(Reading time: 12 - 23 minutes)

வளைப்போலவே தலையை முழுவதும் உயர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தி கேள்விகளையும் ஆச்சரியங்களையும் நிரப்பிக்கேட்டாள்.

“நெஜம்ம்மா?”

“நெஜம்ம்மா” என்ற தூக்கிசுற்றி முத்தமிட்டேன்.

“இந்தாங்க”

காப்பி வந்தது.

“பாப்புக்குட்டி இங்க வா. பூவா ச்சாப்புட்லாம்” என்றாள் கையில் கிண்ணத்துடன்.

மௌனம்.

“பாப்பூ…….”

“நீ போ. நான் உங்கூட ‘டூ’. நான் அப்பாகிட்டதான் சாப்டுவேன்”

எனக்கு பெருமிதத்தில் தலை கொள்ளவில்லை. அவள் என்னைத்திரும்பிப் பார்த்தாள். நான் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி ஏளனமாக சிரித்தேன். கிண்ணத்தை என் கையில் திணித்துவிட்டு,

“நடக்கட்டும் நடக்கட்டும்” என்ற முணுமுணுத்துக்கொண்டே சென்றாள்.

காலை மட்டுமில்லை, மதியமும் என்னிடம்தான் சாப்பிட்டது. என்னிடம்தான் பேசியது. என்னிடம்தான் விளையாடியது. அவளைத் துளிகூட மதிக்கவில்லை. எனக்கு கால் தரையில் இல்லை. வேண்டுமென்றே அவளை சீண்டிக்கொண்டே இருந்தேன். அவளும் ஒவ்வொரு முறையும், முறைத்துக்கொண்டே இருந்தாள்.

“பாப்பூ, அம்மாகூட அம்மா பாட்டி வீட்டுக்கு போறியா?”

“மாட்டேன். அவகூட எங்கயும் போக மாட்டேன்.”

“பாப்பூ, அப்பா ஊருக்கு போயிட்டு வரட்டா? நீ அம்மகூட சமத்தா இருந்துப்பியா.”

“எதுக்கு? என்ன விட்டு போகதப்பா. நானும் வரேன். அம்மாவ வேணும்னா வுட்டுட்டு போலாம்” என்றவாறு அழத்தொடங்கியது.

“பாப்பூ, உனக்கு புது ட்ரெஸ் புது பொம்ம எல்லாம் யார் வாங்கித்தருவா?”

“அப்பாதான். அம்மா சரியான கஞ்சப்பிசினாறி. சுத்தற முட்டாய் கூட வாங்கித்தரமாட்டா”

அவள் எல்லாவற்றுக்கும் முறைத்துவிட்டு சென்றாளே தவிர ஒரு பேச்சு இல்லை. எப்படியாவது இவள் வாயைக்கிளற வேண்டிமென்று நானும் கங்கனம் கட்டிக்கொண்டு, வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தேன்.

ப்படி இப்படியாக அந்தி மங்கிவிட்டது. நல்ல மழைவேறு. நானும் பாப்பாவும் சிட் அவுட்டில் அமர்ந்து பொம்மைகளையும், சொப்பு சாமான்களையும் வைத்துக்கொண்டு, விளையாடிக்கொண்டே மழையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மழையின் சத்தம் காதுகளை ஆக்கிரமித்திருந்தது. இடையிடையில் இடி வேறு. கொம்பு முளைத்த குடைகள் சில, தெருவில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தன. மயிற்க்கூச்செறிந்தவாறு ஒரு காகம் அநாதையாய் மின்கம்பியில் அம்ர்ந்திருந்தது.

அவள் ஒரு கையில் ‘டீ’யுடனும், மறு கையில் பாலுடனும் வந்தாள். வழக்கத்திற்கு மாறாய், பாப்பாவை அழைக்காமல் இரண்டையும் என்னிடமே தந்தாள். வேறென்ன பயம்தான். நான் விடுவேனா? அவள் திரும்பும் முன்,

“பாப்பூ, உனக்கு அப்பா புடிக்குமா? இல்ல அம்மா புடிக்குமா?”

“எனக்கு அப்பாதான் புடிக்கும். அம்மாவ புடிக்கவே புடிக்காது. அடிப்பா. பேட் கேர்ள்”

அவள் என்னைத்திரும்பி முறைத்தாள். நான் வழக்கம்போல் ஒரு புருவத்தை உயர்த்தியவாறு சிரித்தேன்.

ஒரு கணம். ஒரே கணம்தான். சட்டென்று அவள் கண்களில் நீர் தேங்கியது. விருட்டென்று உள்ளே சென்றுவிட்டாள்.

எனக்கு சங்கடமாகிவிட்டது. ‘சே! என்ன இவள். இதற்கெல்லாமா அழுவது? விளையாட்டுக்குதானே செய்தேன்’.

வள் என்னிடம் பேசவில்லை. நானும்தான். இப்பொழுது சமாதானம் செய்ய முயற்ச்சித்தால் முரண்டுபிடிப்பாள். போகட்டும். பார்த்துக்கொள்ளலாம்.

