(Reading time: 14 - 28 minutes)

சமையலறையில் காஃபி தயாரித்துக்கொண்டே படுக்கையிலிருக்கும் அபர்ணாவின் காதுகளில் விழும்படி பேசலானான் ராம்.

"இன்னைக்கு சர்க்கஸ்ல ரொம்ப கூட்டம். சம்பளமும் அதிகமா கிடச்சுது. எல்லாத்தையும் அநாதை ஆஷ்ரமத்துக்கு குடுத்துட்டேன். அப்புறம் கையில கொஞ்சம் காசு இருந்துச்சு. அதில உனக்கு துணி வாங்கிட்டு வந்திருக்கேன். என்ன டிரஸ்னு கேக்க மாட்டியா? உனக்குப் பிடிச்ச பிங்க் கலர் டிரஸ் தான்"

ராம் தான் தயாரித்த காஃபியைக் குடித்தபடி, "இன்னும் என்ன தூக்கம்?" என்று கூறி போர்வையை விலக்கி அபர்ணாவைத் தூக்கினான். அவள் மிகவும் எடை குறைந்தவளாக இருந்தாள். மற்ற பெண்களின் மென்மையை விட அபர்ணா அதீத மென்மை பொருந்தியவளாக ராமின் கைகளில் தவழ்ந்தாள். 

"இந்த டிரஸ்ஸ போட்டுக்கோ அபர்ணா" என்று கூறி, அவனே அபர்ணாவுக்கு ஆடை மாற்றி விட்டான். (என்னடா இது? இவன் அநாதை தானே? இந்த பொண்ணு எப்படி வந்தான்னு குழம்பிட்டீங்களா?)

ராமின் கையிலிருந்தது உயிரற்ற தலையணை. அந்தத் தலையணைக்குத்தான் புதிய உறையைப் போட்டு அழகு பார்த்தான் ராம்.

இன்னும் உங்களுக்கு புரியலையா?...

அபர்ணா உயிருள்ள ஜீவனல்ல. இத்துணை நேரம் 'அபர்ணா' என்று அவன் அழைத்து, ஓர் உயிருள்ள ஜீவனிடம் பேசுவதைப்போல் பேசிக்கொண்டிருந்தது இந்தத் தலையணையிடம் தான். உயிரில்லா இந்தத் தலையணையைத் தான், தன் உயிராய் நினைத்து ராம் காதல் செய்கிறான்.

என்ன? ஆச்சர்யமா இருக்கா? இவனைப் பைத்தியம் என்று எண்ணுகிறீர்களா? இவன் பைத்தியம் என்றால் நாமும் ஒரு வகையில் பைத்தியக்காரர்களே...

மலை மீதிருந்து ஒரு கல்லை எடுத்து, அதைச் சிலையாய் வடித்து, கோவிலில் கடவுளாக வைத்து, பல கடவுள்களின் பெயர்களை அதற்குச் சூட்டி, அந்தக் கல்லுக்கு ஒரு சக்தி இருக்கிறதென்று நம்பி எங்கெங்கோ தொலைவில் இருந்தெல்லாம் வந்து அக்கல்லைத் தெய்வமென்று தரிசிக்கிறார்களே? அவர்களெல்லாம் அறிவாளி என்றால் இவனும் அறிவாளி தான். பாராங்கல் கடவுள் ஆகலாம்; தலையணை அபர்ணாவாக முடியாதா?

அவனைப் பொருத்தமட்டில் அபர்ணாவிற்கு உயிர் இருக்கிறது. தன் வாழ்வில் நடக்கும் அத்தனை விசயங்களையும் அபர்ணாவிடம் தான் சொல்வான். ஏனென்றால், அபர்ணா தான் அவனைப் பாவமாய்ப் பார்க்கமாட்டாள்; அனுதாபமாய்ப் பேசமாட்டாள். உலகத்திலேயே அவன் பேசுவதை மௌனமாகக் கேட்பது அபர்ணா ஒருத்தி தான். தன் மேல் அனுதாபப்படுபவர்களை வெறுக்கும் ராமின் மனதிற்கு ஆறுதலாக அமைந்தாள் அபர்ணா.

இப்போது அவன் அபர்ணாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான். நீங்க கேக்குறீங்களா? கேளுங்க...

"இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நாம வேற உலகத்துக்குப் போகப்போறோம். ரெடியா இரு. அங்க கண்டிப்பா நாம சந்தோசமா இருப்போம். நமக்குக் கண்டிப்பா சொர்க்கம் தான் கிடைக்கும். ஏன்னா, நாம நிறைய பேர சிரிக்க வச்சிருக்கோம். என்னடா, இன்னும் தூங்காம இருக்கேன்னு பாக்குறியா? இன்னும் கொஞ்ச நாள்ல தான் தூங்கப் போறேன்ல. அது வரைக்கும் முழிச்சிட்டு இருக்கேனே. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு. என்ன? நீயும் தூங்கலையா?"

அன்று இரவு முழுவதும் அவனும் அபர்ணாவும் பேசிக்கொண்டேயிருந்தார்கள்.

றுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லப் புறப்பட்டான் ராம்.

"டைம் ஆச்சு அபர்ணா. நான் போயிட்டு வரேன்".

அபர்ணா படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தாள். "நீ இரவு முழுக்க முழிச்சிட்டு இருந்ததால உனக்குத் தூக்கம் வருதுன்னு நினைக்கிறேன். நீ நல்லா தூங்கு" என்று தலையணையின் மேல் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு வெளியே சென்றான் ராம்.

அன்று அவன் ஷோ முடிய நெடுநேரமானது. அவன் வீடு செல்வதற்குப் பேருந்து கூட அன்று வரவில்லை. வேறு வழியில்லாததால் நடந்து சென்றான்.

அப்பொழுது ஒரு நாய்க்குட்டி சாலையின் குறுக்கே சென்றுகொண்டிருந்தது. அவன் நாய்க்குட்டியைப் பிடித்து, "இந்த சின்ன வயசிலேயே ரோடு கிராஸ் பண்ண பாக்குறியா?" என்று கூறி ஒரு ஓரமாக அதை விட்டுவிட்டு நடப்பதைத் தொடர்ந்தான்.

அப்பொழுது ஒரு கார் அவன் அருகில் வந்து நின்றது.

"லிப்ட் வேணுமா?" என்று காரில் இருந்தவர் ராமைப் பார்த்துக் கேட்டார்.

'என்ன அவனே வந்து லிப்ட் வேணுமான்னு கேக்குறான்? திருடனா இருப்பானோ?' என்று எண்ணினான் ராம்.

"வேணாம் சார். பக்கத்துல தான் வீடு இருக்கு. நான் நடந்தே போய்க்கிறேன்".

"அப்படிங்களா? சரி, வழியில ஒரு கம்பி இடிச்சி உங்க காலுல ரத்தம் வராம பாத்துக்கோங்க" என்று கூறிவிட்டுச் சென்றார் காரில் இருந்தவர்.

'இவன் ஏன் பைத்தியம் மாதிரி பேசிட்டுப் போறான்? எங்க கம்பி இருக்கு? எங்க ரத்தம்?' என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்துக்கொண்டே நடந்து செல்லும்போது வழியில் நீண்டிருந்த ஒரு கம்பியில் இடித்து அவன் காலில் ரத்தம் வழிந்தது. ராம் வலியால் துடித்தான். மீண்டும் அந்த கார் அவனருகில் வந்து நின்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.