(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 04 - சகி

Uyiril kalantha urave

ழ்ந்த உறக்கம் அவ்வளவு எளிதில் மனிதர்களுக்கு கிட்டிவிடுவதில்லை!!ஆனால்,என்றும் அல்லாமல் அன்று அதுபோன்ற ஆழ்ந்த நித்திரையில் தான் மூழ்கி இருந்தான் அசோக்.திடீரென ஏன் நித்திரையின் மீது இவ்வளவு மோகம் கொண்டானோ என்று அவனை எழுப்பிவிடும் கைப்பேசிக்கு புரியாத புதிராகவே இருந்தது.ஒருவேளை,அன்று ஞாயிறு என்பதால் இருக்கலாம்!!போர்வையை அவனும் விலக்கவில்லை!போர்வையும் அவனை விலகவில்லை!!நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தவனின் போர்வை மிக மென்மையான கரத்தினால் விலக்கப்பட,சிணுங்கியப்படி திரும்பிப் படுத்தான் அவன்.அதே மென்கரம் அவனது கேசத்தினை மெல்ல கோதிவிட்டது.அவன் செவிக்கருகே மிக மென்மையாக ஒலித்தது "அசோக்!"என்ற அவன் பெயர்!!இதழோரம் புன்முறுவல் பூக்க,விழி திறவாமல் உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.

அக்கரம் அவனது கன்னத்தைத் தீண்டி,அவனது குறுந்தாடியை மெல்ல பற்றி இழுக்க,சட்டென அக்கரத்தை மென்மையாக பற்றியவன்,வளை அணிந்த அக்கரத்தில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

"தம்பி!தம்பி!"-திடீரென மாணிக்கத்தின் கரகரப்பான குரல் ஒலிக்க,பதறிக் கொண்டு எழுந்தான் அவன்.

"என்னப்பா?என்னாச்சு?"-சில நொடிகள் திருதிருவென புரியாமல் விழித்தவன்,சுற்றும் முற்றும் பார்த்தான்.

"என்னப்பா?மணி பத்தாகுது!இன்னிக்கு ஏதோ ஆசிரமத்திற்கு போகணும்னு சொன்ன!மறந்துவிட்டாயா?"-அப்போது தான் நினைவு வந்தவனாய்,தலையசைத்தான்.

"குளித்துவிட்டு வா தம்பி!டிபன் எடுத்து வைக்கிறேன்!"

"ம்..."-இரு அடிகள் எடுத்து வைத்தவர்,எதனாலோ நின்றார்!!

"கனவு எதாவது கண்டியா?தூக்கத்தில் சிரித்துக்கிட்டு இருந்த?"

"சிரித்தேனா?"-அதிர்ச்சியாய் கேட்டான் அவன்.

"ம்...ரொம்ப நாள் கழித்து நீ சிரிப்பதை பார்க்கிறேன்!"என்று கூறி வெளியேறினார் அவர்.யார்??யார் காரணம்?அந்தச் சிரிப்பிற்கு பின்னால்??மென்மையாக வருடிய மங்கை யார்??ஒருவேளை,அப்பதிலை அவன் ஆழ்மனம் அறிந்திருக்கலாம்,அவள் யாரென்ற உண்மையை!!!

கரிஷி வித்யா மந்தர் ஆசிரமம்...!!(கற்பனை)

பலகாலங்களாக பிறப்பால் ஒடுக்கப்பட்ட குழந்தைச் செல்வங்களுக்காக தன்னலம் பாராமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்தபனம்!!மாதம் ஒருமுறை தவறாமல் அங்கு வருவது அசோக்கின் வழக்கம்!!அவன் தனிமையை போக்கும் வழியை கற்றுத்தேர்ந்தவர்கள் அச்செல்வங்கள்!!அங்கிருக்கும் ஏதேனும் ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என்பது அவன் எண்ணம்!அதற்கான சரியான காரணத்திறகாக காத்துக் கொண்டும் இருக்கிறான்.

"குழந்தைங்க எல்லாம் நீ ஏன் வரலைன்னு இரண்டு நாளா கேட்டுட்டு இருந்தாங்க தம்பி!"

"வர முடியாத சூழல் குருஜி!மண் சரிவு நடந்த இடத்துக்கு போய் வேலை சரியா நடக்குதான்னு பார்த்து,ரிப்போர்ட் அனுப்பணும்!அதான் குழந்தைங்களைப் பார்க்க வர முடியலை!"

"பரவாயில்லை தம்பி!ஒரு கலெக்டர் என்ற அதிகாரத்தை அப்பாற்பட்டு உனக்கு நல்ல மனசு இருக்கு!அந்த ஆண்டவன் உனக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டான்!நீ போய் பாருப்பா!"

"சரிங்க குருஜி!"-விடைப்பெற்று தனியே வந்தான் அசோக்.அவனைக் கண்ட மழலைகள் எல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர்.கோபமாக இருக்கிறார்களாம்!!!

"மகேஷ்...!"

".............."

"வினோத்!"

"..............."

"பவி??"

"..........."-எவரும் பதில் அளிப்பதாய் இல்லை.

"ம்....அப்போ!பேச மாட்டிங்க!"

"................"

"சரி...ஸாரி!இனிமே இந்தத் தப்பு நடக்காது!நான் வேணும்னா தோப்புக்கரணம் போடுறேன்!"-என்று தன் செவிகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட,உடனடியாய் சமாதானமடைந்தவர்கள் அவனை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டனர்.

"நீ ஏன் வரலை அசோக்?நாங்க உன்னை பார்க்காம எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா??"

"ஸாரிம்மா பாப்பா!இனிமே இந்தத் தப்பு நடக்காது!"

"ப்ராமிஸ்??"

"ப்ராமிஸ்!!"-என்று அக்குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான் அசோக்.அவனது எந்த ஒரு பலவீனமும் அக்குழந்தைகளின் முன்னிலையில் எடுப்படவில்லை என்பதற்கு அவன் முகம் ஏற்ற மலர்ச்சியே சாட்சியாக இருந்தது.எவ்வளவு நேரம் கடந்ததோ!!அதுக்குறித்து கவலைக்கொள்ளாமல் விளையாடி தீர்த்தான் அவன்.ஆனால் அவ்வளவு நேரமும் அவனை இரு விழிகள் இரசித்துக் கொண்டிருப்பதையோ அவன் அறியவில்லை!!எவ்வளவு நேரம் தப்பிக்கும்,அவ்விரு விழிகளும்!!அவனது கூர்மையான பார்வை ஒரு கட்டத்தில் அவ்விழிகளை சிறைப்பிடிக்க,சட்டென முகத்தினைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.