(Reading time: 12 - 23 minutes)

2017 போட்டி சிறுகதை 123 -  தூரிகை - துளசி

This is entry #123 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்/ திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - துளசி

Painting

ல்லாம் கறுப்பு வெள்ளையாக இருக்கிறது. எதற்கும் சம்பந்தமில்லை. ஒவ்வொரு கண்ணியும் விலகியிருக்கிறது. குழப்பம். வெறும் குழப்பம். பனிமூட்டம். பல் இறுக்கம். யாரோ என்னை துரத்துவது போன்ற ஒரு மிதப்பு. ஒன்றும் புரியவில்லை. எங்கோ ஓர் மலையடிவாரத்தில் ஈனஸ்வரத்தில் ஒரு விசும்பல். எனது புருவங்கள் நெறிகின்றன. கருவிழிகள் இமைகளுக்குள் துடிக்கின்றன.

திடீரென விசும்பல் அலறலாக விரிய, திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். ஆம், தூங்கிக்கொண்டிருந்தேன்.

அலறல் மீண்டும் ஒலித்தது. இது பாப்பாவின் அலறல் ஆச்சே! பதறியடித்துக்கொண்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன். சமையலறையில் முடிந்தது. சிதறியிருந்த சில கண்ணாடிச் சில்லுகளும், பருப்புத்துகள்களும் நடந்தததை விளக்கின. அவள் குனிந்தவாறு, ஒரு கையால் பாப்பாவின் தோளைப்பிடித்திருந்தாள். மறு கையை அடிக்க ஏதுவாக ஓங்கியிருந்தாள். பாப்பா கண்களில் தாரைதாரையாக வழிந்துகொண்டே, கைகள் இரண்டையும் நீட்டியவாறு அவளையே அணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டவாறே “ம்மா.. ம்மா.. ” என்று விசும்பிக்கொண்டிருந்தது. நான் ஏன் வெறுமென பார்த்துக்கொண்டே நின்றிருக்கிறேன்? ஓரு வேளை தூக்கக்கலக்கமா?

“செய்யிறதெல்லாம் செஞ்சுட்டு, இப்ப என்ன கொஞ்சுறயா?” என்றவாறு ப்ளார் என்று கன்னத்தில் வைத்தாள்.

அவ்வளவுதான். எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. ஓடிச்சென்று அவளைத்தள்ளிவிட்டுவிட்டு பாப்பாவைத் தூக்கிகொண்டேன்.

“அறஞ்சன்னா தெரியுமா?” என்று பல்லைக்கடித்தவாறே கையை ஓங்கினேன்.

“மாடு மாதிரி வளந்துருக்கயோ தவர மண்டைல ஒரு எளவுமில்ல. படிச்சுருக்க இல்ல? கொஞ்சங்கூட இத யூஸ் பண்ணமாட்டியா? ” என்றவாறு தலையை தொட்டு காண்பித்தேன்.

“கொளந்தைங்கன்னா அப்டிதான் இருக்கும். அதுக்காக? இனிமே பாப்பாவத் தொட்ட..” என்றவாறு விருட்டென்று வெளியே கிளம்பிவிட்டேன்.

பாப்பா ராகத்தை நிறுத்துவாதாயில்லை.

“சரி, பாப்பா, சரி. சரி விடு அம்மாதான அடிச்சா?”

“ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்ம்…”

“சரிடா கண்ணு, வீட்டுக்கு போனதும் ரெண்டு பேரும் சேந்து அம்மாவ அடிச்சிடலாம். சரியா?”

“ம்ம்ம்.. ப்போ…” என்றவாறு கழுத்தை வெட்டியது.

“சரி, சரி. அழக்கூடாது. குட் கேர்ள் இல்ல. கண்ண தொடச்சுக்க்கோ. எங்கெ” என்றவாறு கண்ணை துடைத்துவிட்டேன். 

“ம்ம்ம்… ம்ம்ம்..”

“சரி பாப்பாக்கு சாக்லேட் வேணுமா இல்ல ஐஸ்க்ரீம் வேணுமா?”

அந்த விசும்பலுக்கிடையிலும் ஒரு நொடி நிறுத்திவிட்டு, ‘பிங்கோ’ என்றவாறு மீண்டும் தொடர்ந்தது.

நேற்று நல்ல மழை. ஊரே தெளித்துவிடப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் விடிந்திருந்தது. சைக்கிள் பெல் சத்தமும் கீரைக்காரியின் சத்தமும் துல்லியமாய் கேட்டது.

சந்தனம், குங்குமம், ஊதுவத்தி, சீர்காழியின் பக்திக்குரல் சகிதமாய் அமர்ந்திருந்தார் பெட்டிக்கடை அண்ணாச்சி.

“ம்ம்.. ம்ம்ம்…”

“வாங்க தம்பி. ஏன் பாப்பா அளுவுது”

“வேற என்ன? அவங்கம்மா அடிச்சிட்டா. அதான் தூக்கிட்டு வந்துட்டேன்”

“ஹ்ம்ம்.. இப்பெல்லாஞ் சண்டைன்னா ஆம்பளைக கொளந்தைய தூக்கிட்டு வெளிய வந்துடறீயளா.. ” என்றார் சிரித்தவாறே.

நானும் சிரித்தவாறே, “வேற என்னண்ணாச்சி பண்றது? இருந்தா சண்ட பெரிசாய்டுது. அதான் இப்டி. சரி, ஒரு கிங்ஸ் எடுங்க”

“உங்க சம்சாரம் நீங்க கேட்டா சிகரெட் தரக்கூடாதுன்னு சொல்லிருக்கே தம்பி”

“நீங்களுமா அண்ணாச்சி? பரவால்ல எடுங்க” என்றவாறு வெளியில் தொங்கிக்கொண்டிருந்த பிங்கோ ஒன்றை பறித்துக்கொடுத்தேன்.

“நம்ம கடைலதேன் வாங்குனீயனு சொல்லீராதீக தம்பி. பொரவு கறிகாய் வாங்க பக்கத்துக்கு கடைக்கு போயிருவாக”

நான் சிரித்தேன்.

சிகரெட்டை வாங்கிக்கொண்டு, கடை ஓரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டே தீக்குளித்துக்கொண்டிருந்த சரடு ஒன்றில் சிகரெட்டை முத்தமிட்டேன்.

“வரேன்ணாச்சி”

கடையைவிட்டு வெளியே வந்தேன். திரும்பி வீட்டிற்கு செல்ல மனமில்லை. அப்படியே ஆற்றுப்பாலம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நல்ல குளிர். நேற்று பெய்த மழையில் ஊறியும் காய்ந்தும், மண் திரித்திரியாக எறும்புப்புற்றுப்போல், நடப்பதற்கு இதமாக இருந்தது. மீன் விற்பவன் ஒருவன் கூவிக்கொண்டே ஒவ்வொரு வீடாக விநியோகித்துக்கொண்டிருந்தான். அவன் கால்களை சுற்றியவாறே இரண்டு பூனையும், ஒரு தெரு நாயும் அவன் கூடவே பயணித்துக்கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.