(Reading time: 14 - 28 minutes)

"லிப்ட் வேணுமா?" என்று காரில் இருந்தவர் மீண்டும் கேட்டார்.

ராமின் முகம் பயம் படர்ந்து கலவரமானது. மறுமொழி கூறாமல் நடந்து சென்றான் அவன்.

காரை மெதுவே ஒட்டியபடி, "இங்க இருந்து நாலு கிலோமீட்டர் நொண்டி நொண்டியா போவ?" என்று காரில் இருந்தவர் கேட்டார்.

"என் வீடு உங்களுக்குத் தெரியுமா?" என்று அதிர்ச்சி ரேகையை முகத்தில் படரவிட்டுக் கேட்டான் ராம்.

"உன் வீடும் தெரியும். உனக்கு கேன்சர் இருக்குன்னும் தெரியும். நீ எப்போ சாகப்போறேனும் தெரியும்" என்று அவர் கூறிக்கொண்டே போனார்.

ராம் மயக்கம் போட்டு கீழே விழாத குறை தான். ஏதும் பேசாமல் மலைத்துப்போய் காரில் இருந்தவரையே வெறித்துக்கொண்டிருந்தான்.

"கால் வலிக்கலியா? வண்டில ஏறு" என்று கூறினார் கார் ஓட்டுனர்.

ராம் மறுபதில் கூறாமல் தயங்கிய மனநிலையில் காரில் ஏறினான்.

"உங்களுக்கு என்னைப் பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு, எப்படி?"

"நான் இருட்டுல இருந்து வெளிச்சத்துல இருக்கிற உன்ன பாத்துட்டு இருக்கேன். நீ வெளிச்சத்தில இருந்து இருட்டைப் பாக்குற. இருட்டு மட்டும் தான் உனக்குத் தெரியும். அதுக்குள்ளே இருக்க என்னை உனக்கு தெரியாது" என்று விளக்கினார் கார் ஓட்டுனர்.

"சார், காமெடி பண்ணாம சொல்லுங்க. யார் நீங்க?"

"கடவுள்"

ராம் சிரிச்சான். "ஏதோ கிண்டல் பண்றிங்கனு தெரியுது. என்னைப் பத்தி விசாரிச்சி தெரிஞ்சிருப்பீங்கனு நினைக்கிறேன்"

"அப்படியா? அபர்ணா எப்படியிருக்கா?"

ராம் ஆச்சர்யத்தில அசந்து போய்ட்டான். "சாகப் போறவன் கண்ணுக்குக் கடவுள் தெரிவாருனு சொல்லுவாங்க"

"அப்போ நான் யாருன்னு சொல்லு"

ராம் விளங்காமல் விழித்தான்.

"இன்னுமா புரியல? நான் தான் கடவுள். அந்த நாலு சுவத்துக்குள்ள நீ அபர்ணா கூட பேசுறது எனக்கு எப்படித் தெரியும்னு பாக்குறியா? இன்னும் சொல்லட்டுமா?" என்று கூறி, காரை மிதமான வேகத்துடன் செலுத்திக்கொண்டே, "உன்னை எதுக்கு நான் பார்க்க வந்திருக்கேன்னு தெரியுமா? உனக்கு நிறைய கஷ்டங்கள் தான் குடுத்திருக்கேன். கடைசில சாகடிக்கப்போறேன். அதுக்கு முன்னாடி நீ சந்தோசமா இருக்கணும். அதுக்குத் தான் நான் வந்திருக்கேன். உனக்கு என்ன வேணும்?"

"தூக்குத்தண்டனைக் கைதியைப் பார்த்து, கடைசி ஆசை என்னவென்று கேப்பாங்களே? அது போல இருக்கு நீங்க பேசுறது" என்றான் ராம் சோகப் புன்னகையுடன்.

"இது விதி. மாத்த முடியாது. இருக்கப்போற இந்த கொஞ்ச நேரத்தில சந்தோசமா இருக்கணும்னு ஆசைப்படுற தானே?"

"எனக்கு எந்த ஆசையும் இல்லை. கடவுளே! என் வீடு வந்திடுச்சு நான் போறேன்" என்று கூறி இறங்கிச் சென்றான் ராம்.

அவன் செல்லும்போது, "நீ என்னைத் தேடி வருவாய்" என்று கூறிவிட்டு கடவுள் அங்கிருந்து சென்றார்.

ராம் வீட்டினுள் சென்றான். வீட்டினுள் சென்ற உடனே அபர்ணாவைக் கட்டிப்பிடித்து அழுதான்.

"அபர்ணா, இன்னைக்கு கடவுள் வந்தாரு தெரியுமா? உன்னால நம்ப முடியுதா? என்கிட்டே என்ன வேணும்னு கேட்டாரு. இதுக்கு மேல நமக்கு என்ன வேணும் சொல்லு. நான் பொறந்ததில இருந்து வேணும்னே கஷ்டப்பட வச்சிட்டு, இப்போ இரக்கப்படுற மாதிரி நடிக்குறாரு. கடவுள் ஒரு நல்ல நாடகக்காரன்" என்று கூறி அழுதான் ராம்.

அவனுக்குப் பயங்கரமாக இருமல் வந்தது. அதன் வெளிப்பாடாக அவன் வாயிலிருந்து வெளிவந்த ரத்தத் துளிகள் படுக்கையை நனைத்தது. கண்கள் இறுகி சிறிது நேரம் மயக்கமாய்க் கிடந்தான் ராம். மயக்கம் தெளிந்து கஷ்ட்டப்பட்டு எழும்பினான். அபர்ணாவை நோக்கினான். அவள் படுக்கையின் ஓரம் கிடந்தாள்.

"என்ன அபர்ணா? பேச மாட்டியா?" என்று கேட்டான்.

அபர்ணா ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பாவம்! தலையணை எப்படிப் பேசும்?

அப்பொழுது ஓர் ஆசை அவன் உள்ளத்தில் உதயமானது. அபர்ணா உண்மையிலேயே பேசினால் எப்படியிருக்கும் என்று எண்ணினான். அறையை விட்டு வேகமாய் வெளிவந்து, கடவுள் இருக்கிறாரா? என்று நோக்கினான். கடவுள் அங்கில்லை. எந்தப் பக்கம் சென்றிருப்பார்? என்று எண்ணி ஒரு திசையை நோக்கி ஓடினான். அவனால் ஓட முடியவில்லை. இருந்தும் ஓடினான்.

அப்பொழுது ஒரு குரல் அவன் காதுகளில் நுழைந்தது. அவனது ஓட்டம் தடைபட்டு நின்றது.

"நான் இங்கே இருக்கேன்" என்றார் கடவுள்.

ராம் திரும்பிப் பார்த்தான். கடவுள் காரின் மேல் உட்கார்ந்துகொண்டு சாக்லேட் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

"என்ன? வேகமா ஓடி வர? மூச்சு வாங்குமே. இந்தா தண்ணி குடி" என்று ராமிடம் ஒரு வாட்டர் பாட்டிலை நீட்டினார் கடவுள். அதைப் பெற்றுக்கொள்ளாமல் பேசினான் ராம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.