"அவன் வராவிட்டால் என்ன நடக்கும்? உன் உத்தேசம் என்ன?" என்று பாளையக்காரன் கேட்டான்.
"முதல் ஜாமம் முடிவதற்குள் அவன் இங்கே வந்து மகாராஜா சொல்கிறபடி நடக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் நம்முடைய காரியத்தை நடத்த வேண்டியதுதான்!..."
"நம்முடைய காரியம் என்றால்..."
"கருடாசலத்தேவனின் அரண்மனை, சவுக்கண்டி களஞ்சியம், வைக்கற்போர், மாட்டுக் கொட்டகை குதிரைலாயம் எல்லாவற்றையும் அக்னி தேவனுக்கு இரையாக்க வேண்டியதுதான்!"
"அட பாவி!..."
"மகாராஜா! யார் பாவி? இருபது வயதான மருமகப் பெண்ணை யாருக்கும் கட்டிக் கொடுக்காமல் அரண்மனையில் பூட்டி வைத்திருக்கிறானே, அவன் பாவியா? நான் பாவியா? பெற்று வளர்த்த பிள்ளையைக் கொஞ்சங்கூட மனத்தில் ஈவிரக்கமில்லாமல் வீட்டைவிட்டு விரட்டியடித்தானே அந்த மனுஷன் பாவியா? நான் பாவியா?"
"அது எல்லாம் சரிதானப்பா! கருடாசலத்தேவன் மேல் இரக்கப்பட்டு நான் ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனைக்கு தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பெண் மரகதவல்லிக்கும் ஒரு வேளை ஏதாவது ஆபத்து வரலாம் அல்லவா?"
"வந்தால் வந்ததுதான்! அதற்காக நாம் என்னத்தை செய்கிறது? அந்தக் கிழவனுக்கல்லவா அதைப் பற்றிக் கவலையாயிருக்க வேண்டும்?"
"இருந்தபோதிலும் என்னுடைய யுக்தி பலித்தால் ஒரு ஆபத்தும் இல்லாமல், ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் காரியம் கைகூடிவிடும் அல்லவா?"
"அதிலே என்ன இலாபம்? மகாராஜா இரத்தம் சிந்துவதற்குப் பயப்படும்படியான காலம் இப்போது என்ன வந்துவிட்டது? போயும் போயும் மகாராஜா ஒரு கள்ளப் பயலிடம் நம்பிக்கை வைத்து ஒரு காரியத்துக்கு ஏவுகிறதென்பது எனக்குப் பிடிக்கவில்லை..."
"நல்லமுத்து! அவன் சாதாரணக் கள்ளன் இல்லை. உலகமெல்லாம் சொல்லுகிறார்களே! கள்ளனாயிருந்தாலும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். சொன்ன சொல் தவறமாட்டான்..."
"இதெல்லாம் பெண் பிள்ளைகள் கட்டிவிட்ட கதை 'காதறாக் கள்ளன்' என்ற பட்டம் அவனுக்குப் பெண் பிள்ளைகள் கொடுத்ததுதானே? அதை எஜமானரும் நம்புகிறீர்களே?"
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது புளியந்தோப்பை நெருங்கி ஒரு ஒற்றைக் குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. தோப்பில் கூடியிருந்த ஆட்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் கசு முசு வென்று பேசத் தொடங்கினார்கள்.
"அந்த ஆள் தான் போலிருக்கிறது" என்றான் பாளையக்காரன்.
நல்லமுத்துத்தேவன் எழுந்து நின்று கழுத்தை வளைத்துப் பார்த்துவிட்டு, "ஆமாம்; அவன் தான் போலிருக்கிறது. நீங்கள் ஆச்சு; உங்கள் காதறாக் கள்ளன் ஆச்சு; எப்படியானும் போங்கள். நான் விலகிக் கொள்ளுகிறேன்" என்று சொல்லிவிட்டு அப்பாற் போனான்.
'காதறாக் கள்ளன்' என்பவனைப் பற்றி உங்களுக்கு இப்போது சொல்லி விடுகிறேன். இந்தத் திருநெல்வேலிச் சீமையிலே பெண் பிள்ளைகள் காதிலே பெரிய தொளைகளைப் போட்டுக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று என்பதாகத் தங்கத் தோடுகளையும் முருகுகளையும் தொங்கவிட்டுக் கொள்வார்கள். இப்போது கூட வயதான பெண் பிள்ளைகளின் காதுகள் அப்படித் தொங்குவதை நீங்கள் பார்க்கலாம். அறுபது வருஷத்துக்கு முன்னால் இது ரொம்பவும் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையின் இரண்டு காதிலும் சேர்த்து கால்வீசை தங்கத்துக்குக் குறையாமல் இருக்கும். அந்த நாளில் இங்கேயெல்லாம் கள்ளர் பயம் அதிகமுண்டு. அதோ தெரிகிறதே, அந்த மாதிரி பொத்தைகள் சாலையில் இருந்தால், கட்டாயம் அங்கே கள்ளர்கள் ஒளிந்திருப்பார்கள். கால் நடையாகவோ, ஒரு வண்டி, இரண்டு வண்டியிலோ யாராவது பெண்பிள்ளைகள் போனால் வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் போக வேண்டும். காதிலே தொங்கும் தங்கத்துக்காக காதை அறுத்துக் கொண்டே போய்விடுவார்கள். இதனால் அந்த நாளில் காது அறுந்த மாதர் பலரை இந்தத் திருநெல்வெலிச் சீமையெங்கும் காணும்படியிருந்தது.
இப்படியிருக்கும் நிலைமையில் ஒரு அதிசயமான பக்காத் திருடன் கிளம்பினான். அவன் மற்றத் திருடர்களைப்போல் கூட்டம் சேர்த்துக் கொண்டு வருவதில்லை. தனி ஆளாகக் குதிரையில் ஏறிக் கொண்டு வருவான். முகத்தில் கீழ்ப் பாதியை, வாய் வரையில், கறுப்புத் துணியைக் கட்டி மறைத்திருப்பான். கையிலே கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பான். சாலையிலே ஒற்றைக் குதிரைச் சத்தம் கேட்டாலே பிரயாணிகள் நின்றுவிடுவார்கள்.