(Reading time: 36 - 71 minutes)

குதிரை மேலும் நெருங்கி வந்தது. இதோ வந்து விட்டது! அதன் மேலே இரண்டு பேர் இருப்பதும் நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் நின்ற இடத்துக்கு நேரேயும் வந்தது. அதற்கு அப்பாலும் சென்றது. "நில்! நில்!" என்று கத்தினான். ஆனால் குதிரை நிற்கவில்லை. புளியந்தோப்பையும் அதையடுத்து நின்ற பொத்தையையும் தாண்டி மின்னல் மின்னும் நேரத்தில் இராமபிரானுடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய பாணத்தைப் போல குதிரை போயே போய்விட்டது!

ப்புறந்தான் தில்லைமுத்துத்தேவன் விழித்துக் கொண்டான். கள்ளன் தன்னை ஏமாற்றிப் பெண்ணை அடித்துக் கொண்டு போகிறான் என்று தெரிந்து கொண்டான். உடனே "கொண்டு வா குதிரையை!" என்று அலறினான். அவனுடைய குதிரை வந்ததும் தாவி ஏறிக் கொண்டான். "மடையர்களே! என்னோடு வாருங்கள்!" என்று கத்தினான். மற்றும் ஏழு குதிரைகளிலும் ஆட்கள் ஏறிக் கொண்டார்கள்.

முன்னால் சென்ற கள்ளனுடைய குதிரையைத் தொடர்ந்து பாளையக்காரனுடைய எட்டுக் குதிரைகளும் பாய்ந்து சென்றன. குதிரைகளுக்குப் பின்னால் காலாட்களும் தலை தெறிக்க ஓடினார்கள்.

ஜமீன்தார் கருடாசலத் தேவருக்கு இது ஒன்றும் புரியவில்லை. சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டுத் தம்முடைய ஆட்களைத் திரட்டிச் சேர்த்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

காதறாக் கள்ளனுடைய குதிரை வாயுவேக, மனோ வேகமாகப் பறந்து சென்றது. ஆயினும் அக்குதிரை ஏற்கெனவே வெகு தூரம் பிரயாணம் செய்திருந்ததல்லவா? அதோடு இரண்டு பேரைத் தன் முதுகில் சுமந்து கொண்டிருந்தது. ஆகையால் பின்னால் வந்த குதிரைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தன.

கடைசியாகக் கள்ளனுடைய குதிரை இந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. ஆறு இன்றுபோல் அன்றில்லை. வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போயிற்று. ஆறு அடி உயரமுள்ள ஆளுக்கும் நிலை கொள்ளாது. பிரவாகத்தின் வேகமோ அதிகம். திரும்பிப் போகவோ மார்க்கமில்லை. ஆற்றங்கரையில் தயங்கி நின்றால் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். வேறு வழியில்லாமல் கள்ளன் குதிரையைத் துணிந்து ஆற்றில் இறக்கினான். குதிரை அவர்கள் இரண்டு பேரையும் சுமந்து ஆற்றில் இறங்கி வெள்ளத்தின் வேகத்தைச் சமாளித்துக் கொண்டு நீந்திச் சென்றது. கள்ளனிடம் அந்த வாயில்லாப் பிராணி அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தது.

எப்படியோ தட்டுத்தடுமாறி அக்கரையை நெருங்கியது. ஆனால் துறையில் போய்ச் சேராமல் கொஞ்சம் அப்பால் சென்றுவிட்டது. அங்கே கரை செங்குத்தாயிருந்தது. குதிரை முன்னங்காலை வைத்துத் தாவி ஏற ஆனமட்டும் முயன்றது; முடியவில்லை. கள்ளன் பார்த்தான், மறுகரையிலோ பாளையக்காரனுடைய குதிரைகள் வந்துவிட்டன. பாளையக்காரன் அதட்டும் குரல் கேட்டது. சில குதிரைகள் ஆற்றில் இறங்கிவிட்டன. இந்த நிலைமையில் கள்ளன் ஒரு யோசனை செய்தான். கடவுள் அருளும் இருந்தது. மரகதவல்லியைத் தன் இரு கைகளினாலும் தூக்கிக் கரையில் விட்டெறிந்தான். அவள் கரையில் பத்திரமாய் விழுந்ததைப் பார்த்ததும் தான் குதிரை மீதிருந்து குதித்தான். இரண்டு எட்டில் நீந்திக் கரையேறினான். பிறகு, குதிரையையும் கரை சேர்ப்பதற்காகத் திரும்பிப் பார்த்தான்! ஐயோ! பாவம்! அந்தக் குதிரையின் சக்தி அத்துடன் தீர்ந்து போய்விட்டது. எஜமானனை அக்கரை சேர்ந்ததும் அது வெள்ளத்துடன் போராடும் ஊக்கத்தையும் இழந்துவிட்டது. வெள்ளம் அதை அடித்துக் கொண்டு போய்விட்டது. கள்ளனுடைய நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. ஆயினும் குதிரைக்காகத் துக்கப்பட்டுக்கொண்டு அங்கே நின்றால் தன் காதலியையும் இழக்க நேரிடும். அதற்குள்ளே மரகதவல்லியும் எழுந்து நின்று அவனருகில் வந்தாள். இருவரும் கைகோத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாகச் சென்றார்கள். ஆற்றங்கரையை அடுத்திருந்த காட்டுக்குள் புகுந்து அந்தச் சமயத்துக்குத் தப்பித்துக் கொண்டார்கள்.

பாளையக்காரனுடைய குதிரைகளில் ஒன்றாவது பாதி ஆறு கூடத் தாண்டவில்லை. நாலு குதிரைகள் ஆற்றோடு போய்விட்டன. கள்ளனைப் பிடிக்க முடியாமல் பாளையக்காரன் ஏமாந்து திரும்பினான்.

ஜமீன்தார் கருடாசலத்தேவர் தம் அரண்மனைக்குத் திரும்பிப் போனதும் அங்கே மருமகள் இல்லை என்பதை அறிந்தார். ஆனால் அவளை அழைத்துக் கொண்டு போனவன் தம்முடைய மகன் தான் என்று தாதிப் பெண்கள் மூலமாக அறிந்து திருப்தி அடைந்தார்.

அதோ, ஆற்றுக்கு அக்கரையிலே உள்ள ஊருக்கு 'பரி உயிர் காத்த நல்லூர்' என்ற பெயர் வந்த காரணம் என்னவென்று இப்போது தெரிகிறதல்லவா?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.