(Reading time: 7 - 13 minutes)

2017 போட்டி சிறுகதை 125 - மனைவி ஒரு மந்திரி - ஜான்சி

This is entry #125 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - ஜான்சி

Old couple

ன்று காயத்ரி அம்மாள் வீட்டில் வெகு பரபரப்பாக விருந்து சமையல் ரெடியாகிக் கொண்டிருந்தது. சொந்த பந்தம் யாரும் வருகின்றதாகவோ, வீட்டில் எதுவும் திருமண நாள், பிறந்த நாள் என்பது போல் இருப்பதாகவோ தெரியவில்லை. பின்னர் எதற்கு தான் இந்த வித விதமான சமையல் கோலாகலம். வேறொன்றுமில்லை தன்னுடைய இரண்டு மகன்களையும் அவர் தனிக்குடித்தனம் வைக்கின்ற வைபவம் தான் அன்றைக்கு நிகழவிருந்தது.

அனைவரும் ஒரே வீட்டில் சமைத்து சாப்பிட்டு, பண வரவு செலவுகளை பரிமாறிக்கொண்ட நாள் மாறி , ஒரு சமையலறை மூன்று சமையலறைகளாக உருமாற்றம் கொள்ளப் போகும் நாள்தான் அது. பரந்தாமன் தன் மனைவியின் முகத்தில் ஏதாகிலும் வருத்தம் தெரிகின்றதா என்று கவனித்துப் பார்த்தார். அந்த முகமோ வழக்கத்தை விட மிக பொலிவுற்று மகிழ்ச்சியாக காணப்பட்டது.

தன் மனைவி முகம் வாடி அவர் பார்த்ததே இல்லை எனலாம்.என்ன துன்பமாக இருந்தாலும் அவருக்கு மனைவியின் முகத்தை பார்த்தவுடன் சூரியன் கண்ட பனி போல அத்துன்பம் மறைந்து விடும். இத்தனை வருடங்களில் தன்னுடைய தனியார் அலுவலக சம்பளத்தை மனைவியின் கைகளில் கொடுப்பதோடு அவருடைய கடமை முடிந்து விடும்.

காயத்ரியோ தன் கையில் கணவன் கொடுத்த சம்பளத்தை வைத்து குழந்தைகளை படிப்பிக்க, குடும்ப செலவை கவனிக்க என்றிருந்தாலும் அத்தோடு நில்லாமல் ஒன்றை பத்தாக்கும் மன வலிமை படைத்தவர். அந்த சிறிய வருமானத்திலேயே பிற்காலத்தில் தன்னுடைய மகன்களுக்கு தேவைப் படுமே என்று சிக்கனமாக செலவழித்து தங்கள் வீட்டின் அருகாமையிலேயே இரண்டு வீடுகள் வாங்க வழி செய்தார். இப்போதும் கூட மகன்கள் அந்த வீடுகளில் தான் வசிக்கின்றனர். சமையலும் சாப்பாடும் சேர்ந்து இருந்தது. தற்பொழுது அதுவும் மாறப் போகின்றது.

என்னதான் தான் காயத்ரி குடும்பத்திற்காக எத்தனை விஷயங்களை செய்தாலும் கணவனை முன்னிறுத்தி செயல்படுவதில் அவருக்கு நிகர் அவரே. தன் மனைவி என்ன செய்தாலும் அதில் காரணம் இல்லாமல் இராது என்று நம்புகின்றவர் அவர். அதனால் தான் பிள்ளைகளை தனிக்குடித்தனம் வைக்க போவதாக சொன்னதும் அவர் அதற்கு மாறாக ஒன்றும் பேசவில்லை.

இரண்டாவது மகனுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவேயில்லை. அண்ணன் கல்யானம் முடிஞ்சு 10 வருஷமா சேர்ந்து தானே இருக்கிறான்? நீங்க எனக்கு கல்யானம் ஆகி 2 வருஷத்திலயே எதுக்கு தனியா வைக்கிறீங்க? என்று முரண்டினான். அவனுக்கு தாய் தனதையை தனியே விடுவதில் சம்மதம் இல்லை.

மருமக்களும் நல்லவர்கள் தாம், மூத்த மகனுக்கு கிடைத்த பெண் மிகவும் பொறுப்பானவள், 10 வருடங்கள் மாமியாரோடு இணைந்து சமாதானமாக குடும்பம் நடத்துவது ஒன்றும் சிறிய விஷயம் இல்லையே?. இரண்டாவது மருமகளும் அனாவசியமாக பேச்சுக்கள் பேசி அறியாதவள். ஆனால், என்ன தன் வீட்டில் கடைக் குட்டி அதனால் கொஞ்சம் பொறுப்புணர்வு குறைச்சல். ஆனால், வீட்டின் மூன்று பெண்களும் ஒரு குறையுமில்லாமல் குடும்பத்தை இணைந்து நடத்தி வந்தனர்.

வரமாய் கிடைத்த பேர பிள்ளைகளும் இருக்க அவர்களுக்கு வேறு குறைகள் தான் ஏது?

ன்றைய சமையல் முடிவு பெறும் நேரம் அங்கு வந்து சேர்ந்தது பக்கத்து வீட்டு கிழவி. அதன் பெயர் சந்தோஷம், ஆனால் அதற்கு யாரும் சந்தோஷமாக இருந்தாலும் பிடிக்காது, தானும் சந்தோஷமாக இராது.

காயத்ரி வீட்டில் மூத்த மகனுக்கு திருமணம் நடந்த நாள் முதலாய் மாமியார் மருமகள் சண்டை பார்க்கலாமென்று ஆவலாய் அலைகின்றது. ஆனால், அந்தோ பரிதாபம் அப்படி ஒரு நிகழ்வே இது வரை அந்த குடும்பத்தில் நிகழவில்லை.

இன்று தனிக்குடித்தனம் வைக்கும் நாள், வீட்டு பாத்திரங்களும் அல்லவா பங்கிடப் படும். தன்னுடைய ஊரில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடை பெறும் போது மிகப் பெரிய சண்டைகள் நிகழ்வதைப் பார்த்து இருக்கின்றது அந்த வயதான கட்டை. அதையே இன்று இந்த வீட்டிலும் பார்க்க ஆவல் கொண்டது.

அனைவரும் சாப்பாடு மகிழ்வுடன் சாப்பிட்டு முடித்தனர். சந்தோஷம் கிழவிக்கும் வஞ்சனை இல்லாமல் பரிமாறினர். சாப்பிட்டு முடிந்ததும் மருமக்கள் அங்கிருக்கும் பாத்திரங்களில் தனக்கு தேவையானவைகளை எடுத்து தங்களுடைய வீட்டிற்க்கு கொண்டுச் செல்ல துவங்கினர்.

பெரும்பாலும் நல்ல பாத்திரங்களை சிறியவளே எடுத்துக் கொண்டிருந்தாள். பெரியவள் அதைக் கண்டுக் கொள்ளவில்லை. அவள் மீதம் இருந்தவற்றினின்று தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டாள். தன்னை விட பெரியவரான மாமியாரிடமிருந்து கற்றுக் கொண்டிருந்த விட்டுக் கொடுக்கும் தனமை அன்று வெளிப்பட்டதோ.

ஒரு சத்தமோ, வாக்குவாதமோ பிரச்சனையோ இல்லாமல் அன்றைய நிகழ்ச்சி நிரல் நடைப் பெற்று முடிந்தது. சந்தோஷம் கிழவி சந்தோஷப் பட முடியாமல் ஏமாந்து திரும்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.