பிறகு, உன்னுடைய சாமர்த்தியத்தினால் அரண்மனைக்குள் எப்படியாவது புகுந்துவிட வேண்டும். அங்கே கருடாசலத்தேவரின் மருமகள் மரகதவல்லி இருப்பாள். அவளைக் கருடாசலத்தேவர் ஐந்து வருஷமாகச் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார். அவளை விடுதலை செய்து கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்துவிடவேண்டும். கள்ளா, என்ன சொல்கிறாய்? உன்னால் இது முடியுமா?"
கள்ளன் சற்று மௌனமாயிருந்தான். பிறகு "எதற்காக மரகதவல்லியைக் கொண்டுவரச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பெண் விஷயத்தில் உங்களுடைய நோக்கம் என்ன?" என்று கேட்டான்.
"நோக்கம் என்னவாயிருக்கும்? நீதான் ஊகித்துக் கொள்ளேன். மூன்று வருஷத்துக்கு முன்னால் மரகதவல்லியை எனக்குக் கட்டிக் கொடுக்கும்படி கருடாசலத் தேவரைக் கேட்டேன். அவர் கண்டிப்பாக 'முடியவே முடியாது' என்று சொல்லிவிட்டார். அதற்குக் காரணம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் நான் ஒன்றில் மனதைச் செலுத்திவிட்டால், அதை இலேசில் விட்டு விடுவேனா? பலாத்காரமாக அவருடைய அரண்மனையில் புகுந்து மரகதவல்லியைக் கைப்பற்றிக் கொண்டுவந்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். அதற்கு இன்றைக்குத்தான் நாள் குறிப்பிட்டிருந்தேன்..."
"பின்னே, என்னை எதற்காகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? இத்தனை ஆட்களோடு நீங்கள் போய்ச் செய்ய முடியாத ஒரு காரியத்தை..."
"செய்யமுடியாத காரியம் என்று யார் சொன்னது? நான் படையெடுப்புக்கு ஆயத்தம் செய்வதைக் கருடாசலத்தேவர் அறிந்து கொண்டு ஆள் மேல் ஆள் விட்டார். கடைசியாக, இன்றைக்கு இந்தப் புளியந்தோப்பில் ராஜி பேச வருவதாகச் சொல்லி அனுப்பினார். நானும் சம்மதித்தேன். அவர் என்ன ராஜி பேசப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மனுஷர் மூன்று வருஷமாக என்னைக் காக்கவைத்து இழுத்தடித்ததற்குப் பழி வாங்க வேண்டாமா? அவரும் நானும் இங்கே ராஜிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது, நீ அந்தப் பெண்ணைக் கைப்பற்றி இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்தால் அவருக்கே நல்ல புத்தி புகட்டினதாயிருக்குமல்லவா? வீணில் இரத்தச் சேதம் ஏற்படாமல் தடுத்தபடியாகவும் இருக்கும்."
"அப்படி இரத்தச்சேதம் ஏற்பட்டாலும் அது இந்த கள்ளனுடைய இரத்தமாயிருக்கட்டும் என்று உங்கள் உத்தேசமாக்கும்?"
"அப்படியானால் உனக்கு இஷ்டமில்லையா? பயப்படாதே! மனதில் உள்ளதைச் சொல்லிவிடு."
"நீங்கள் சொல்லுகிறபடி செய்து முடித்தால், எனக்கு என்ன லாபம்?"
"இன்று இராத்திரி மரகதவல்லியை இங்கே கொண்டு வந்து என்னிடம் ஒப்புவித்து விட்டாயானால் அப்புறம் என்னுடைய ஆட்கள் உன்னைத் தேட மாட்டார்கள். நானும் உன்னுடைய வழிக்கே வரமாட்டேன்..."
"நீங்கள் சொல்லுகிற காரியத்தை நான் செய்யாவிட்டால்?..."
"இன்றைக்கு இங்கிருந்து நீ பத்திரமாய்ப் போய்விடலாம். நாளை முதல் நீ என் விரோதி. என் ஆட்கள் உன்னைத் தேடுவார்கள். நீ எந்த மலைக்குகையிலோ அல்லது மேக மண்டலத்திலோ போய் ஒளிந்து கொண்டாலும் உன்னைப் பிடித்துப் போலீசாரிடம் கொடுத்து விட்டுத்தான் நான் மறுகாரியம் பார்ப்பேன். நல்லது, இப்போது என்ன சொல்கிறாய்?"
கள்ளன் சற்று யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு, "ஆகட்டும், போய்ப் பார்க்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் காரியத்தில் வெற்றி பெறுவேனோ என்னமோ?" என்றான்.
"நீ வெற்றி பெறாவிட்டால் நான் இருக்கிறேன். என் ஆட்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிக் கவலையில்லை" என்றான் தில்லைமுத்துத்தேவன்.
காதறாக் கள்ளன் குதிரைமேல் தாவி ஏறி விரைவாகச் சென்றான்.
இந்தச் சமயத்தில் கோழிகூவாப் புத்தூர் கருடாசலத்தேவரைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். கருடாசலத்தேவர் ஒரு காலத்தில் தில்லைமுத்துத்தேவரைப் போலவே செல்வாக்கு வாய்ந்தவராயிருந்தார். ஆனால் வயது காரணமாக அவர் உடம்பு தளர்ந்து போயிருந்தது. அதைக் காட்டிலும் அவருடைய வாழ்க்கையில் சில துயர சம்பவங்கள் ஏற்பட்டு அவர் மனம் இடிந்து போயிருந்தது. முக்கியமாக ஐந்து வருஷத்துக்கு முன்னால் அவருக்கும் அவருடைய ஏக புதல்வனுக்கும் சண்டை உண்டாகி பையன் வீட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. அற்ப விஷயத்தில் மன வேற்றுமை உண்டாயிற்று. தந்தை, மகன் இருவரும் பிடிவாதக்காரர்களாதலால் அந்த வேற்றுமை முற்றி விபரீதமாகி விட்டது. குடி மயக்கத்திலிருந்த கருடாசலத்தேவர் சொன்னபடி மகன் ஏதோ செய்யவில்லை என்பதற்காக நாலு பேர் இருக்கும்போது அவன் மீது செருப்பை விட்டெறிந்தார்.