கப்பட்ட குடும்ப சீரியல்கள் தற்போது... துரோகம், கடத்தல், கள்ளக்காதல், தற்கொலை, கொலை என க்ரைம் அவதாரம் எடுத்திருக்கவே மிதுனா மூளையில் பலப்பல உக்கிரத் திட்டங்கள் குடியேறின!

ற்சாகமாக வந்தான் அஸ்வின். “ஹே மிது.. நான் பலதடவை கூப்பிட்டும் தயங்கின பிரதீப் நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர ஒத்துக்கிட்டான். சனிக்கிழமை உன் சமையல் வித்தையைக் காட்டி அசத்திரு”

’நேரம் நெருங்கிவிட்டது’- எனப் புரிந்ததும் அவள் கண்கள் சமையலறை நோக்கி நகர்ந்த்து. அங்குதானே கரண்டிகளுடன் இருக்கிறது புதிதாக வாங்கி வைத்திருக்கும் கட்டிங் ப்ளேயர்!

’இரவோடு இரவாக அதைச் செய்து முடித்துவிடவேண்டும்’

ரே பற்றி எரிகிற பதைபதைப்புடன் ஓடி வந்தான் அஸ்வின்.

“மிதுனா மிதுனா.. ஒரு பேட் நியூஸ். பிரேக் பிடிக்காமப்போய் பிரதீப்போட பைக் ஆக்சிடெண்டாகி உயிருக்கு போராடிட்டு இருக்கானாம். நிறைய இரத்த சேதமாம். வா வா உடனே போகணும். ஆமா உன் ப்ளட் குரூப் என்ன?”

‘ஏ புருஷா அவன் உயிரைக் குடிக்கத் துடிப்பவளிடமே ரத்தம் கேட்குறியா?...ச்சை ப்ரேக் வயரை வெட்டிவிட்டும் அவன் இன்னும் சாகலையா? ‘

மறுபடியும் அத்தனை தமிழ் மெகா தொடர்களையும் அவசரம் அவசரமாக மனதுள் ரீவைண்ட் செய்தவாறே அஸ்வினுடன் கிளம்பிய மிதுனா, கைப்பையை எடுத்துப்போக மறக்கவில்லை! அதில்தானே கூர்மையான புத்தம் புதிய கத்தி உள்ளது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.