(Reading time: 21 - 42 minutes)

2017 போட்டி சிறுகதை 126 - பி.ஏ. பாஸ்! - அபிஷேக்

This is entry #126 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்

எழுத்தாளர் - அபிஷேக்

கலவித வாசகர்களுக்கு வணக்கம்.

இன்று, நான் எழுதும் எனது வாழ்வில் நடந்த இந்தக் கதையை உண்மை என்று நீங்கள் நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள்.

நான் ஒன்றும் பெரிய நாடக நடிகனோ, தேஜஸ் மிகுந்த சினிமா கலைஞனோ அல்ல. எனக்கென்று ஒரு லட்சணம் இருந்தது உண்மை தான் என்றாலும், அதை வைத்துக் கொண்டு முன்னேற இந்த சினிமா துறையின் நடிப்புக்கலை மன்னர்கள் இடங்கொடுக்கவில்லை. எனவே நான் கதை-வசனம் எழுத உட்கார்ந்து விட்டேன்.

ஆம்! நான் ஒரு எழுத்துப் பிரஜை. என்னுடைய அடையாளம் என்னுடைய மொழி.

தமிழைத் தொடுவதற்கு முன்னாலே எனக்கு சோற்றுக்கே வக்கில்லை. எழுத ஆரம்பித்த பிற்பாடு சோறு திங்க நேரமில்லை.

அப்படியொரு நிலையிலிருக்கக்கூடிய எனக்கு சம்பத்தில் (செல்வத்தில்) குறைவில்லை என்று நான் சொல்லலாம். நீங்களும் அப்படித்தான் என்று நினைப்பீர்கள். அப்படியெல்லாம் இல்லை என்பதை நான் இவ்விடத்தில் அறிவிக்கவும் தெரிவிக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் என்னுடையது. அதிலும் ஒரு அளவு என்பதை நிர்ணயித்து ஜீவனோபாயம் நடத்தி வந்தவன் நான். என் பெயர் – கலாபவன் கிருஷ்ணன்.

நான் ஒரு முறை தேசாந்திரம் செல்லலாம் என்று இருந்தேன். அதற்கு என்னுடைய உள்ளம் ஏங்கியது என்று சொல்வதைவிட உள்ளம் பிடுங்கியது என்று தான் நான் சொல்ல வேண்டும். அப்படியொரு பயணம், சிதைந்து கிடந்த என்னுடைய உள்ளத்தை சீரமைக்க உதவும் என்று நான் நினைத்ததன் விளைவு.

ஒரு மனிதன் என்பவன், தன்னுடைய வாழ்வில் ஐம்பது வருடங்கள் அனுபவிக்க வேண்டியதை நான் இந்த பிரயாத்திலேயே அறிந்து கொண்டேன். எனவே, மீண்டும் அதைப் புதுப்பிக்கவும் மேலும் அனுபவங்களை சேமிக்கவும் இந்த தேசாந்திரம் (சுற்றுப்பயணம் என்ற தூயதமிழ் சொல்லின் மணிப்பிரவாள நடைதான் தேசாந்திரம்) உதவும் என்று நினைத்துத் தான் முடிவு செய்தேன்.

நானும் எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கிறேன், பல பிரபல மனிதர்களிடம் பேசியிருக்கிறேன், எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இங்கே நான் பதிவிடுகிறேன், இவை யாவையும் விட இந்தப் பயணம் எனக்கு மிகவும் களிப்பு தருகிறது. இதில் ஆனந்தம் இருக்கும் என்று தெரியும், ஆனால் இந்த பரமானந்தம் எனக்குப் புதிதாயும் வியப்பாயும் இருந்தது. இதை நான், ஏற்கனவே ஸ்ரீலங்காவிற்கு பயணம் செய்ததைவிட ரசித்திருந்தேன் (அங்கே ஏதோ படத்தின் மியூஸிக் டிஸ்கஷன் வைத்திருந்தார்கள்| ஏரோபிளேனில் தயாரிப்பாளர் தான் அழைத்துச் சென்றார்| நான் செலவு செய்ய வேண்டுமென்றால், அது நிச்சயம் நடக்காது) என்று தான் சொல்ல முடியும்.

நான் வடக்கோடி காஷ்மீர் முதல் தென்கோடி கன்னியாகுமரி வரை செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தேன். சிலபல நெருக்கடிகளின் காரணமாக மதராஸ் மாகாணம் (நான் பயணம் செய்த போது தமிழ்நாடு, ஹைதராபாத் தவிர்த்த ஆந்திர பகுதிகள், கர்நாடகத்தின் பல பகுதிகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் தவிர்த்த பிற கேரள பகுதிகள் மதராஸ் மாகாணம் என்றே ஒன்றியிருந்தன) முழுதும் மட்டுமே பயணிக்க முடிந்தது.

அதில், பயணத்தின் இறுதிக்கட்டமாக, நான் கன்னியாகுமரியை பார்த்து முடித்து விட்டு, ராமநாதபுரம் ஜில்லாவிற்கு வந்தேன். அங்கே, ஸ்ரீராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்து, அங்கேயிருந்த கடலில் குளித்துவிட்டு, ஈரத்துண்டோடு வெளியில் வந்தேன். அங்கேயிருந்து, மீண்டும் இறைவனை தரிசனம் செய்துவிட்டு, நான் தங்கியிருந்த ஸ்ரீமான் சுப்பையர் இல்லத்திற்கு சென்று, அன்று மதிய உணவை முடித்துக் கொண்டேன்.

பிற்பாடு, தனுஷ்கோடி சென்று அங்கே பரந்து, விரிந்து, கொஞ்சம் விட்டால் இந்த உலகத்தையே விழுங்கக்காத்திருப்பது போல் நீலப்போர்வை போர்த்திய சமுத்திரத்தைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

அந்த மகாகடலைப் பார்த்த மாத்திரத்தில்,

“மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்|

மூழுக்கடலை அவ்வான வளையம்

முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்

மாலை இளவெயிலின் மாட்சி – அன்னை பராசக்தி கண்ணெரி காட்டுகின்ற காட்சி” என்று பாரதியின் பாட்டை பாட ஆரம்பித்துவிட்டேன். என்னையும் மறந்து, எனது அபஸ்வரமான குரலிலே நான் பாட ஆரம்பித்து, பாதி முடித்த போது, ஒரு தோணி வந்து நின்றது.

ஆம், அளவில் சிறியதாயிருந்த காரணத்தால் அது தோணி தான் என்று நான் முடிவு செய்தேன். அதிலிருந்து, ஒரு கூட்டத்தினர் இறங்கி வந்தனர். அது சர்வ சாதாரணம் தான். பசுமாடு பால் கறப்பதும், ஸ்ரீலங்காவிலிருந்து தமிழ் மக்கள் இந்தியாவிற்கு வருவதும் தொடர்கதையாகி வருகிறதென்பது எனக்குத் தெரிந்திருந்தபடியால் அதை நான் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.

ஆனால், அதிலிருந்து இறங்கிய ஒரு அழகிய பெண்ணொருத்தி, என் விழிகளையும் உள்ளத்தையும் கவர்ந்து கொண்டபடியே இறங்கினாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.