(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 08 - ஸ்ரீலக்ஷ்மி

SS

இருப்பதைக் கொண்டு இல்லாதவருக்கு கொடுப்போமாயின்..

இன்று மட்டுமல்ல என்றும் இல்லாமை என்பதே இருக்கா..!!

வாசல் பெல் அடிக்கும் சத்தத்தில் வெளியே வந்த சிங்காரவேலன், கொக்கியை நீக்கி கதவைத் திறந்தான்.

அங்கே மணிமேகலை.. கையில் சில புத்தகங்கள் மற்றும் ஒரு டிபன் டப்பாவுடனும் நின்றுகொண்டிருந்தாள்.

"வா மேகலை..", என்று அழைத்தவன் மென்னகை புரிந்தான்.. கிட்டதட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக இப்பொழுது டியூஷன் என்று படிக்க வருகிறாள் மணிமேகலை.. ஆனாலும் கூட டீச்சர் என்றால் ஒரு பயம் மரியாதை எல்லாமே அவளிடம் தூக்கலாகத்தான் இருக்கிறது.. ஆனால் இதுவும் ஒரு அழகு.. பெண்களின் நாணமும் அழகுதான்.. அதுவே ஒரு பெரிய அணிகலன் என்று நினைத்தவனால் அன்றும் வியக்காமல் இருக்க முடியவில்லை.. ரேணுகாவின் குணத்துக்கும் உருவத்துக்கும் சற்றும் பொருந்தவில்லை மணிமேகலை..

ரேணுகா அவ்வளவு பெரிய நிறமோ அழகிய உடல்வாகோ கொண்டவளில்லை.. நல்ல குண்டுதான்.. ஆனால் மணிமேகலையோ நல்ல பால் நிறத்தில் உயரமாய்க் கொடி போன்று இருந்தாள்.. இன்னமும் சொல்லப்போனால் தமயந்திக்கும் இவளுக்கும் தான் அம்மா பெண் என்று சொல்லும் படியாய் இருந்தது.. நிச்சயமாய் மணிமேகலை தன் பாட்டியின் சாயலிலும் தமயந்தி தன் அத்தையின் சாயலிலும் இருந்ததே அதற்குக் காரணம்..

மெல்ல மெல்ல தன்னுடைய இந்தப் பதவிசான குணத்தாலும் தோற்றத்தாலும் நிச்சயம் சிங்காரவேலனை சற்று ஈர்க்கத்தான் செய்தாள்.

அன்றும் அப்படித்தான்..

"சார்.. இது.. உங்களுக்குக் கொடுப்பதற்கு என்று ஸ்பெஷலாய் நானே செய்தேன்", என்று ராகி மாவில் சிறிது வெல்லம் போட்டு செய்த லட்டுவைக் கொடுத்தாள்.

டப்பாவில் சிறிய உருண்டைகளாக ஒரு பத்து லட்டுக்களைப் பார்த்தவனுக்கும் அதை உடனே சாப்பிட ஆவல் பெருகியது.. 'ரொம்ப நாளாச்சே.. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு.. எப்பவும் ஹாஸ்டல் இல்லாவிட்டால், தானே சமையல்.. நேரமின்மை காரணமாக ஏதாவது சுலப உணவாகத்தான் உண்பான்.. ஒரு சாதம் வடித்து... புளியோதரை மிக்ஸ், இல்லாவிட்டால் பருப்புப் பொடி, சலாட்.. என்று ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் தான் இருக்கும் அவன் உணவு முறை.

"தாங்க்ஸ்..", என்று சொல்லி சட்டென ஒரு லட்டை வாயில் போட்டவனின் நாக்கும் மனமும் இனித்தது.

"சூப்பரா இருக்கு மேகா.. ரொம்ப நல்லா செஞ்சிருக்கே..இது எதிலெ செஞ்சே?. ரொம்ப நாள் அப்புறம் ஒரு சத்தான ஸ்வீட்..", என்று சொன்னவனின் பார்வையில் மெழுகாய் உருகித்தான் போனாள் மணிமேகலை.

"ஓ.. சார்.. ப்ளெஷர் இஸ் மைன்.. இது ராகி அதான்.. கேழ்வரகு லட்டு எங்கம்மா என்னைச் சமையல் கட்டு பக்கமே விடமாட்டாங்க.. அவங்களும் சமையல்காரம்மாவுமே எல்லாம் செஞ்சிருவாங்க.. ஏதோ இன்னிக்கு ஜஸ்ட் ஒரு ட்ரையல் பார்த்தேன்..", என்று வெட்கினாள்.

"ஹேய் பொண்ணுங்க சமைக்கிறது என்ன பெரிய வித்தையா?.. ஈசியா செஞ்சுருவீங்களே.. அப்புறம் என்ன திடீர்னு இந்தச் சமையல் ஆசை.. கல்யாணம் கில்யாணம் கூடியிருக்கா.. படிப்பு இன்னும் முடியலையே உனக்கு..?" என்று கேட்டவனிடம்,

"இல்லை சார்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. ஜஸ்ட்.. சும்மாத்தான்.. எங்கம்மா சொல்லிகிட்டே தான் இருக்காங்க எனக்கு வரன் தேடச் சொல்லி.. ஆனால் கூட இப்போதைக்கு அது வேணாம்னுதான் நான் இருக்கேன்.. நான் இன்னமும் படிக்கணும்.. கொஞ்சம் எதாவது சாதிக்கணும் இருக்கேன்.. அதன் பின்னேதான் கல்யாணம்..", என்று மென்மையாய் சொன்னவளை பார்த்தவனுக்கு நிச்சயம் இவள் செய்யக்கூடியவள்தான் என்று தோன்றியது.

"சரிம்மா.. குட்.. இப்போ பாடத்தைப் பார்ப்போம்..", என்று அன்றைக்கு சொல்லித்தர வேண்டிய பாடங்களை பார்த்துவிட்டு ஆரம்பித்தான்..

அடுத்த ஒரு மணிநேரம் அவன் சொல்லித்தரும் அழகில் மெய்மறந்த மணிமேகலை கல்லூரிப் பாடத்தை படித்தாளா என்னமோ காமன் விடும் பானங்களை நன்கு தெள்ளத்தெளிவாக அறிந்து கொண்டாள்.

தன் மனம் தெள்ளத் தெளிவாக அவளுக்குப் புரிந்து போனது.. இவ்வளவு சீக்கிரம் ஒருவர் காதலில் விழ முடியுமா என்று முன்பெல்லாம் யோசித்தவள்.. அதற்கு ஒரு நொடி இருந்தால் கூட போதும் என்பது புரிந்தது.

இருந்தாலும் அவளுக்குத் தன் மனம் வீணாகக் கற்பனை செய்து கொள்கிறதோ.. அவன் பார்வைகளில் ஏதோ ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.. என்பது மட்டும் இப்போதைக்கு அவள் புரிந்துகொண்டாள்.. ஆனால் அது காதலா இல்லை இயல்பாய் ஒரு ஆணுக்குள் பெண்ணைப் பார்த்தாள் தோன்றும் இயற்கையான ஈர்ப்பா என அவளுக்கு தெளிவாக பகுத்தெறியப் பிடிக்காமல் தற்போதைய சூழ்நிலையை அனுபவிக்கலாம் என நினைத்தாள்.

காலம் கனிந்தால் அனைத்தும் தானே கைகூடும் என்று யோசித்தபடி தன்னை மறந்து ஆழ்ந்திருந்தாள் மணிமேகலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.