(Reading time: 14 - 28 minutes)

சிறுகதை - பேசா மடந்தையே ! - சிவாஜிதாசன்

pesaa Madanthaiye

து ஒரு வித்தியாசமான காதல் கதை. நிஜமாவே வித்தியாசம் தாங்க. நம்புங்க. எப்படி வித்தியாசம்னு சொல்றேன்னு கேக்குறீங்களா? எல்லாரும் யார் மேல அன்பா, பாசமா, காதலோட இருப்பாங்க? அப்பா, அம்மா, கூடப் பிறந்தவங்க, சொந்தக்காரங்க, நண்பர்கள், வீட்டில வளர்க்கிற செல்லப்பிராணிகள் இப்படித்தானே? ஆனால், நம்ம கதாநாயகன் யாரை காதலிக்கிறான்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்...

பெரிய சர்க்கஸ் கூடாரம்; அதில் ஏராளமான மக்கள்; பெரும்பாலும் குழந்தைகளே நிரம்பியிருந்தனர் அவ்விடத்தில். மகிழ்ச்சிக் குரல்களும் ஆரவாரங்களும் விண்ணை முட்டின. ஒற்றைச் சக்கர சைக்கிளில் சவாரி, நெருப்பு வளையத்திற்குள் குதிப்பது, அந்தரத்தில் ஊஞ்சல் என ஏராளமான சாகசங்கள் நடந்தேறிக்கொண்டிருந்தன. ஒருவர், மூன்று பந்துகளை வைத்து செப்படி வித்தை புரிந்து குதூகலப்படுத்திக்கொண்டிருந்தார்.

ராம், பாத்ரூமில் விடாமல் இருமிக்கொண்டிருப்பது வெளியில் மெதுவே கேட்டது. இருமிய ராமின் வாயிலிருந்து ரத்தம் வழிந்து வாஷ் பேசினில் விழுந்தது. மூச்சு வாங்கியபடியே ரத்தத்தைப் பார்த்தான். அவனது கண்கள் கலங்கிய நிலையில் இருந்தன. பாத்ரூம் கதவைத் தட்டும் ஒலி அவன் காதில் விழுந்தது.

"ராம் ! உன் ஷோ-க்கு நேரமாச்சு. சீக்கிரம் வா!" என்று அவனுடைய நண்பன் வெளியிலிருந்து கத்தினான்.

இதழின் ஓரத்திலிருந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, "ரெண்டு நிமிஷத்தில வரேன்" என்றான் ராம்.

ராம் ஒரு ரத்தப் புற்றுநோயாளி. வாழ்வின் விழும்பில் இருக்கிறான் அவன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் சம்பவித்துவிடும். அதை அவனும் நன்கு அறிவான். இருப்பினும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுக்கு, சொந்த பந்தம் என்று யாராவது இருந்தால் தானே அவர்களை விட்டுப் பிரியவேண்டுமே என்கிற கவலை இருக்கும். அந்த வகையில் அவன் அதிர்ஷ்டசாலி. இத்துணை கஷ்டங்கள் அவனை வாட்டிய போதிலும், அவனது வேலையை அவன் விரும்பிச் செய்தான். என்ன வேலை என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்...

ஆடை மாற்றும் அறைக்குச் சென்று தன்னுடைய ஜோக்கர் ஆடைக்கு மாறினான், ராம். வாய் பிளந்து சிரித்துக்கொண்டிருக்கும் முகமூடியால் தன் நிஜ முகத்தை மறைத்து அங்கிருந்து வெளியேறி ஷோ நடக்கும் இடத்திற்குச் சென்றான்.

மேடையில் அவனைக் கண்டதும் குழந்தைகள் ஆரவாரக் கூச்சலை வெளியிட்டார்கள். அக்கூச்சல் அடங்க நெடுநேரமானது. அவன் வேடிக்கை காட்டத் துவங்கினான். சைக்கிளை பல விதமாக ஓட்டினான். சிறு குழந்தை போல அங்கும் இங்கும் ஓடினான். திடீரென்று, மேலே அங்கும் இங்கும் தாவி எல்லோரையும் குஷிப்படுத்தினான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று வள்ளுவர் கூறியதைச் சரியாகப் பின்பற்றினான் ராம். அவன் சிரித்து நடனமாடி செய்த சேஷ்டையில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

ஷோ முடிந்ததும், அன்று அவன் செய்த வேலைக்கான கூலியைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ராம். வரும் வழியில் சர்க்கஸில் வேலை செய்யும் நண்பனைச் சந்தித்தான்.

"எதுக்கு பாத்ரூம்ல அப்படி இருமின?" என்று விசாரித்தான் அவனது நண்பன். 

"உடம்பு சரியில்ல, அதான்" என்று மேலோட்டமாக விடையளித்துவிட்டு, மேலும் அவனிடம் பேச்சை வளர்க்க விரும்பாமல் விடைபெற்றான் ராம்.

சிறு வயதிலிருந்தே அனாதையாக வாழ்ந்தவன் ராம். எல்லோரும் அநாதை என்று அவன் மீது அனுதாபப்படுவது அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. இதில், நோய் இருப்பது தெரிந்தால் இன்னும் அனுதாபப்பார்வை அவன் மேல் விழுந்து அவனைச் சுட்டெரிக்கும். அதனால் தான் பிரச்சனையை யாரிடமும் கூறாமல் மௌனம் காத்து வந்தான்.

ராம், ஏடிஎம்-க்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, ஓரிடத்தை நோக்கி நடந்து சென்றான். அவனைக் கடந்து பல பேர் சென்றுகொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் அவசரத்தின் பிரதிபலிப்பு மின்னிக்கொண்டிருந்ததே தவிர ஆனந்தமில்லை. இதற்கு என் நிலைமையே பன்மடங்கு பரவாயில்லையென எண்ணி சோகப் புன்னகையை இதழில் மேயவிட்டான்.

சிறிது நேரத்தில் ஓர் அநாதை ஆஷ்ரமம் அவனை வரவேற்றது. அதனுள் சென்றான். அங்கிருக்கும் ஒரு கன்னிகாஸ்திரியிடம் தான் வைத்திருந்த பணம் முழுவதையும் அளித்தான்.

"இதைக் காலையிலேயே கொடுத்திருக்கலாமே? இந்த நேரத்தில வந்து கொடுக்குற அளவுக்கு அப்படி என்ன அவசரம்?" என்று அக்கறையுடன் விசாரித்தார் அநாதை ஆஷ்ரமத்தை நிர்வகிக்கும் அந்தக் கன்னிகாஸ்திரி.

"என் நிலைமை அப்படி இருக்கு" என்றான் ராம்.

கன்னிகாஸ்திரிக்கு அவன் கூறிய பதில் புரியவில்லை. அங்கிருந்து விடைபெற்று தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் ராம்.

அவன் வாழ்வு போலவே வீடும் இருளாக இருந்தது. பூட்டியிருந்த கதவைத் திறந்தபடி, "என்ன அபர்ணா, அறையெல்லாம் இருட்டா இருக்கு? விளக்கு போடலையா?" என்று கேட்டுக்கொண்டே விளக்கை எரியவைத்தான்.

படுக்கையில் அபர்ணா போர்வையைப் போர்த்தியபடி உறங்கிக்கொண்டிருந்தாள். "என்ன, தூங்கிட்டு இருக்கியா?" என்று கேட்டுக்கொண்டே சமையலறைக்குச் சென்றான் ராம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.