இரவு அமைதியாக சாப்பிட்டு முடித்தோம். முடித்ததும் அவள் உள்ளே சென்று படுத்துவிட்டாள். கோபம். எனக்கு சிரிப்புதான் வந்தது. எங்கே சென்றுவிடுவாள், பார்த்துக்கொள்ளலாம்.

நான் சோஃபாவில் சாய்ந்தாவாரே புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். பாப்பாவும் என் மார்மேலேயே சாய்ந்தவாறு தூங்கிவிட்டது.

சிறிது நேரந்தான். பாப்பாவைத்தூக்கிகொண்டு படுக்கையறைக்குள் வந்தேன். அவள் முதுகைக்காட்டியவாறு கட்டிலின் ஓரம் ஒருக்களித்து படுத்திருந்தாள். அருகில் சென்று பார்த்தேன்.கன்னங்களில் கண்ணீர் ரேகை. தூங்கிவிட்டாள். நான் பாப்பாவை இருவருக்குமிடையில் கிடத்திவிட்டு விளக்கை அணைத்தேன்.

படுத்தவுடன் தூக்கம் பிடிக்கவில்லை. ஏதேதோ சிந்தனைகள். ‘பாவம். நானும் சற்று அதிகமாகதான் போய்விட்டேன். காலையில் முதல் வேலையாக சமாதானப்படுத்திவிடவேண்டும்’. மெதுவாக எழுந்து தூங்கிக்கொண்டிருந்த அவள் நெற்றியில் முத்தமிட்டேன். பிறகு எப்பொழுது தூங்கினேன் என்று எனக்கே தெரியாது.

டுநிசி இருக்கும். திடீரென்று பாப்பாவின் அதே அலறல்.

“ம்ம்மா.. ம்ம்மா..”

நான் திடுக்கிட்டு எழுந்தேன். பாப்பா மெத்தையில் சப்பரமிட்டு உட்கார்ந்துகொண்டு முழி பிதுங்கும் பயத்தில் விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தது. அவளும் எழுந்துவிட்டாள். நான் பாப்பாவைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கேட்டேன்,

“என்னடா கண்ணு? என்னாச்சு?”

“ம்ம்மா.. ம்ம்மா..”

“என்னாச்சு அம்மா எதும் பண்ணாளா?”

“ம்ம்மா.. ம்ம்மா..”

“அம்மா அடிச்சாளா? சொல்லு. அம்மா ஏதாச்சும் திட்னாளா? சொல்லு”

விசித்தவாரே சொன்னது,

“அம்… மா….. கிட்ட்…. ட…… போ…. கணு…. ம்ம்ம்…”

அவள் சட்டென்று குழந்தையை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள். குழந்தை அவளை இருக்கமாக கட்டிக்கொண்டது.

“பாப்புக்குட்டி. இங்க பாரு. அம்மா பாரு. தோ. அம்மா இங்கதான் இருக்கேன். உன்னவிட்டு எங்கயும் போகல. ஒன்னுமில்ல ஒன்னுமில்ல” என்றவாறு எழுந்து அப்படியே நடந்தாள்.

“ம்ம்மா.. ம்ம்மா..”

“என்னாச்சு பாப்பாக்கு? ஏன் அழற? பூச்சாண்டி வந்தானா?”

அது விசும்பியவாரே ‘ஆமாம்’ என்றவாறு தலை ஆட்டியது. 

“ஏ! பூச்சாண்டி போ. எங்க பாப்பா ரொம்ப நல்ல பொண்ணு. இனிமே அவ பாட்டில்லெல்லாம் போட்டு ஒடைக்கமாட்டா. போ இங்கிருந்து”

என்றவாறு மானசீகமாக கையை வீசி இல்லாத ஒரு பூச்சாண்டியை விரட்டிக்கொண்டிருந்தாள்.

“பாத்தியா. பூச்சாண்டி போய்ட்டான் பாத்தியா. இனி ஒன்னும் பயமில்ல. அம்மா இருக்கேன்ல. தூங்குடா செல்லம். தூங்கு” என்றபடி முதுகில் தட்டிக்கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக, விசும்பலும் ராகமிழந்து, நிசப்தத்தை அடைந்தது. பத்து நிமிடத்தில், அவள் தோளை தலையணையாக்கி தூங்கிப்போயிருந்தது குழந்தை.

அவள் மெதுவாக என் அருகில் வந்து குழந்தையை மெத்தையில் கிடத்தினாள். மெல்ல நிமிர்ந்தாள். நான் அவளைப் பார்த்தேன். அவள் மெதுவாக ஒற்றைப்புருவத்தை மட்டும் உயர்த்தி என்னை ஏளனமாக பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன்.

என்னமோ தெரியவில்லை, ஆனால் அழ வேண்டும் போல இருந்தது.

This is entry #123 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்/ திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - துளசி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.