(Reading time: 12 - 23 minutes)

பாலத்தின் சுவரில் பாப்பாவை உட்காரவைத்து வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தேன். அழுகை முழுவதுமாக நின்றுவிட்டது. பாப்பா என்ன என்னவோ சைகை செய்தவாறு, ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். நான் ‘ம்’ கொட்டிக்கொண்டிருந்தேனோ தவிர எதையும் கவனிக்கவில்லை. எப்படி கவனிக்க முடியும்? நான்கு வருடத்தில் இன்றுதான் முதன்முதலாக கை ஓங்கியிருக்கிறேன்.

‘அப்டி என்ன கோவம் இவளுக்கு? பாட்டில் போனா மயிரொன்னு போச்சு. அதுக்காக இப்படியா அடிப்பா? பாரு, நாலு வெரலும் பதிஞ்சுபோச்சு’ என்றவாறு பாப்பாவின் கன்னத்தை திருப்பி விரல் சுவடுகளை தேடினேன். ஒன்றும் தெரியவில்லை.

‘சரீ, என்னதான் இருக்கட்டுமே, எதுக்கு அடிக்கணும்? அப்டி இவ என்னதான் பண்ணியிருப்பா..?’

“பாப்பு, அம்மா உன்ன எதுக்கு அடிச்சாடா?”

“ம்.. அதுவாப்பா? அது. அந்த பருப்பு பாட்டில் இருக்கில்ல?”

“ம்”

“அதுல ஒரு எறும்பு இருந்துச்சா! அத காப்பாத்தறதுக்காக, ஏறி எடுக்க போனனா, திடீர்னு இந்தம்மா என்ன புடிச்சி இளுத்துச்சு. பாட்டில் கீள வுளுந்துடுச்சு. இந்தம்மா மட்டும் என்ன இளுக்கலைன்னா நான் அத அப்டியே கேட்ச் புடுச்சுருப்பேன்”

‘ஐயையோ! எதுவும் தெரியாமல் அவசரப்பட்டுவிட்டேனே. எல்லாம் இவளால் வந்த வினை. கையை வேறு ஓங்கிவிட்டேன். கோபம் போய் குற்றவுணர்ச்சி ஆட்கொண்டது. கிட்டத்தட்ட வீட்டிற்கு ஓடினேன்.

வீட்டிற்கு சென்றதும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு அவளை தேடினேன். சமையலறையில் பாத்திரம் கழுவும் சத்தம் கேட்டது. அவளை மெதுவாக பின்னால் இருந்து அணுகினேன். அவள் தோளை தொட்டேன். சத்தம் நின்றது. அவள் இரு புஜங்களையும் பிடித்து மெதுவாக என் பக்கம் திருப்பினேன். கண்களில் தாரைதாரையாக கண்ணீர். கொஞ்ச நேரத்திற்கு முன் பாப்பாவை பார்த்தது போலவே இருந்தது. எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கண்ணைத் துடைத்துவிட்டுக்கொண்டே,

“உனக்கு சாக்லேட் வேணுமா இல்ல ஐஸ்க்ரீம் வேணுமா?”

சிரித்துக்கொண்டே கேட்டேன்.

அவ்வளவுதான். கண்களில் கண்ணீருடன் அழகாக சிரித்தாள்.

“ப்போ.. ” என்றவாறு தலையை வெட்டினாள்.

“ஹப்பா.. சிரிச்சாச்சா.. சாரிடா.. ஏதோ கோவத்துல..”

“போங்க நீங்க. உங்களுக்கு மட்டுந்தான் அவமேல அக்கறை இருக்கா? எனக்கு இல்லயா? நானே பாட்டில் அவ மேல விழுந்துருச்சோன்ற பதற்றத்துல…”

“அதான் சாரி சொல்லிட்டன்லடா”

மௌனம்.

“சரி, இனிமே உன்ன திட்டவே மாட்டேன். போதுமா?”

தலையை முழுவதும் உயர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தி, கேள்விகளையும் ஆச்சரியங்களையும் நிரப்பிக்கேட்டாள்.

“நெஜம்ம்மா?”

“இல்ல. பொய்ய்யா..”

என்றவாறே அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.

“ச்சீ! இன்னும் பல்லுகூட வெளக்கல. சிகரெட் நாத்தம் வேற. அந்த அண்ணாச்சியை பேசிக்கறேன்”

“ஏன்? பல்லு வெளக்கலேன்னா? நான் உன் புருஷன் இல்லயா?”

“ச்சீ போடா..” என்றவாறு தள்ளிவிட்டு சென்றாள்.

“ஹ்ம்ம்.. சரி.. அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு கப் காஃபி குடு பாக்கலாம்”

“ம்ம்.. மொதல்ல போய் பல்ல வெளக்குங்க.” என்று முறைத்தாள்.

“அதுக்குள்ளயா?! இன்னிக்கு சண்டே டா..” என்றவாறு சிரித்துக்கொண்டே ஹாலிற்கு வந்தேன்.

ட! இது என்ன இன்னொரு கண்டம். பாப்பா கைகளைக்கட்டிக்கொண்டு சுவரோடு சுவராக ‘உர்’ என்று நின்றுகொண்டிருந்தது. நான் அருகில் சென்று அமர்ந்தவாறு,

“என்னாச்சு? ஏன் ராஜா மூஞ்சி அழுது வடியுது?” என்றவாறு கையைப்பிடித்தேன்.

கையை வெடுக்கென்று விடுவித்துக்கொண்டு,

“ப்போ.. ” என்று வழக்கம்போல் கழுத்தை வெட்டியது.

“கன்னுக்குட்டிக்கு என்னாச்சு. ஏன் அப்பா கிட்ட வரமாட்டிற?”

“நீ எதுக்கு அவகூட பேசின?”

“எவகூட?”

“அம்மாகூட”

சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.

“நான் எங்கடா அவகூட பேசினேன்? அவதான் எங்கிட்ட வந்து வந்து, ‘பேசு பேசு’ ன்னு கெஞ்சினா. பேட் கேர்ள். நான் சொல்லிட்டனே. பாப்புக்குட்டி சொன்னாதான் நான் உங்கூட பேசுவேன்னு சொல்லீட்டேனே”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.